1947-ல் இந்திய சுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்

1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி இந்தியா தன்னாட்சி அதிகாரம் பெற்ற முழு சுதந்திர நாடாக பிரகடணம் செய்யப்பட்டது. 
1947-ல் இந்திய சுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்

1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி இந்தியா தன்னாட்சி அதிகாரம் பெற்ற முழு சுதந்திர நாடாக பிரகடணம் செய்யப்பட்டது. அதுவரை ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறைக்கு கீழ் செயல்பட்ட இந்தியாவுக்கு அன்றைய தினம் சுதந்திரம் பெற்றது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, நாடு சுதந்திரம் பெற்றிருந்தாலும், காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது குறித்து தங்களது நிலைப்பாடுகளை தெரிவிக்காமல் இருந்து வந்தன. 

இந்நிலையில், உலகின் முக்கிய பத்திரிகைகள் அன்றைய தேதியில் (ஆகஸ்டு 15) இந்தியாவின் சுதந்திரம் குறித்து முதல் பக்கத்தில் தங்களது விமர்சனங்களை முன்வைத்திருந்தன. அவைகளில் பெரும்பாலும் இந்தியா சுதந்திரம் அடைந்த மிகழ்ச்சியான தருணத்தையும், அதற்காக சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களின் தியாகங்களை பட்டியலிடும் விதமாக அமைந்திருந்தன. மேலும், இந்திய அரசின் கீழ் செயல்படுவது குறித்து தங்களின் நிலைப்பாடுகளை தெரிவிக்காமல் இருந்த சமஸ்தானங்கள் தொடர்பாகவும் விமர்சித்திருந்தன.

1947-ல் ஆகஸ்டு 15-ஆம் தேதி வெளிவந்த உலக பத்திரிகைகளின் இந்திய சுதந்திரம் மீதான செய்திகளின் விவரம் பின்வருமாறு: 

தி நியூயார்க் டைம்ஸ்

உலக அரங்கில் வெளிப்பட்ட இரு இந்திய நாடுகள் (இந்தியா, பாகிஸ்தான்) என்ற தலைப்புடன் ஒன்றுபட்ட இந்திய வரைபடத்துடன் செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவும், பாகிஸ்தானும் நாடுகளாக உருவானாலும் போர் தொடருவதாக செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இந்தியாவுடன் இணையாமல் இருந்த சமஸ்தானங்கள் தொடர்பாகவும் அந்தப் படத்தில் சுட்டிக்காட்டியிருந்தது. அதில் காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் மாகாணங்கள் வேறு வண்ணத்தில் இருப்பது போன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

தி வாஷிங்டன் போஸ்ட்

இந்தியாவில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களை பட்டியலிட்ட வேளையில், அதற்காக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தது. மேலும் கோலாகலமாக இரு சுதந்திரங்கள் கொண்டாடப்பட்ட வேளையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதில் ஜவஹர்லால் நேருவின் சுதந்திரப் பேச்சையும் மையப்படுத்தியிருந்தது. பல கொடுமைகளுக்குப் பிறகும், மத்தியிலும் இந்தியாவின் இறையாண்மை சாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்திருந்தது.

தி சிகாகோ ட்ரிப்யூன்

ஹிந்து இந்தியா மற்றும் இஸ்லாமிய பாகிஸ்தான் உருவாகியுள்ளது என்று முதல் பக்கத்திலும், தனி இஸ்லாமிய நாடு அமைக்க வேண்டும் என்ற கனவில் ஜின்னா வென்றுவிட்டார் என்று இரண்டாம் பக்கத்திலும் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் பஞ்சாப்-இல் அதிகரித்த உயிரிழப்புகள் குறித்தும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் காந்தியின் பங்கு தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தது.

தி ஐரிஷ் டைம்ஸ்

பிரிட்டன் அதன் அதிகாரத்தை விட்டுக்கொடுத்ததால் இந்தியா கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கிழக்கில் இருந்து மிகப்பெரிய, வலிமையான, ஆரவாரத்துடன் கூடிய மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் அரங்கேறியுள்ளது என்று தெரிவித்திருந்தது.

தி டெய்லி டெலிகிராஃப்

முதல் பக்கத்தில் இந்தியாவின் சுதந்திரச் செய்தியை பிரசுரித்திருந்தது. அவற்றில் பெரும்பாலும் இந்திய மற்றும் பிரிட்டன் முக்கிய அரசியல் தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து தெரிவித்திருந்தது. மேலும் ஆங்கிலேயர்களை இந்தியர்கள் புகழ்ந்ததாகவும், பிரிட்டனின் மதிநுட்பம் என்னும் தலைப்புகளில் பிரிட்டனின் இந்த பிரதான பத்திரிகையின் முதல் பக்கத்தில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. 

இந்தியாவின் முன்னணி நாளிதழ்களான இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்டவை இந்திய சுதந்திரத்தை கொண்டாடும் விதமான செய்திகளை பிரசுரித்திருந்தன. அவற்றில் இந்தியாவுக்கு கிடைத்த சுதந்திரம் தொடர்பான கட்டுரைகளை பதிவிட்டிருந்தன. மேலும் ஜவஹர்லால் நேருவின் சுதந்திர உரைக்கு முக்கியத்துவம் அளித்திருந்தன. மேலும் பாகிஸ்தான் தனிநாடு தொடர்பான செய்திகளுக்கும் முன்னுரிமை அளித்திருந்தன. அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர்களுக்கும் ஜின்னாவுக்குமான தொடர்புகள் குறித்து விமர்சித்திருந்தன. மேலும் புதிதாக உருவான இந்த இரு நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பியிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com