செக்கச் சிவந்த வானம்: பாடல்களாக மாறியுள்ள வைரமுத்துவின் இரு கவிதைகள்!

செப்டம்பர் 5ஆம் நாள் பாடல் உங்கள் காதுகளுக்கு... அதற்கு முன்பாக கவிதை உங்கள் கண்களுக்கு...
செக்கச் சிவந்த வானம்: பாடல்களாக மாறியுள்ள வைரமுத்துவின் இரு கவிதைகள்!

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

இப்படத்தின் பாடல்கள் செப்டம்பர் 5 அன்று வெளியிடப்படுகின்றன. இதையொட்டி, இரு பாடல்கள் உருவான விதம் குறித்து ட்விட்டரில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளதாவது:

செக்கச் சிவந்த வானம் படத்தில் எனது ‘பெய்யெனப் பெய்யும் மழை’ கவிதைத் தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து ஏ.ஆர்.ரகுமானுக்குக் கொடுத்து இசையமைக்கச் செய்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

முதல் கவிதை ‘மழைக்குருவி’. இதோ! இணைய வானத்தில் பறக்கவிடுகிறேன்.

நீல மலைச்சாரல் – தென்றல் நெசவு நடத்துமிடம்
ஆல மரக்கிளைமேல் – மேகம் அடிக்கடி தங்குமிடம்

வானம் குனிவதையும் – மண்ணை வளைந்து தொடுவதையும்
காணும் பொழுதிலெல்லாம் – ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்

சிட்டுக் குருவியொன்று சிநேகப் பார்வை கொண்டு
வட்டப் பாறையின்மேல் – என்னை வாவென்றழைத்தது காண்

அலகை அசைத்தபடி – அது ஆகாயம் கொத்தியதே
உலகை உதறிவிட்டுச் – சற்றே உயரப் பறந்ததுவே

கீச்சுக் கீச்சென்றது – என்னைக் கிட்ட வாவென்றது
பேச்சு மொழியின்றியே – என்மேல் பிரியமா என்றது

வானம் தாழ்திறந்து – இந்த மண்ணில் வீழ்ந்ததென்ன
காணும் திசைகளெல்லாம் – மழையில் கரைந்து போனதென்ன

மின்னல் பறிக்குதென்று – சாரல் வீட்டில் தெறிக்குதென்று
ஜன்னல் அடைத்துவைத்தாள் – மனைவி தலையும் துவட்டிவிட்டாள்

பெய்யோ பெய்யென்று – மழை பெய்தால் என்ன செய்யும்
அய்யோ பாவமென்று – குருவி அழுவதை நினைத்திருந்தேன்

காட்டில் அந்நேரம் – நிகழ்ந்த கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டுக் – குருவி கும்மியடித்தது காண்

சொட்டும் மழைசிந்தும் – அந்த சுகத்தில் நனையாமல்
எட்டிப் போனவனை – அது எண்ணி அழுததுகாண்.

*
செக்கச் சிவந்த வானம் படத்திற்கு இயக்குநர் மணிரத்னம் எனது ‘பெய்யெனப் பெய்யும் மழை’ கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு காதல் கவிதையைத் தேர்ந்தெடுத்து ஏ.ஆர்.ரகுமானிடம் கொடுத்து இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 5ஆம் நாள் பாடல் உங்கள் காதுகளுக்கு... அதற்கு முன்பாக கவிதை உங்கள் கண்களுக்கு... இதோ! செக்கச்சிவந்த வானத்தின் இரண்டாம் கவிதை ‘மெய்ப்பொருள்’. 

கண்ணில் ஒருதுளிநீர்- மெள்ள மெள்ளக் கழன்று விழுந்ததிலே
விண்ணில் ஒரு விண்மீன் – சட்டென்று விசும்பி அழுததுபார்

உலகினை நாம் மறந்திருந்தோம் எதிர்காலம் கடந்திருந்தோம்

சங்கில் குதித்துவிட சமுத்திரம் தானே நினைத்ததுபோல்
அங்கம் நிறைந்துவிட - என் ஆவி துடித்தது காண் 
*
வண்ணங்கள் வானங்கள் நூறு கண்டேனே
கண்டங்கள் கடல் ஏழும் கண்டேனே – ஆனால்
கனவினில் மிதந்த படி - எந்தன் கண்களில் வருவதெல்லாம்
புன்னகை ராணி உந்தன் பூப்போட்ட மேலாடைதான் 
எப்போதோ பெய்த மழை ஈரம்
இப்போது கண்களில் வழிவதென்னவோ? 

வாழ்ந்த வாழ்வினுக்கும் – இனிமேல்
வாழும் நாட்களுக்கும்
ஆழ்ந்த பொருளென்ன - நம்
அணுக்கம் சொல்லியதே
*
தோற்றங்கள் உருவங்கள் மாறிடுமே
மாற்றங்கள் மறுபடியும் மாறிடுமே - ஆனால் 
சூரியன் உடையும் வரை – சந்திரன்
சில்லென்று சிதறும் வரை – நினைவுகள்
எம்மோடு வாழுமன்றோ? எஞ்ஞான்றும் தீராதன்றோ?

தேடிக் கிடைப்பதில்லை - என்று தெரிந்த ஒரு பொருளைத்
தேடிப் பார்ப்பதென்று – மெய்த் தேடல் தொடங்கியதே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com