நீங்கள் விரும்பிய அம்சங்கள் அனைத்தும் தொடரும்:  சத்யம் திரையரங்கம் விளக்கம்!

நீங்கள் விரும்பிய அம்சங்கள் அனைத்தும் தொடரும்:  சத்யம் திரையரங்கம் விளக்கம்!

நீங்கள் படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கி, நீங்கள் விரும்பியதைப் பாதுகாப்போம்...

பிவிஆர் திரையரங்கம் சென்னை சத்யம் திரையரங்கத்தின் 77.1 சதவிகிதப் பங்குகளை வாங்கவுள்ளது. இதையடுத்து சத்யம் சினிமாஸ் திரையரங்கம் விரைவில் பிவிஆர் நிறுவனத்துடன் இணையவுள்ளது. இதற்காக சத்யம் திரையரங்குக்கு ரூ. 850 கோடி கொடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சத்யம் சினிமாஸ் குறித்த இந்த அறிவிப்பு சென்னைத் திரைப்பட ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் தொடங்கப்பட்ட சத்யம் திரையரங்கம், சென்னையின் அடையாளங்களில் ஒன்று. சென்னையிலுள்ள சினிமா ரசிகர்கள் குறைந்தபட்சம் ஒரு படமாவது இங்கு வந்து பார்த்திருப்பார்கள். இத்திரையரங்கை மிகவும் உணர்வுபூர்வமாக எண்ணும் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும்விதமாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்த ஒருவருடத்தில் பி.வி.ஆர். நிறுவனத்துடன் சத்யம் திரையரங்குகள் இணைக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.  எனினும் சத்யம் சினிமாஸைச் சேர்ந்த கிரண் எம் ரெட்டியும் ஸ்வரூப் ரெட்டியும் சத்யம் சினிமாஸுடன் தொடர்ந்து இணைந்திருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பி.வி.ஆர். நிறுவனத்துக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் கூடுதல் அறிவிப்பாக வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் சத்யம் சினிமாஸின் தலைமைச் செயல் அதிகாரி கிரண் ரெட்டி இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இருபது வருடங்களுக்கு முன்பு, சத்யம் திரையரங்குகளான சத்யம், சாந்தம், சுபம் ஆகியவற்றை விரிவுபடுத்தும்போது ஒரு புதிய பயணத்துக்குத் தயாராகிறோம் என்று நாங்கள் அவ்வளவாக அறியவில்லை. 

அதற்குப் பிறகு அற்புதமான பயணம். பல சாதனைகளை அடைந்தோம். எல்லாவற்றிலும் எங்களுக்கு ஊக்கமாக இருந்தது உங்களுடைய ஆதரவுதான். கடந்த இருபது வருடங்களில் நாங்கள் சாதித்தவற்றுக்குக் காரணம், நீங்கள்தான். சத்யம் பிராண்ட் என்பது சென்னை மக்களுக்கு உரித்தானது. பாப்கார்ன், கோல்ட் காபி மீதான விருப்பங்கள், திரையரங்கு குறித்த குறைகளைத் தெரிவித்தது என சத்யம் சினிமாஸின் இன்றைய நிலைக்கு நீங்களே காரணம். இதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். 

தற்போது இன்னொரு கட்டத்துக்கு நகர்ந்துள்ளோம். பி.வி.ஆர். சினிமாஸுடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இதனால் எஸ்பிஐ நிறுவனத்துக்கு என்ன பயன் என்ன நீங்கள் எண்ணலாம். இது வணிக ரீதியான முடிவு மட்டுமல்ல. ஒரு பெரிய திட்டத்துடன் இது அமைந்துள்ளது. இரு வெற்றிகரமான பிராண்டுகளை இணைத்து அதன் பலங்களைக் கொண்டு படம் பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். 

இது புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது என நம்புகிறோம். சத்யம் சினிமாஸின் கலாசாரம் தொடர்ந்து இயங்கும். ஸ்வரூப்பும் நானும் இணைந்து நீங்கள் படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கி, நீங்கள் விரும்பியதைப் பாதுகாப்போம். உணவு முதற்கொண்டு தரத்திலான உறுதி வரை எல்லாமே தொடர்ந்து நீடிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com