ஸ்ரீரெட்டி விவகாரத்தில் தன்னைச் சந்திக்கு இழுத்த சமூகப் போராளிக்கு நடிகை ஜீவிதா ராஜசேகரின் தடாலடி பதில்!

ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்துள்ள ஜீவிதா, இப்படி ஒரு அவதூறை தன் மேல் எழுப்பிய குற்றத்துக்காக சம்மந்தப்பட்ட சமூக ஆர்வலர் சந்தியா மீது ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி விவகாரத்தில் தன்னைச் சந்திக்கு இழுத்த சமூகப் போராளிக்கு நடிகை ஜீவிதா ராஜசேகரின் தடாலடி பதில்!

டோலிவுட்டில் தற்போது பற்றி எரியும் விஷயங்களில் ஒன்று நடிகை ஸ்ரீரெட்டி விவகாரம். சமீப காலங்களாக அவர் செய்து கொண்டிருப்பது மொத்த தெலுங்குத் திரையுலகினரையும் பெண் பித்தர்களெனக் குற்றம் சாட்டி மீடியா முன் நிற்க வைத்து நாளொரு பரபரப்புப் போராட்டம் பொழுதொரு பாலியல் அவதூறு குற்றச்சாட்டு என்று பகிரங்கமாக பல பிரபலஸ்தர்களின் தலைகளை உருட்டிக் கொண்டிருப்பது தான். அவரது வெளிப்படையான இந்தப் போராட்டத்துக்கு தெலுங்கு மகா டிவி மிகப்பெரிய ஆதரவளித்து பொதுவெளியில் வைத்ததோடு இந்தப் போராட்டத்தை சமூக ஊடகங்களிலும் கூட முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதில் ஸ்ரீரெட்டி தரப்பில் பேச பல தெலுங்கு விவாத ஊடகங்களிலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் போராளிகளான சஜிதா மற்றும் சந்தியா அழைக்கப்படுகின்றனர். இருவருமே பெண்கள். அதில் சந்தியா என்பவர் தொலைக்காட்சி ஊடக விவாதமொன்றில், நடிகை ஜீவிதாவைப் பற்றி அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். ஜீவிதா தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் கணிசமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவிதா வெறும் நடிகையாக மட்டும் தனது கலைப்பணியை குறுக்கிக் கொள்ளவில்லை. நடிகரும், படிப்பால் மருத்துவருமான ராஜசேகரை மணந்த பின் கணவருடன் இணைந்து திரைப்படங்களைத் தயாரிப்பதோடு ஒரு இயக்குனராகி சில திரைப்படங்களை இயக்கவும் செய்தவர். அவருக்கு இரு பெண்குழந்தைகள் உண்டு. தனது பெற்றோரைப் பின்பற்றி ஜீவிதா, ராஜசேகர் தம்பதியின் மூத்த மகளும் கூட தற்போது தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகத் தகவல். இந்நிலையில் மொத்தக் குடும்பமும் திரைத்துறையில் இயங்கிக் கொண்டிருக்க தன்னைப் பற்றி ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்த விவாதத்தில் மிகத் தரம் தாழ்ந்து விமர்சித்த சமூக ஆர்வலர் சந்தியாவுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ஜீவிதா செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி விளக்கம் அளித்தார்.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக சேவகி சந்தியா, ஜீவிதா குறித்து முன் வைத்த பகீர் குற்றச்சாட்டு... தன் கணவரும் நடிகருமான ராஜசேகருக்காக மகளிர் விடுதியில் தங்கியிருக்கும் இளம்பெண்களிடம் ஜீவிதா பாலியல் பேரம் பேசினார் என்பதே. அவர்களை அதிகப் பணம் தருவதாக ஆசை காட்டி தன் கணவருடன் தங்குமாறு தொலைபேசியில் வற்புறுத்துகிறார் ஜீவிதா என்பதான குற்றச்சாட்டு பல மாதங்களுக்கு முன்பே தங்களிடம் உதவி கேட்டு பிரச்னைகளைப் பகிர வந்த இளம்பெண் ஒருவர் கூறியதாக சந்தியா தெரிவித்திருந்தார்.

இதை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்துள்ள ஜீவிதா, இப்படி ஒரு அவதூறை தன் மேல் எழுப்பிய குற்றத்துக்காக சம்மந்தப்பட்ட சமூக ஆர்வலர் சந்தியா மீது ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது மட்டுமல்ல சந்தியா தன் மீது வைத்த குற்றச்சாட்டை மறுக்கும் விதமாகவும், சினிமா பிரபலங்கள் என்றால் என்ன விதமாக வேண்டுமானாலும் பேசலாம், அவர்கள் வெறும் கிள்ளுக் கீரைகள் எனும் ரீதியில் எதை வேண்டுமானாலும் பேசி விடுவதா? கையில் ஒரு மைக்கும், பேச வாய்ப்பளிக்க ஒரு சேனலும் கிடைத்து விட்டால் சந்தியா போன்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா? நான் இந்த சினிமாத்துறையில் 30 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பு நடிகையான ஒரு பெண் தனக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புத் தரவில்லை. தன்னை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள் என்று இன்று வந்து ஊடகங்களில் சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? அப்படியானால் வாய்ப்புக் கிடைத்திருந்தால் இவர் இந்தக் குற்றச்சாட்டை எல்லாம் முன் வைத்திருக்க மாட்டாரா? இதென்ன அக்கிரமமாக இருக்கிறது? ஒரு பெண்ணுக்கு தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரிந்தே ஏமாறுவாளா? அப்படி அவள் ஏமாற்றப்பட்டிருந்தால், ஏமாற்றிய நபரை எங்களைப் போன்றவர்கள் இயங்கும் சினிமா அமைப்புகளின் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள். நாங்கள் இரு தரப்பையும் விசாரித்து குற்றம் நிஜமென்றால் தவறு செய்தவர்களை செருப்பால் அடித்து நீதி வழங்குகிறோம். அதை விட்டு விட்டு யாரோ ஒரு சிலர் அப்படித் தவறானவர்களாக இருப்பதை வைத்துக் கொண்டு மொத்த திரைத்துறையினர் மீதும் சேற்றை அள்ளி வீசக் கூடாது. என்ன தெரியும் இவர்களுக்கு ஒரு சினிமா எடுப்பதில் இருக்கும் சிரமங்கள்.

ஒரு படத்தை தயாரித்து, இயக்கி ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் அதை தொகுத்து, விநியோகித்து தியேட்டரில் அதை வெளியிடுவது வரை எத்தனை எத்தனை சிரமங்களை நாங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது தெரியுமா? படம் வெற்றி பெற்றால் நிம்மதி. ஒருவேளை படம் தோல்வி அடைந்தால் படத்தை எடுத்தவர்கள் தங்களது சொத்துக்களை இழந்து நடுத்தெருவுக்கு வரவேண்டியதாகி விடுகிறது. அப்படி இருக்கும் போது யாரை நடிக்க வைத்தால் படம் வெற்றி பெறுமோ? அவர்களைத் தானே ஹீரோயினாகப் போட்டு படம் எடுக்க முடியும். அந்தப் பிரச்னை அப்படி இருக்க, ஸ்ரீரெட்டி திரைத்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என முன் வைக்கும் போராட்டத்தில் என்னைப் பற்றி அவதூறு குற்றச்சாட்டு எழுப்ப வேண்டிய அவசியமென்ன வந்தது? ஜீவிதா ராஜசேகரைப் பற்றி டோலிவுட்டில் எல்லோருக்கும் தெரியும். நான் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ வேறு நடத்துகிறேன். மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இப்படி ஒரு ஆதாரமில்லாத அவதூறு குற்றச்சாட்டை என் மீது வைத்தால். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாளை திருமணம் நடக்கும். அவர்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது. புகுந்த வீடு என்ற ஒன்று வரக்கூடும். அவர்களிடம் எல்லாம் நாங்கள் இதைப் பற்றி விளக்கம் அளித்துக் கொண்டு இருக்க வேண்டுமா? ஜீவிதா ராஜசேகரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எதற்காக என் மேல் இப்படி ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை வைத்தீர்கள். சரி குற்றம் சுமத்தினீர்கள் அல்லவா, அப்படியானால் அதை நிரூபியுங்கள். இல்லாவிட்டால் இதை நான் சும்மா விடுவதாக இல்லை. 

என் கணவரது குடும்பம் ஐஏஎஸ், ஐபிஎஸ் என மெத்தப் படித்தவர்களால் நிரம்பியது. அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாங்கள். எங்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பு அதற்கு ஆதாரம் உண்டா இல்லையா என்று கூட யோசிக்காமல்... சினிமாக்காரர்கள் தானே என்ன சொன்னாலும், எப்படிப் பட்ட குற்றம் சுமத்தினாலும் பேசாமல் வாய்மூடிக் கொண்டு இருப்பார்கள் எனச் சிலர் வெகு கீழ்த்தரமாக நினைக்கிறார்கள். அதற்கு அந்த குறிப்பிட்ட சேனலும் உடந்தை. நீங்கள் பாப்புலராக வேண்டுமென்றால் உங்கள் திறமையை நிரூபித்து முன்னேற வேண்டுமே தவிர பிரபலங்களின் மீது அவதூறுக் குற்றங்களை எழுப்பி அதில் குளிர்காய நினைக்கக் கூடாது.

ஸ்ரீ ரெட்டி விவகாரத்திற்கு வருகிறேன். அவருக்கு என்ன தான் வேண்டுமென்று தெரியவில்லை. உறுப்பினர் அடையாள அட்டை தரவில்லை என்று தான் போராட்டத்தை துவக்கினார். அதை உடனே அளித்து விட்டார்கள். திரைப்படங்களில் வாய்ப்புத் தரவில்லை, பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றுகிறார்கள் என்றார். அப்படிப்பட்டவர்களை எங்களைப் போன்ற சினிமா நடிகர்களின் பாதுகாப்பு அமைப்புகளின் முன் கொண்டு வாருங்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவை நாங்கள் அளிக்கிறோம் என்கிறேன். அதைச் செய்யாமல் சேனலில் போய் உட்கார்ந்து கொண்டு டாக் ஷோ போல தினமொருவரது தலையை உருட்டிக் கொண்டிருந்தால் எப்படி? அதிலும் கருப்பு ஆடுகள் சிலர் இருக்கலாம். அவர்கள் சினிமாத்துறையில் மட்டும் தான் இருக்கிறார்களா? வேறு எந்தத் துறையிலும் இல்லையா? அவர்களை அடையாளம் கண்டு பெண்களுக்கு தப்பிக்கத் தெரியாதா? தன்னை ஒருவர் தவறான முறையில் அணுகுகிறார். தன்னை மானபங்கம் செய்யப் பார்க்கிறார் என்று கொலையுண்ட சிறுமி ஆஷிபாவுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஸ்ரீரெட்டி போன்றவர்களுக்கும், அவருடன் சேர்ந்து கொண்டு இன்று சேனல், சேனலாகச் சென்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பி வரும் மற்ற நடிகைகளுக்கும் தெரியாதா? இவர்கள் எல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதே என்று ஒட்டுமொத்த டோலிவுட்டையும் பாலியல் அவதூறுச் சேற்றில் முக்கி எள்ளி நகையாடுவதைக் கண்டால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்குத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து மூத்த நடிகர், நடிகைகளோ அல்லது இயக்குனர்களோ ஏன் இன்னும் மறுப்புத் தெரிவிக்கவில்லை, கண்டணம் தெரிவிக்கவில்லை என. தயவு செய்து இம்மாதிரியான அவதூறுகளைப் பரப்புபவர்கள் குறித்து தங்களது கண்டனங்களை மொத்த டோலிவுட்டும் பதிவு செய்ய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்காகத் தான் முதல் கண்டனமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தி எனது குரலை நான் பதிவு செய்திருக்கிறேன்.

என்னைப் பல சேனல்களில் இது குறித்துப் பேச அழைத்தார்கள். ஆனால், அங்கே சென்று அவர்களது டிஆர்பி உயர நான் காரணமாக வேண்டாமே என்று தான் பிரத்யேகமாக நானே செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன். இன்றைக்கு என்னை தென் தமிழகத்தில் பலருக்கும் தெரிகிறது என்றால் நான் ஒரு நடிகை என்ற காரணத்தால் தான். அந்தப் புகழை எனக்கு ஈட்டித் தந்தது இந்தத் திரையுலகம் தான். அதற்கான நன்றியுடன் நான் இருக்க வேண்டும். திறமை இருப்பவர்களுக்கு இங்கே எப்போதும் வரவேற்பும், மரியாதையும் நிறையவே உண்டு. ஃபிடா என்று ஒரு படத்தில் நடித்தாரே சாய்பல்லவி அவர் புதுமுகம் தானே? அவருக்கு இன்றுள்ள வரவேற்பும், வாய்ப்புகளும் வெற்றி பெற்ற முதல்வரிசை ஹீரோயின்களை விட அதிகம். காரணம் அந்தப் பெண் தனது நடிப்புத் திறனை தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் மிக அருமையாக நிரூபித்திருக்கிறார். அவரை ஹீரோயினாக புக் செய்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள்,. நிலமை இப்படி இருக்க. இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒரு சார்பாக நம்பிக் கொண்டு திரைத்துறையே மொத்தமும் மோசம் என்று பொதுமக்கள் நினைத்து விடுகிறார்கள். இல்லை இங்கேயும் நல்லவர்கள் உண்டு என்று புரிய வைக்கவேண்டுமில்லையா? அதற்காகத் தான் இந்த செய்தியாளர் சந்திப்பு.

- எனத் தன் மீது பாலியல் அவதூறு  குற்றச்சாட்டை எழுப்பிய சமூக ஆர்வலர் சந்தியாவுக்கு மிகக் காட்டமாக பதில் அளித்துள்ளார் நடிகை ஜீவிதா ராஜசேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com