நடிகை கரீனா கபூர் ஏன் கண் கலங்கினார்?

பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகையாக கரீனா கபூர் திகழ்ந்தாலும், அவரது தனி அடையாளம் இந்தியத் திரையுலகிற்கு மிகப் பெரிய பங்காற்றிய கபூர் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதுதான்
நடிகை கரீனா கபூர் ஏன் கண் கலங்கினார்?

எழுபது ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்கே ஸ்டூடியோ அந்நாளைய பாலிவுட் சினிமாவின் முகவரியாக இருந்தது. நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ் கபூரால் 1948-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த ஸ்டூடியோ.  மும்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.

ஹிந்தியில் வெற்றிகரமாக ஓடி, பெரும் வசூல் சாதனைகள் நிகழ்த்திய பாபி, சத்யம் சிவம் சுந்தரம், ராம் தேரி கங்கா மெய்லி, மேரே நாம் ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களின் ஷூட்டிங் இங்குதான் நடந்தது. கபூர் குடும்பம் தங்களுக்குச் சொந்தமான இந்த ஸ்டூடியோவை விற்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

ஆர்கே ஸ்டூடியோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதை புனரமைத்து மீண்டும் நவீன ஸ்டூடியோவாக மாற்ற கோடிக்கணக்கில் செலவாகும் என்ற நிலையில் அதனை விற்று விட கபூர் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆர்கே ஸ்டூடியோ விற்பனைக்கு வருவதாக அறிவித்தார் ரிஷி கபூர்.

இது குறித்து ரிஷி கபூர் கூறுகையில், அடுத்த தலைமுறையினர் ஸ்டூடியோவை நடத்த முடியுமா என்ரு தெரியாது. தனது மகன் ரன்பீர் கபூர் தனது நடிப்பில் பிஸியாக இருப்பதாலும், மூத்தவர்களால் ஸ்டூடியோவை கவனித்துக் கொள்ள இயலாத நிலை இருப்பதால் ஆர்கே ஸ்டூடியோவை விற்க முடிவு செய்துவிட்டதாகக் கூறினார்.

லாக்மே ஃபாஷன் வீக்கில் பரபரப்பாக இருந்த கரீனா கபூர், தனது குடும்பத்தினருக்கு சொந்தமான ஸ்டூடியோ விற்கப்படப் போகும் செய்தியை அறிந்து கண் கலங்கியுள்ளார். கரீனா கபூர் ராஜ்கபூரின் பேத்தியும் நடிகர் ரிஷிகபூரின் உடன்பிறந்த சகோதரரான ரந்தீர் கபூரின் மகள் ஆவார். பிரபல ஹிந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியருக்கு தைமூர் கான் என்ற மகன் உள்ளான். பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகையாக கரீனா கபூர் திகழ்ந்தாலும், அவரது தனி அடையாளம் இந்தியத் திரையுலகிற்கு மிகப் பெரிய பங்காற்றிய கபூர் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதும்தான். கரீனா தான் ராஜ் கபூர் குடும்பத்தின் வம்சாவளியினர் என்பதில் பெருமிதம் கொள்பவர்.

ஆர்.கே. ஸ்டூடியோ விற்கப்படுவதைக் குறித்த் கரீனா கபூர் கூறுகையில், ‘அங்கே என்ன நடக்கிறது ஏனிந்த திடீர் முடிவு என்று எனக்குத் தெரியாது. அப்பாவை பார்த்து நாலைந்து நாட்கள் இருக்கும்....ஆர்கே ஸ்டூடியோ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு இடம். இங்கு நான் சிறுமியாக விளையாடிய நினைவுகள் இன்னும் மனதில் நிறைந்திருக்கிறது. ஸ்டூடியோவை விற்க முடிவு செய்தது வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் இது எனது குடும்பத்தினரின் முடிவு, அப்பா, சித்தப்பாவின் முடிவும் கூட என்பதால் என்னால் எதுவும் கூற முடியவில்லை’ என்று நெகிழ்ச்சியாக கூறினார் கரீனா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com