கருணாநிதி மறைவு எதிரொலி: திட்டமிட்டப்படி விஸ்வரூபம் 2 படம் வெளியாகுமா?

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் வெள்ளியன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
கருணாநிதி மறைவு எதிரொலி: திட்டமிட்டப்படி விஸ்வரூபம் 2 படம் வெளியாகுமா?

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் புதன்கிழமை மாலை வரை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி அண்ணாமலை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு எங்களது சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அனைத்து திரையரங்குகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை வரை அனைத்துக் காட்சிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் வெள்ளியன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதியின் மறைவையொட்டி படம் அதே நாளில் வெளியாகுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10-க்குப் பதிலாக ஆகஸ்ட் 15 அன்று வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இன்று வெளியான விளம்பரங்களில் ஆகஸ்ட் 10 அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டிக்கெட் முன்பதிவு இன்னமும் ஆரம்பமாகவில்லை. இதனால் எந்த நாளில் படம் வெளியாகும் என்கிற குழப்பம் நீடிக்கிறது. எனினும் நாளை வெளியாகவுள்ள பியார் பிரேமா காதல் படத்துக்கு இணையத்தளங்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் அந்தப் படத்தின் வெளியீடு திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிகிறது. 

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஸ்வரூபம் 2 படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com