சான்ஸ் தருவதாகச் சொல்லி தங்களைச் சீரழித்த பிரபலங்களை நேரலையில் கிழி, கிழியென்று கிழித்துத் தோரணம் கட்டும் டோலிவுட் நடிகைகள்!

ராணாவின் சகோதரரும் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகனுமான அபிராமை அடுத்து சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 யின் இணை தயாரிப்பாளராக இருந்த வாகட அப்பாராவ் என்பவரது மேல் மிக அழுத்தமாக பாலியல் புகார்
சான்ஸ் தருவதாகச் சொல்லி தங்களைச் சீரழித்த பிரபலங்களை நேரலையில் கிழி, கிழியென்று கிழித்துத் தோரணம் கட்டும் டோலிவுட் நடிகைகள்!

டோலிவுட்டில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் எனப் பல பிரபலங்களுக்கு இப்போது ராகுகாலம். தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்பதைப் போல திரைப்பட வாய்ப்புக்காகத் தங்களை அணுகிய அப்பாவிப் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு கழட்டி விட்ட டாப் டைரக்டர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை இப்போது பீதியில் உறைந்து போய் கிடக்கிறார்கள். எப்போது? எந்தச் சூழலில் தங்களது பெயரும் சோசியல் மீடியாக்களிலும் தனியார் செய்தி ஊடகங்களின் நேரலை விவாதங்களிலும் நாறப் போகிறதோ என தவறு செய்தவர்கள் ஒவ்வொருவரும் இப்போது பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் அடிகோலியவர் ஒரு பெண். அவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து விட்டுப் பின் சில தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் திடீர் அதிர்வலைகளைக் கிளப்பி பரபரப்பாக சில நாட்கள் பேசப்பட்ட  சுச்சி லீக்ஸ் போல தெலுங்கில் ஸ்ரீ லீக்ஸும் கூட சில வாரங்களில் முடிவுக்கு வந்து விடும் என்றே அக்கட பூமியில் ஒரு கணிப்பு இருந்தது. ஆனால், அந்தக் கணிப்புக்கு அற்பாயுள் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை ஸ்ரீரெட்டி இதோ இந்த நிமிடம் வரை தனது போராட்டங்களில் இருந்து ஒரு அடி கூட பின்னெடுத்து வைத்தவரில்லை. அது மட்டுமல்ல, நாளுக்கு நாள் காஸ்டிங் கெளச் சென்று சொல்லப்படக் கூடிய திரைவாய்ப்புகளுக்காக பிரபலங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தப் படும் மிருகத்தனத்துக்கு பலியான தன்னையொத்த பெண்களை குறிப்பாக நடிகைகளைத் தேடிச் சென்று பேசி தன்னுடன் இணைத்துக் கொண்டு தனது போராட்டத்துக்கு வலு சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்.

டோலிவுட்டில் தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்புத் தராமல் பாலிவுட்டில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்வது தவறு. எங்களுக்குத்தான் முதலில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் அதைச் செய்யாமல் தெலுங்கு நடிகைகளை பாலியல் ரீதியாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு பிறகு வர்களுக்கு வாய்ப்புகள் எதுவும் தராமல் இழுத்தடித்து மிகுந்த மன உளைச்சலில் தள்ளி முடிவில் மரணத்துக்கே தள்ளி விடுகிறார்கள் இந்தக் கயவர்கள். இவர்களை அடக்க வேண்டும். இனியொரு நடிகைக்கு இப்படியான தொல்லை நேர்ந்து விடக்கூடாது. திரை வாய்ப்புகளுக்கு நடிகைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது திரைப்பட நகரில் இருக்கும் அலுவலகத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர தனியார் நட்சத்திர விடுதிகள் அல்லது பொழுதுபோக்கு ரிசார்ட்டுகளுக்கு வரச் சொல்லி நடிகைகள் வற்புறுத்தப் படக்கூடாது. நடிப்பது ஒரு தொழில் எனும் போது வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக எதற்காக நடிகைகள் தாங்கள் உடலை விற்க  நிர்பந்தப்படுத்தப் பட வேண்டும். இந்த முறை மிகவும் தவறானது. இது நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டிய கேடுகெட்ட பழக்கங்களில் ஒன்று. சமூக ஊடகங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் வழியாக பாதிக்கப்பட்டவர்களை, குற்றம் புரிந்துவர்களை அடையாளம் காட்டச் சொல்லி இந்த உலகின் முன் அந்தக் கேவலமான ஜென்மங்களை அடையாளம் காட்ட வேண்டும்’ என்பதே என் நோக்கம் என்கிறார் இந்தப் போராட்டத்தின் காரணமாகி விட்ட ஸ்ரீரெட்டி.

ஸ்ரீ லீக்ஸின் உச்சகட்டமாக டோலிவுட்டின் பாரம்பரிய தயாரிப்பாளர் குடும்பங்களில் ஒன்றான ராமாநாயுடு குடும்ப வாரிசின் மீது ஆதாரங்களுடன் பாலியல் குற்றம் சாட்டப்பட்டது. பாகுபலி புகழ் ராணாவின் இளைய சகோதரர் அபிராம் டகுபதி, தங்களது ஸ்டுடியோவுக்கு வாய்ப்புக் கேட்டு சென்ற தன்னிடம் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி தவறாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக ஸ்ரீரெட்டி புகைப்பட ஆதாரங்களுடன் புகார் கூறியிருக்கிறார். அபிராம் மட்டுமல்ல, அவரைப் போல பல பிரபலங்கள் டோலிவுட்டில் தவறானவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் திரையில் ஹீரோவாக நடிக்கையில் பெண்களைப் பாதுகாக்கிறவர்களாகவும், பெண்மையைப் போற்றுபவர்களாகவும் தோன்றி நடிக்கிறார்கள். அவர்களுக்கு அதிலெல்லாம் கூச்ச நாச்சமே இல்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில் பார்த்தீர்களென்றால் இதே பெரிய ஹீரோக்களின் கண் முன்னால் ஹீரோயின்கள் தயாரிப்பாளார்களாலும், இயக்குனர்களாலும், வினியோகஸ்தர்களாலும் சீரழிந்து கொண்டிருப்பதைக் கண்டாலும் தங்களுக்கும் அந்த விஷயங்களுக்கும் தொடர்பே இல்லாதது போல நகர்ந்து விடுவார்கள், இதற்குப் பெயர் தான் ஹீரோயிஸமா? இவர்களைத் தான் ரசிகர்கள் தெய்வமாக வணங்குகிறார்களா? நினைக்கவே அசிங்கமாக இருக்கிறது. சொல்லப்போனால் பல ஹீரோக்கள், தங்களுக்கு வேலையாக வேண்டும் என்பதற்காக தங்களுடன் நடிக்கும் நடிகைகளை அரசியல்வாதிகளிடம் இணக்கமாகப் போகச் சொல்லும் அளவுக்கு புரோக்கர்களாகக் கூட நடந்து கொள்கிறார்கள். நடிகைகள் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று தங்களது தொழிலில் ஸ்திரத்தன்மை அடையும் வரை இப்படித்தான் அசிங்கமாக அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை இனியும் சகித்துக் கொள்ள முடியாது. அதற்கொரு முடிவு வேண்டும். 

ஹாலிவுட்டில் திரைப்பட் வாய்ப்புக்களுக்காக தங்களைச் சீரழித்தவர்களையும் #metoo ஹேஷ்டேக் மூலமாக உலகுக்கு அடையாளம் காட்ட எந்த ஒரு பிரபல நடிகையும் தயங்கியதாகத் தெரியவில்லை. ஆனால், டோலிவுட்டில் நிலமை அப்படியில்லை. இப்போதும் கூட டாப் ஹீரோயின்கள் ஆரம்ப காலங்களில் தாங்கள் திரைப்பட வாய்ப்புகளைப் பெற பட்ட பாலியல் ரீதியிலான துயரங்களை எல்லாம் வெளியில் சொல்லி நீதி கேட்க விரும்பவில்லை என்பதோடு காஸ்டிங் கெளச் என்றொரு விஷயமே டோலிவுட்டில் கிடையாத் என்று கூட சாதிக்க முயல்கிறார்கள். இது மோசமான செயல். உண்மைகளை உரக்கச் சொல்லி நடிகைகள் போராட வேண்டிய நேரமிது. தங்களைப் பயன்படுத்திக் கொண்ட ஆண்களை சட்டையைப் பற்றி முறுக்கி நடு ரோட்டில் நிறுத்தி கேள்வி கேட்க வேண்டிய நேரமிது. இந்த வாய்ப்பையும் விட்டு விட்டால் பிறகு எப்போது அந்தக் கேடு கெட்டவர்களை நாம் கேள்வி கேட்பது? என்றெல்லாம் ஸ்ரீ ரெட்டி தனியார் செய்தி ஊடக விவாத நிகழ்ச்சிகளில் குமுறி வருகிறார்.

இந்தத் தொடர் போராட்டத்தின் உச்சமாக கடந்த வாரத்தில் ஒருநாள் திடீரென ஹைதராபாத் திரைப்பட நகரில் ஸ்ரீரெட்டி, தனது கோரிக்கைகளை டோலிவுட்டின் நடிகர் சங்கமான  ‘மா’ அமைப்பு ஏற்காவிட்டால் நிர்வாணப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து ஆடை களையும் போராட்டத்திலும் ஈடுபட்டார். அப்போது அவரைக் காவல்துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து மா அமைப்பு ஸ்ரீரெட்டியை திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்பவர்கள் மா அமைப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அவருடன் மா அமைப்பில் உள்ளவர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் நிபந்தனை விதித்திருந்தனர். அதற்கு டோலிவுட்டில் பலதரப்பினரிடையிலிருந்தும் பலத்த கண்டனம் எழவே தற்போது அந்த கட்டளை தளர்த்தப்பட்டிருப்பதாகத் தகவல்.

ஸ்ரீரெட்டியைத் தொடர்ந்து தற்போது டோலிவுட்டில் அர்ச்சனா, லதா மாதவி, அபூர்வா, எனப் பல நடிகைகளும் காஸ்டிங் கெளச் குறித்துப் பேச முன்வந்திருக்கிறார்கள்.

அவர்கள் திரைப்பிரபலங்கள் மீது முன் வைக்கும் பிரதானக் குற்றச்சாட்டு இது தான்;

ஒரு படத்தில் நன்றாக நடித்து தங்களது நடிப்புத் திறனை நிரூபித்து விட்ட நடிகைகளுக்கு கூட அடுத்தடுத்து திரை வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றால் அவர் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், ஃபைனான்ஸியர், உடன் நடிக்கும் ஆண் நடிகர்களில் சிலர் எனப் பலரது பாலியல் விருப்பங்களை பூர்த்தி செய்ய வற்புறுத்தப் படுகிறார். ஒருவேளை நடிகை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வழங்க மறுக்கிறார்கள். இப்படித்தான் பல அருமையான இளம் நடிகைகள டோலிவுட்டில் வாய்ப்புக் கிடைக்காமல் தவிக்க நேர்கிறது. இந்த நிலை மாற்றப்பட்டே ஆக வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் போராட்டம் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

ராணாவின் சகோதரரும் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகனுமான அபிராமை அடுத்து சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 யின் இணை தயாரிப்பாளராக இருந்த வாகட அப்பாராவ் என்பவரது மேல் மிக அழுத்தமாக பாலியல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது 60 வயதைக் கடந்தவரான இந்த அப்பா ராவுக்கு 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்றால் இஷ்டமாம். இந்த அவலத்தை எங்கே போய்ச் சொல்லி முட்டிக் கொள்ள? வாய்ப்புக் கேட்டு இவரை அணுகும் இளம்பெண்கள் ஒருவரைக் கூட இவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமல் விட்டதில்லை. ஒப்புக் கொள்ளாவிட்டால், அன்றைய பிரபல நடிகைகள் சிலரது பெயரைக் கூறி, அவர்களே இப்படி கமிட் செய்து கொண்டு தான் திரைப்படத்துறையில் பிரபல ஹீரோயின்களாக உயர்ந்தார்கள். நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்?! எங்களது விருப்பத்தை நிறைவேற்றினால் தான் உங்களுக்கு தொடர்ந்து  வாய்ப்பு என்று மிரட்டுவாராம். இதை பாதிக்கப்பட்ட துணை நடிகை ஒருவரே நேரலையில் வந்து நேருக்கு நேராக அப்பா ராவிடம் கேட்க. அவரோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசி அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். ஆனாலும் அவரால் பாதிக்கப்பட்ட நடிகைகள் ஒருவரா? இருவரா? எண்ணிக்கையிலடங்காதவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஒரு படையெனத் திரண்டு வந்து நேரலையில் கேள்வி கேட்டு அவரை மட்டுமல்ல, அவரை திரைத்துறையில் ஊக்குவித்து வரும் பிரபலங்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோரையும் நாக்கைப் பிடுங்குகிறார் போல் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

மெகா நடிகர்களே உங்களுக்கெல்லாம் தெரியாமலா இருக்கிறது இந்த அப்பா ராவ் போன்றவர்கள் செய்யும் நீசத்தனமான காரியங்கள். அதைக் கண்டும் காணாமல் இருந்து நீங்கள் டோலிவுட்டில் ரேப் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறீர்களா?’ என்று துணை நடிகைகள் கேள்வி கேட்கும் போது... ஒரு முழுமையான தீர்வு கிட்டாமல் இந்தப் போராட்டம் இப்போதைக்கு முடுவுறும் என்று தோன்றவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com