என் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தினால் ஒன்றும் தேறாது: சத்யராஜ் பதில்!

தமிழர்களுக்குப் பிரச்னை என்றால் குரல் கொடுக்கத் தயங்கமாட்டேன். அப்பா வேடத்தில் நடிக்கும் ஒரு நடிகரைப் பார்த்து தமிழிசை பயப்பட வேண்டாம்... 
என் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தினால் ஒன்றும் தேறாது: சத்யராஜ் பதில்!

சென்னையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், செல்வமணி, வி.சேகர், நடிகர் சத்யராஜ் ஆகியோர் காவிரி விவகாரம் தொடர்பாகக் கூட்டாகப் பேட்டியளித்தார்கள். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பாரதிராஜா கூறினார். இதன்மூலமாகத் தமிழ்நாட்டைப் பாதிக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்போம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் கூறியதாவது.

தமிழர்களுக்குப் பிரச்னை என்றால் குரல் கொடுக்கத் தயங்கமாட்டேன். அப்பா வேடத்தில் நடிக்கும் ஒரு நடிகரைப் பார்த்து தமிழிசை பயப்பட வேண்டாம். என் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தினால் ஒன்றும் தேறாது. அரசியல் தொடர்பான எந்தக் கனவும் எனக்கும் இல்லை. தமிழர்கள் பிரச்னைக்கு நடிகர்களால் தீர்வு காணமுடியாது. நடிகர்கள் களத்தில் இறங்கி போராட முடியாது, அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். காவிரி விவகாரத்தில் யாரையும் மிரட்டவில்லை. இளைஞர்கள் எழுச்சி திசை திரும்பிவிடக் கூடாது என்பதற்காக ஐபிஎல் போட்டியை எதிரிக்கிறேன். காவிரி பிரச்னையைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியைத் தள்ளி வைக்க வேண்டும் என்றார்.  

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளில் அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ்த் திரை அமைப்புகள் ஒருங்கிணைந்து சென்னையில் நேற்று மௌனப் போராட்டத்தை நடத்தினார்கள். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நடைபெற்றது. 

கண்டன அறவழிப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்ட திரையுலகினரின் போராட்டம், திடீரென்று மௌன போராட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் திரை நட்சத்திரங்கள் யாரும் பேசவில்லை. இருந்தாலும், போராட்டத்தின் முடிவில் நடிகர் சத்யராஜை பேசுமாறு அங்கிருந்த ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதைத்தொடர்ந்து சத்யராஜ் பேசியது: யாரும் பேசாத போது, நான் மட்டும் பேசுவது சரியாக இருக்காது. நான் என்றுமே தமிழர்களின் பக்கமும், தமிழ் உணர்வுகளின் பக்கமும்தான். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. நடிகர் சங்கம் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டுள்ளேன். எந்த அரசாக இருந்தாலும் அஞ்ச மாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம். எந்த கெடுபிடிக்கும் அஞ்ச மாட்டோம். குரல் கொடுக்க தைரியம் உள்ளவர்கள், தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லாவிட்டால் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் என்று ஆவேசமாகப் பேசினார்.

சத்யராஜின் பேச்சுக்குப் பதில் அளிக்கும் விதமாக பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ராணுவத்திற்குப் பயப்படாதவர், ஐடி ரெய்டு வந்தால் எப்படிப் பயப்படுவார் என்பது தெரியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com