சென்னையில் ஐபிஎல் போட்டி வேண்டாம் என்று சொன்னவர்கள் கிரிக்கெட்டை விரும்பாதவர்கள் அல்லர்: இயக்குநர் சுசீந்திரன் விளக்கம்

தரமற்ற விமரிசனங்களைத் தவிர்ப்பது சமூகத்துக்கு நல்லது. இதுகுறித்துப் போராடியவர்கள் தரப்பில் சிறப்பாகவும் விரிவாகவும்...
சென்னையில் ஐபிஎல் போட்டி வேண்டாம் என்று சொன்னவர்கள் கிரிக்கெட்டை விரும்பாதவர்கள் அல்லர்: இயக்குநர் சுசீந்திரன் விளக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே சென்னைக்கு ஒதுக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டத்தை நடத்தக்கூடாது என பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் அதையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் ஆட்டம் நடைபெற்றது. எனினும் மைதானத்தின் உள்ளே காலணிகளை வீசியும், செல்லிடப்பேசிகளின் விளக்குகளை எரிய வைத்தும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்தின் உள்ளே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது பிசிசிஐக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக்கூடாது என்று திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்தார்கள். காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகம் கொந்தளிப்பில் இருக்கும்போது சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தினார். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் இணைந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை எனும் புதிய அமைப்பைத் தொடங்கினார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னையில் ஐபிஎல் ஆட்டம் நடைபெற்றபோது போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

இதையடுத்து, சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் ஆட்டங்கள் புணேவுக்குத் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டன. இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: சென்னையில் நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள் தற்போது புணேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் ஐபிஎல் போட்டி இனிமேலும் நடந்தால் அதற்குப் பாதுகாப்பு வழங்கமுடியாது என்று சென்னைக் காவல்துறை கூறியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதனால், ஏப்ரல் 20 அன்று சென்னையில் நடைபெறுவதாக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் புணேவில் நடைபெற்றது.

சென்னையில் ஐபிஎல் ஆட்டங்கள் புணேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது செம என்று தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தினார் இயக்குநர் சுசீந்திரன். இதைப் பலர் விமரிசனம் செய்தார்கள். இதையடுத்து, ஐபிஎல் இடம் மாறிவிட்டால், கருப்புக் கொடி காட்டிவிட்டால் தண்ணீர் கிடைத்துவிடுமா என்று கேட்கும் அறிவாளிகள் எல்லாம் மிஸ்டு கால் கொடுத்து நதிகளை இணைக்க முயற்சி செய்தவர்கள்தானே என்று பதிவு எழுதி வெளியிட்டார். 

இந்நிலையில் சமீபத்தில் தோனியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரை சென்னை ஐபிஎல் அணி வென்றது. அப்போது, தோனி செம என்று மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்தார் சுசீந்திரன். ஐபிஎல் வேண்டாம் என்று சொன்ன நீங்கள் ஐபிஎல் பார்த்து மகிழ்வது ஏன் என்று பலரும் அவரிடம் கேள்வியெழுப்பினார்கள். இந்நிலையில் தன் மீதான விமரிசனங்கள் குறித்து இயக்குநர் சுசீந்திரன் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தமிழகமெங்கும் வீரியமாகப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவேண்டாம் என்று போராடிய அனைவரும் கிரிக்கெட்டை விரும்பாதவர்கள் அல்ல. விளையாட்டை விளையாட்டாக மட்டுமே விரும்பி ரசிக்கும் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இதை ஏற்கமாட்டார்கள். தரமற்ற விமரிசனங்களைத் தவிர்ப்பது சமூகத்துக்கு நல்லது. இதுகுறித்துப் போராடியவர்கள் தரப்பில் சிறப்பாகவும் விரிவாகவும் விளக்கியிருக்கிறார்கள் என்று எழுதியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com