விஜய் டிவியின் முயற்சிக்கு வெற்றி: பாலாஜியுடன் இணைந்து வாழ நித்யா சம்மதம்!

நீ இல்லாமல் எங்கள் இருவருக்கும் கஷ்டமாகத்தான் உள்ளது. எங்களுக்கு ஏற்றாற்போல நீ மாறியாகவேண்டும்...
விஜய் டிவியின் முயற்சிக்கு வெற்றி: பாலாஜியுடன் இணைந்து வாழ நித்யா சம்மதம்!

நடிகர் பாலாஜியின் குணத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அவருடன் இணைந்து வாழத் தயார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யா கூறியுள்ளார்.

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி (44), தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவருடைய மனைவி நித்யா (31). 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். போஷிகா என்கிற 7 வயது பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் கடந்த வருட மே மாதத்தில் நித்யா, பாலாஜி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் கணவர் தனது ஜாதியைச் சொல்லித் திட்டுவதாகவும் கொடுமைப்படுத்துவதாகத் தனது புகார் மனுவில் குறிப்பிட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் நித்யா. 

இந்நிலையில் பாலாஜி, நித்யா ஆகிய இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். பாலாஜியும் நித்யாவும் ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்று போட்டியாளர்கள் இருவருக்கும் ஆலோசனை அளித்துள்ளார்கள். பல நாள்களில் இப்பிரச்னை குறித்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. சிலவாரங்களுக்கு முன்பு நித்யா, இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 

இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினர், பிக் பாஸ் இல்லத்துக்குள் வருகை தரும் காட்சிகள் ஒளிபரப்பாகின. பாலாஜியைக் காண நித்யாவும் போஷிகாவும் பிக் பாஸ் இல்லத்துக்கு வருகை தந்த காட்சிகள் நேற்று ஒளிபரப்பாகின. அப்போது பாலாஜியுடன் இணைந்து வாழ விரும்புவதாக நித்யா தெரிவித்தார். அவர் பாலாஜியிடம் தனிப்பட்டமுறையில் கூறியதாவது:

பாப்பாவை உன்னிடம் தரமாட்டேன் என நான் சொல்லியதில்லை. நீ எங்களுக்கு ஏற்ற மாதிரி மாறி வந்தால் நாங்களும் உன்னை ஏற்றுகொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இதை முடிவு செய்வதற்கான களமல்ல. வெளியே நீ வந்து நிஜமாகவே மாறியிருந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். நீ இல்லாமல் எங்கள் இருவருக்கும் கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் நீ எங்களுக்கு அளித்த கஷ்டத்தை விடவும் இது பெரிதல்ல. நீ மாறிவிட்டாய் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் நீ இன்னும் மாறவேண்டும் என நினைக்கிறேன். 

நீயும் மாறிவிட்டதாகப் பலமுறை என்னிடம் சத்தியம் செய்துள்ளாய். நானும் அதை நம்பி உன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். உனக்கும் எனக்கும் தெரியும் நமக்குள் என்ன நடந்தது என்று. இந்த முறை மாற்றம் ஒரிஜினலாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன். இதற்கு முன்பு பலமுறை நம்பி ஏமாந்துள்ளேன். நேற்று நீ அழுததை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்களில் நீ அழுததை இப்போதுதான் பார்க்கிறேன். உன்னைக் காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும். எங்களுக்கு ஏற்றாற்போல நீ மாறியாகவேண்டும் என்று அழுதபடி கூறினார். அதற்கு பாலாஜி, குழந்தையின் முன்பு ஏன் அழுகிறாய் என்று சமாதானம் செய்தார்.

பிறகு போட்டியாளர்களைச் சந்தித்தார் நித்யா. அனைவரும் அவரிடம், பாலாஜி மிகவும் மாறிவிட்டதாகக் கூறினார்கள்.

இதையடுத்து விவகாரத்து வரை சென்ற பாலாஜி - நித்யா குடும்பப் பிரச்னை விரைவில் சுமூக நிலையை அடையும் எனத் தெரிகிறது. இருவரையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதன் மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்க விஜய் தொலைக்காட்சி முயல்வதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் கருதினார்கள். கமலும் பலமுறை பாலாஜிக்கு இதுதொடர்பாக அறிவுரை கூறினார். இறுதியில் பலருடைய முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளதாகவே அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com