மறக்குமா என்ன?

இடப் பெயர்வுதான் மனித குலத்தின் ஆதி துயரம். "அற்றைத் திங்கள் அவ்வென்னிலவில்
மறக்குமா என்ன?

'இடப் பெயர்வுதான் மனித குலத்தின் ஆதி துயரம். 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...' எனப் பாரி மகளிரின் சங்கப் பாடலிலேயே புலம் பெயர்வின் துயரம் வழிகிறது. புலம் பெயர்வு என்பது பேரனுபவம். மகத்தான தரிசனம். இருளும், வலியும் விசித்திரமான புதிர்களும் நிறைந்த புலப் பெயர்வை ஈழத் தமிழர்களைப் போல் நம்மால் உணர முடியாது.

எத்தனை தேசங்கள்... எத்தனை மனிதர்கள்... எத்தனை கதைகள்.. இருக்கின்றன. அங்கே இப்ப என்ன நேரம்.. என கிராமத்தை விட்டு மலேசியாவுக்கு பிழைக்க சென்ற நண்பன் கேட்கும் போது எப்படி இருக்கிறது நமக்கு. அந்த மனிதர்களிடம் மிச்சம் இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும், நம் மண்ணின் சொற்களும்தான். ஏதோ ஒரு நாளில் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் அல்லது துரத்தப்படும் கணங்கள் செத்துப் போகிற வரைக்கும் மறக்குமா என்ன....?' ஆழ்ந்து பேச தொடங்குகிறார் இயக்குநர் மங்களேஷ்வரன். இயக்குநர் பாரதிராஜாவிடம் 'கடல் பூக்கள்', 'ஈர நிலம்' படங்களில் பணியாற்றியவர். இப்போது 'மரகதக்காடு' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
 
இன்னும் கொஞ்சம் விரிவாக பேசலாமா...?

தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிப்போம் என்று நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. ஆனால், நாளை காற்றுக்கும் காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய நிலை வரும். நடப்பவற்றை பார்த்தால், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. காடுகளைப் பாதுகாப்போம் என்பதுதான் இதன் ஆதாரம். 70-களில் இந்தியா முழுமையும் 'சிக்கோ மூவ்மெண்ட்' என்று ஒரு முயற்சி நடந்தது. மலைவாழ் மக்களை காடுகளை விட்டு வெளியேற்றும் முயற்சி அது. பெண்கள் மரங்களை கட்டிப்பிடித்து வனங்களை விட்டு வெளியேற மறுத்த காட்சிகள் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன. அந்தப் போராட்டம் இந்தியா முழுமையும் பரவி நீண்டது. அப்போது நடந்த சம்பவங்களின் சிறு துளிதான் இது. இங்கே தமிழகத்தில் வாழுகிற பழங்குடி இன மக்களும், அங்கே கனிம வள ஆய்வுக்காக வருகிற ஒரு குழுவுக்குமான சம்பவங்களாக அதை தொகுத்து பின்னி வந்திருக்கிறேன். மீத்தேன் தொடங்கி இப்போது பரபரப்பாக பேசுகிற 8 வழி பசுமைவழிச்சாலை வரைக்குமான போராட்டங்களும், உணர்வுகளும் இதில் உண்டு. இயற்கைக்கும், அது தருகிற செல்வத்திற்கும் அங்கே இருக்கிற மக்கள் அமோகமாக இருக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன? இயற்கை அழிந்துகொண்டு இருக்கிறது. அதனால் இழப்பு, நமக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லையென்று யாருக்கும் தெரியவில்லை. மலை மக்களின் குரல் இதிலே பதிவாகியுள்ளது. சொல்லப் போனால் இதில் என் குரலும், உங்களின் குரலும் அடங்கியிருக்கிறது. எந்த விதத்திலும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் பிரதான பகுதி.

இந்த மாதிரி நிறைய முன் உதாரண கதைகள் இங்கே இருக்கே...?

உண்மைதான். எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. தஞ்சாவூர் பக்கம் தாத்தா விற்றுவிட்டுப் போன அந்த நிலத்தில் இப்போது ப்ளாட் போட்டு, கலர் கலராக பெயின்ட் அடித்து ரியல் எஸ்டேட் பலகைகள் நட்டிருக்கிறார்கள். அதை பார்க்கும் போதெல்லாம் பிணத்தின் மீது வைக்கப்பட்ட மலர் வளையம் மாதிரி இருக்கின்றன. அந்த மண்ணில் இருந்து இன்னும் ஆயிரமாயிரம் பேர் விவசாயத்தோடு போராட முடியாமல், நிலங்களை விட்டு விட்டு திருப்பூர் பனியன் கம்பெனிகளிலும் அரபு நாடுகளின் கொடும் வேலைகளிலும் உழல்கிறார்கள். யானை கட்டிப் போரடித்த, சோறுடைத்த சோழ வளநாடு, இன்று ஒரு வேளை சோற்றுக்கும் பணத்துக்கும் எங்கெங்கோ அலைகிறது. பருவம் தப்பிய மழை. எல்லாமும் மாறி விட்டது. ஆடி மாதக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். இப்போது மழைப் பொழிகிறது. இந்த மழை எதற்கும் பயன்படாது. இயற்கையின் சமநிலைக்கே எதிரான இயற்கையின் வியூகங்கள் வந்து விட்டன. இதையெல்லாம் ஆராய்ந்து கதை எழுதினேன். அங்கே ஒரு காதல், கலாசாரம், பண்பாடு என்று கதை தனக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டது.

வளர்ச்சியை முன்வைக்கும்போது சில சமரசங்கள் செய்ய வேண்டியுள்ளதே?

எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது. இதோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, எத்தனை தமிழ் கிராமங்களின் தூக்கத்தை தொலைத்திருக்கிறோம். பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும். தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்கு பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்று பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை விட்டு விடுங்கள் என்பதை தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்.

நடிகர்கள் தொடங்கி இசை, கேமிரா எல்லாமே சரி பங்கு இருக்க வேண்டுமே...?

எல்லாமே புதுமுகங்கள்தான். படத்தின் பட்ஜெட், கால அவகாசம் எல்லாவற்றுக்கும் அவர்கள்தான் சரி. அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன் என புதுமுகங்கள். "அறம்' ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் சரியான முத்திரை பதிக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். மலைவாழ் மக்கள் பலரும் நடிப்புக்கு துணை நின்று உதவியிருக்கிறார்கள். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவாளர். ஆர்வம் கொண்ட இளைஞர். எல்லா விகிதத்திலும் பணியாற்றி தந்திருக்கிறார். இசைக்கு ஜெய் பிரகாஷ் சாதிக்க துடிக்கிறவர். விவேகா , மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். படத்தொகுப்புக்கு சாபு ஜோசப், கலை இயக்குநராக மார்டின் டைட்டஸ் என நம்பகமானவர்கள். அதே விகிதத்தில் ஆக்ஷன், காமெடி என கமர்சியலுக்கு பஞ்சம் வைக்காது 'மரகதக்காடு'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com