பொற்கணமாய்.. அற்புதமாய்..: டெலிஃபிலிமுடன் வருகிறார் பெண் இயக்குநர்!

அவரது குருநாதர் போலவே மிக அழகான தலைப்பைப் படத்துக்குச் சூட்டியிருக்கிறார் ஸ்வேதா...
பொற்கணமாய்.. அற்புதமாய்..: டெலிஃபிலிமுடன் வருகிறார் பெண் இயக்குநர்!

சினிமா எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்பதை அனைவரும் அறிவோம். இன்றைய காலகட்டத்தில், அதாவது டிஜிட்டல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வரும் நேரத்தில் படம் உருவாக்கப்படும் விதம் வேண்டுமானால் எளிமையாகி இருக்கலாம். ஆனால் அந்தத் துறையில் நிலைத்து நிற்க வேண்டுமானால் திறமையும், கடின உழைப்பும் நிச்சயம் அவசியம்.

திரையுலகில் நடிப்புத் துறையைப் பொறுத்தமட்டில் பெண்கள் எப்போதும் சாதித்து வந்திருக்கின்றனர். ஆனால், பல துறைகளை உள்ளடக்கிய சினிமாவில் நடிப்பைத் தவிர  பிற துறைகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே பெண் சாதனையாளர்கள் இருக்கிறார்கள். இயக்குநர்களாகப் பெண்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே. திரைப்படத் துறையில் சாதிக்கவேண்டும் என்பதை லட்சியமாகக் கொள்ளும் பெண்களை அவர்கள் வீட்டிலேயே முதலில் அனுமதிப்பதில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படத் துறையில் பெண் இயக்குநர்களின் வருகை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பூவரசன் பீப்பி, ராஜா மந்திரி ஆகிய படங்களை இயக்கி தமிழ்த் திரையுலகுக்கு நம்பிக்கை தந்த பெண் இயக்குநர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இறுதிச்சுற்று படம் மூலமாக ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தார் சுதா கொங்கரா.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த அஞ்சனா வெப்பம் படம் மூலம் அறிமுகம் ஆனார். அவரது பட்டறையிலிருந்து மற்றொரு நம்பிக்கை வரவு தமிழ் திரையுலகுக்குக் கிடைக்க இருக்கிறது. இன்னும் திரைக்கு வராமல் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவிட்டு, தனியாக டெலிஃபிலிம் ஒன்றை இயக்கி இருக்கிறார் ஸ்வேதா விஸ்வநாதன்.

அந்தப் படத்தின் பெயர், பொற்கணமாய் அற்புதமாய். அவரது குருநாதர் போலவே மிக அழகான தலைப்பைப் படத்துக்குச் சூட்டியிருக்கிறார் ஸ்வேதா.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் யூடியூபில் இந்தப் படத்தை நாம் கண்டு ரசிக்கலாம். இந்தப் படத்துக்கான போஸ்டரை சமூகவலைத்தளமான முகநூலில் பதிவு செய்திருந்தார் இயக்குநர் ஸ்வேதா.

நம்பிக்கை தரும் பெண் இயக்குநராக இருக்கப்போகும் அவரிடம் உரையாடியதிலிருந்து:

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஒரு தனியார் நிறுவனத்தில் ஹெச்ஆர்-ஆகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நிறைவான பணி. நல்ல சம்பளம் என்று  வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. ஆனாலும், இளமைக்காலம் முதலே எனக்கு சினிமா எடுக்க வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. எனவே, அந்தப் பணியை விட்டு விலகினேன். தெரிந்த நண்பர் ஒருவரின் மூலமாக நான் பார்த்து வியந்த கெளதம் மேனன் சாரிடமே உதவி இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தது.

இரண்டு படங்களில் பணியாற்றிப் பல விஷயங்களைக் கற்றறிந்தேன். ஓய்வு நேரத்தில் “பொற்கணமாய் அற்புதமாய்” இயக்கி வந்தேன். ஒரு கட்டத்தில் தனியாகப் படம் இயக்கலாம் என்கிற நம்பிக்கை கிடைத்தது. அதைத் தொடர்ந்து, இந்தப் படத்தை எடுத்து முடித்தேன்.

இயக்குநராக வேண்டும் என்று முடிவு செய்த உடன் பெற்றோர் முதலில் அனுமதிக்கவில்லை. எனது அண்ணன் எனக்கு ஆதரவாக இருந்தார். பின்னர், என்னுடைய லட்சியத்தைப் பெற்றோர் புரிந்துகொண்டு எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர் என்கிற ஸ்வேதா தனது டெலிஃபிலிம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

இந்தப் படத்தை குறும்படமாக எடுக்கலாம் என்று நினைத்தேன். பின்னர், ஸ்கிரிப்டில் எழுதியபடி முழுமையாக எடுத்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. விரைவில் யூடியூபில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இது எனக்கான அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் காதல் கதைதான். இளைஞர்கள் நிச்சயம் இப்படத்தை ரசிப்பார்கள். முழு நீளத் திரைப்படத்துக்காக சில கதைகளை எழுதி வைத்திருக்கிறேன் என்றார். 

தமிழ்த் திரையுலகம் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிற நிலையில் படமெடுத்து வெளியிடுவது சிரமமாகி வருகிறது. அதேநேரம், யூடியூபில் தொடர் கதைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு, “வெப் சீரிஸ் நல்ல விஷயம்தான். அங்கே, நாம் பல சோதனை முயற்சிகளைக் கதைகளில் கையாண்டு பார்க்கலாம். நெருக்கடிகள் அதிகம் அங்கே கிடையாது. அதேநேரம், வெப் சீரிஸுக்குக் கதை எழுதுவது என்னைப் பொறுத்தவரை சற்று கடினமான விஷயம் என்பதை மறுக்க முடியாது. இளம்படைப்பாளிகளுக்கு வெப் சீரிஸ் ஒரு நல்ல தளமாக இருக்கும்” என்று பதிலளித்தார் ஸ்வேதா.

டெலிஃபிலிம் தலைப்பே கவிதையாக இருக்கிறது. நிச்சயம் கதையும் கவிதை படிப்பதைப் போன்ற அற்புதமான உணர்வைத் தரும் என்று நம்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com