'நீண்ட நாளாகிவிட்டது, விரைவில் வேலைக்குத் திரும்ப ஆசைப்படுகிறேன்!' நடிகர் அரவிந்த் சாமி!

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல்
'நீண்ட நாளாகிவிட்டது, விரைவில் வேலைக்குத் திரும்ப ஆசைப்படுகிறேன்!' நடிகர் அரவிந்த் சாமி!

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால் மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டு, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றுள்ளனர்.  

மேலும் மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். அதேபோல தமிழ்நாட்டில்
திரைப்படப் படப்பிடிப்புகளும் எதுவும் தற்போது நடைபெறவில்லை.

எனினும் தமிழ்நாட்டில் ஹிந்தி, தெலுங்கு மொழிகளின் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக ஆலோசித்துதான் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தன. 

இந்நிலையில் இந்த தொடர் போராட்டம் தமிழ்ப் புத்தாண்டுக்குள் முடிவடைந்து நல்லதொரு மாற்றம் நிகழும் என எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை வேலை நிறுத்தம் குறித்த முடிவு தேதி எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், தென்னிந்திய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். 

இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த நீண்ட நாள் காத்திருப்பு அலுப்பாக உள்ளது. சீக்கிரம் வேலைக்கு திரும்ப வேண்டும். இந்த பிரச்னையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, எவ்விதமாக அதை நடத்திச் செல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சீக்கிரம் சுமுகமாக முடிந்து அனைவரும் நடிப்பை தொடர வேண்டும் என விரும்புகிறேன். ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். எனவே விரைவான தீர்மானங்கள் அவசியம்’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com