கோலிவுட்டின் சுச்சி லீக்ஸ் போல டோலிவுட்டில் பீதியைக் கிளப்பி வரும் ஸ்ரீ லீக்ஸ்!

பட வாய்ப்புகளுக்காக பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் கொடுமைகள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதற்காக என் உயிரைத் தரவும் நான் தயார். என்று இணையச் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் ஸ்ரீ
கோலிவுட்டின் சுச்சி லீக்ஸ் போல டோலிவுட்டில் பீதியைக் கிளப்பி வரும் ஸ்ரீ லீக்ஸ்!

பாடகியும், நடிகையுமான சுசித்ரா கடந்த வருடம் தனது ட்விட்டர் கணக்கில் திடீரென தமிழ்த்திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு மொத்தப் படவுலகையும் பீதியில் ஆழ்த்தினார். திரைப்பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக நடிகைகளில் சிலர் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களால் எவ்விதமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என அந்த ஆதாரங்களில் தெரியவந்தன. இதில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு விருப்பம் இருந்தோ, அல்லது பட வாய்ப்புகளுக்காக வற்புறுத்தப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டோ இத்தகைய அவலங்கள் கோலிவுட்டில் காலங்காலமாக அரங்கேறி வருவதாக சுச்சி லீக்ஸ் அம்பலப்படுத்தியது.

சுச்சி லீக்ஸ் மூலமாக மேலும் பல முன்னணி திரைப் பிரபலங்களின் கோரமான நிஜ முகம் துகிலுரியப்படும் முன் சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டுள்ளதாகவும் அம்மாதிரியான ஆபாச நிலைச்செய்திகளை தான் வெளியிடவில்லை என்றும் புதிதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். ஒருவழியாக சுச்சி லீக்ஸ் பீதி ஒழிந்தது என கோலிவுட் பிரபலங்கள் ஆசுவாசமடைந்தார்கள்.

இந்நிலையில் சுச்சி லீக்ஸுக்கு சற்றும் குறைவின்றி அதை விட அப்பட்டமான தன்மையுடன் முகநூலில் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி என்பவர் தற்போது ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் தெலுங்குத் திரைப்பட உலகில் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக நடிகைகள் எப்படியெல்லாம் திரையுலகின் அனைத்து மட்டத்திலும் உள்ள ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து தொடர்ந்து நிலைத்தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமல்ல ஸ்ரீ ரெட்டி தனது முகநூல் செய்திகள் குறித்து துணிந்து செய்தி ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார். ஸ்ரீ லீக்ஸ் என்றொரு விவகாரம் திடீரென எரிமலை போல வெடித்துக் கிளம்புவதற்கான முதல் காரணமாக அவர் முன் வைப்பது;

  • தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தங்களது மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்புத் தராமல் மும்பையிலிருந்து ஹீரோயின்களை இறக்குமதி செய்து அவர்களை ஊக்குவித்து தொடர்ந்து பட வாய்ப்புகளை வழங்குவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது தவறு, தெலுங்கு ஹீரோயின்கள் தோற்றப்பொலிவில் மும்பை ஹீரோயின்களை விட எந்த விதத்திலும் குறைவானவர்கள் இல்லை. பிறகு ஏன் தெலுங்கு ஹீரோயின்களுக்கு வாய்ப்புத் தருவதை இவர்கள் தவிர்க்கிறார்கள்? 
  • ஹீரோயினாக மட்டுமல்ல குணச்சித்திர வேடங்களிலோ அல்லது திரையில் ஐந்து நிமிடம் மட்டுமே வந்து போகும் காட்சியென்றாலும் கூட அந்த வாய்ப்பைப் பெறுவதற்காக இங்கே பெண்கள் எத்தனை துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்று தெரியுமா? முதலில் உடலைப் பேண வேண்டும். தினமும் 2 மணி நேரமாவது ஜிம்மில் தவம் கிடந்து வியர்வை சமுத்திரமாக வழிந்தோட கீழே, மேலே குதித்து விழுந்து புரண்டு உடற்பயிற்களைச் செய்ய வேண்டும். 
  • பட வாய்ப்புகளைப் பெற வசதியாக ஹைதராபாத்தின் பிரதானப் பகுதிகளில் வீடு எடுத்துத் தங்க வேண்டும், இங்கே வாடகை எவ்வளவு தெரியுமா? 
  • அது மட்டுமல்ல வீட்டை விட்டு வெளியில் செல்வதென்றாலே நடிகை என்பதால் ஒப்பனை இன்றி வெளியில் காலெடுத்து வைக்கவே முடியாது. அந்தச் செலவுகள் மாதாமாதம் கழுத்தை நெரிக்கும். இந்தச் செலவுகளை எல்லாம் ஈடு கட்ட வேண்டுமென்றால் எங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
  • அப்படியே வாய்ப்புகள் கிடைத்து பணம் ஈட்டினாலும் அந்தப் பணம் எங்களது பகட்டான லைஃப்ஸ்டலுக்கு ஈடு கட்டி வரக்கூடியதாக இருப்பதில்லை. பல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் அலுவலகங்களில் வாய்ப்புக் கேட்டுச் சென்றால் இங்கே வா, அங்கே வா என்று பல மணி நேரங்கள், பல நாட்கள் இழுத்தடித்து விட்டு நடிகைகளைப் பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டு கடைசியில் துண்டு துக்கடா வேடங்களை மட்டுமே அளித்து சமாளிக்கப் பார்க்கிறார்கள்.
  • இப்படி இருந்தால் நடிகையாக வேண்டும் என்று கனவுகளும் ஆசைகளும் கொண்டு புறப்பட்டு வரும் பெண்களின் கதி என்னவாகும்? 
  • பட வாய்ப்புகளும் கிடைக்காமல், வாழ்க்கைக்குத் தேவையான வருமானமும் இன்றி கடனாளியாகி கடும் மன உளைச்சலில் உழன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை தான் மிஞ்சுகிறது. 

- இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது என்பதால் திரையுலகம் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் நம்புவதைப் போல தேவலோகம் அல்ல இங்கே கசடுகளும், சகிக்க முடியாத அளவுக்கு நாற்றமெடுக்கும் குப்பைக்கூழங்களும் அதிகம் இருக்கின்றன எனத் தோலுரித்துக் காட்டுவதற்காகவே நான் இவற்றை மக்களோடு சமூக ஊடங்களில் பகிர்ந்தேன் என்கிறார்.

இவரது கோரிக்கைகளில் சிறந்ததெனக் குறிப்பிட வேண்டுமென்றால் ஒரு விஷயத்தைச் சொல்லலாம்.

பட வாய்ப்புகளுக்காக இளம்பெண்களை சந்திக்க வரச்சொல்லும் பட அதிபர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்டோர் அவர்களை ஹோட்டல், ரிஸார்ட், பண்ணை வீடுகள் என எங்கெங்கே ரகசியமாக இழுத்தடிக்காமல் ஹைதரபாத் திரைப்பட நகரில் இது போன்ற நேர்முகத் தேர்வுகளுக்கு என ஒரு தனி அலுவலகத்தைத் திறந்து அங்கே வரச்சொல்லி வெளிப்படையாக நேர்முகங்கள் நடத்தலாம். நடிகைகள் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்படும் வாய்ப்புகள் அதனால் குறையக்கூடும் என்கிறார்.

அதுமட்டுமல்ல; இம்மாதிரியான குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்கள் இருவருக்கும் விருப்பம் இருப்பின் அதைப் பற்றிப் பேச எதுவுமில்லை எனவும், விருப்பமில்லாத பெண்களை ஏமாற்றி மயக்க மருந்தோ, போதை மருந்தோ அளித்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுத்துவதும், அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை மிரட்டியே பலமுறை தங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதும் டோலிவுட்டில் சில பிரபலங்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது. இது முற்றிலும் தவறு. இப்படி மாட்டிக் கொள்ளும் பெண்களின் மனம் என்ன பாடுபடும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

எல்லாமும் எதற்காக? திரைப்பட வாய்ப்புகளுக்காகவும், மூன்று வேளை உணவுக்காகவும், பகட்டான வாழ்க்கைகாகவும் தானே? ஆனால், உள்ளே வந்த பிறகு தான் தெரிகிறது. இது அத்தனை எளிதாக வெற்றி பெற்று விடக்கூடிய துறை இல்லை என. ஆனாலும், என்ன செய்ய? எனக்குத் தெரிந்த வேலையென்றால் அது செய்தி வாசிப்பதும், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதும், நடிப்பதும் மட்டும் தான் எனும் போது நான் அந்தத் துறையில் தான் நீடிக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால் தான் அதற்குள் காலங்காலமாக பெண்களுக்கு அரங்கேறி வரும் கொடுமைகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தொடங்கி இருக்கிறேன்.

எனக்கு தைரியம் இருக்கிறது. இப்படி அப்பட்டமாக உண்மைகளைப் போட்டு உடைப்பதால் என் மேல் பல முன்னணி பிரபலங்கள் கொலை வெறியில் இருக்கிறார்கள். பலரால் மிரட்டப்படுகிறேன். அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. பட வாய்ப்புகளுக்காக பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் கொடுமைகள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதற்காக என் உயிரைத் தரவும் நான் தயார். என்று இணையச் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் ஸ்ரீ ரெட்டி.

இதில் உச்சகட்டமாக பல டோலிவுட் இயக்குனர்களும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும், நடிகைகளும், தொகுப்பாளினிகளும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை மறுத்து அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

ஸ்ரீரெட்டிக்கு பிரபல நடிகர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு எனவும், அவர்களுடன் நெருக்கமாக இருந்த போது அவற்றை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துக் கொண்டு இப்போது பணத்துக்காக அதைக் குறிப்பிட்டு மிரட்டி வருகிறார். எல்லாம் ஒரே நாளில் பிரபலமாகும் ஆசையிலும், மிரட்டலுக்கு அஞ்சி டோலிவுட் பிரபலங்கள் கொட்டி அளக்கப்போகும் கோடி கோடியான பணத்துக்காகவும் தான் என இணையத்தில் பலவிதமான செய்திகள் உலவினாலும் பொதுமக்களுக்கு தெரிய வந்த உண்மைகளில் ஒன்று திரைப்பட உலகின் பெயர்கள் வேண்டுமானால் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டவுட், ஹாலிவுட் என மாறலாமே தவிர எல்லா இடங்களிலும் திரை வாய்ப்புகளைப் பெற வேண்டி இளம்பெண்கள் கற்பனைக்கு எட்டாத அளவில் பாலியல் துஷ்பிரயோகக் கொடுமைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்பதே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com