அரசியலில் என்னுடன் நட்புகொள், இல்லையென்றால் எதிர்கொள்: நினைவேந்தலில் நடிகர் ரஜினிகாந்த்

சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  
அரசியலில் என்னுடன் நட்புகொள், இல்லையென்றால் எதிர்கொள்: நினைவேந்தலில் நடிகர் ரஜினிகாந்த்

சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் கருணாநிதி உருவ படத்துக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகை குஷ்பு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்கிரமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்தால், தமிழ் சினிமா 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருக்கும் எனறு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி பயன்படுத்திய பேனாவை காட்சிக்கு வைக்க வேண்டும். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசினார். 

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் மு.க.ஸ்டாலின் யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை. 45 வயதில் திமுக-வின் தலைவராகி பல சூழ்ச்சிகள், துரோகங்கள் என அனைத்தையும் தாண்டி 50 ஆண்டுகாலம் திமுக-வின் தலைவராக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இந்த 50 ஆண்டுகளில் என்னுடன் நட்புகொள், இல்லையென்றால் என்னை எதிர்கொள் என்னும் ரீதியில் இந்த அரசியல் சதுரங்கத்தில் அவரது பயணமாக இருந்தது. அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும்.

இலக்கியத்தில் அவரது சாதனைகள் சாதாரணமானது கிடையாது. பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவருக்கும் தமிழை கொண்டு சேர்த்தவர். எம்ஜிஆர் மற்றும் சிவாஜியை சூப்பர்ஸ்டார் ஆக்கியது கருணாநிதி தான். அவரின் மறைவுக்கு பின் நினைவுகளால் மூழ்க்கிப் போனேன்.

முதலில் அவரது மறைவுக்கு கூடிய மக்களைக் கண்டு கோபம் கொண்டேன். இத்தனை பெரிய மனிதருக்கு இவ்வளவு தான் கூட்டமா என்று கலங்கினேன். ஆனால் பின்பு மக்கள் அலை அலையாய் கூடிய போது அவரின் மேல் அனைவரும் மரியாதை வைத்திருந்ததை நினைத்து உருகினேன். ஒட்டுமொத்த இந்தியாவும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியது.   

ஆனால் இதில் ஒரு குறை உள்ளது. அகில இந்திய அளவில் பிரதமர், எதிர்கட்சித் தலைவர் என அனைவரும் வந்திருந்த போது, திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கின் போது ஏன் தமிழக முதல்வர் இல்லை? திமுக தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா?  ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் அங்கு கூடியிருக்க வேண்டும். மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்.

மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தியது என்னால் தாங்க முடியவில்லை. கருணாநிதியின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையட்டும் என்று பேசினார்.

நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடைபெற்ற இந்த நினைவேந்தலில் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com