நடிப்பதை விட்டாலும் இந்தத் தொழில்கள் இவர்களுக்கு கைகொடுக்கும்! பிஸினெஸில் இறங்கிய நடிகர்கள்!

நீங்கள் நடிக்க வராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று சில நடிகைகளிடம் கேட்கப்படும்போது
நடிப்பதை விட்டாலும் இந்தத் தொழில்கள் இவர்களுக்கு கைகொடுக்கும்! பிஸினெஸில் இறங்கிய நடிகர்கள்!

நீங்கள் நடிக்க வராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று சில நடிகைகளிடம் கேட்கப்படும்போது, அவர்களின் கனவு வேலை அல்லது படிப்பைப் பற்றிச் சொல்வார்கள். இப்போது ஆசைப்பட்ட விஷயங்களை ஈடேற்றிக் கொள்ள நடிப்பை ஒரு கருவியாகவும் அல்லது நடிக்கும் போதே வேறு சில தொழில்களில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர் சில நடிகர்கள். அவர்களுள் வெற்றிகரமாக இரண்டையும் பேலன்ஸ் செய்பவர்கள் மிகச் சிலரே. அவர்கள் யாரென்று பார்க்கலாம்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிக்க வருவதற்கு முன்பு கூத்துப்பட்டறையில் கணக்கராகவும் அதன் பின் அங்கு நடிகராகவும் இருந்தவர். ஜவுளி வியாபாரத்தில் ஆர்வமுடைய இவர் தன் சகோதரி ஜெயஸ்ரீக்காக தாம்பரம் அருகிலுள்ள செம்பாக்கத்தில் துணிக்கடை ஒன்றை தொடங்கினார். இந்தக் கடையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகள் விற்பனை செய்யப்படும் இந்தக் கடையின் பெயர்‘இறைவி’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா

உள்ளம் கேட்குதே என்ற திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆர்யா. நடிப்பதைத் தவிர சில படங்களையும் தயாரித்தும் வருகிறார். அவரது தம்பி சத்யா நடித்துள்ள அமரகாவியம் படத்தை தயாரித்துள்ளார். எழுத்தாளர் சுகா இயக்கிய படித்துறை என்ற படத்தையும் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுடன் இணைந்து திரைப்படம் எடுக்கத் தேவையான தொழில்நுட்ப கருவிகளை வாடகைக்கு விடுகிறாராம்.

மேலும் சென்னை கிரீம்ஸ் சாலை மற்றும் அண்ணா நகர் ரவுண்டானாவில் இரண்டு அசைவ உணவகங்களை நடத்தி வருகிறார் ஆர்யா. இந்த ரெஸ்டாரண்டின் பெயர் ஸீ ஷெல்ஸ். அரேபியன் டிலைட் வகை உணவுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இதற்கென பிரத்யேகமாக அரபு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட சமையல்காரர்கள் அங்கு பணிபுரிகிறார்கள். சென்னையில் வேறு எங்கும் கிடைக்காத பல வகையான அசைவ உணவுகள் ஆர்யாவின் உணவுக் கடையில் கிடைப்பதால் வியாபாரம் சூடாகவே நடந்து கொண்டிருக்கிறது.

ஆர்யாவைப் போல நடிகர் சூரியும் மதுரையில் ஒரு உயர்தர சைவ உணவகத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார். ஜீவாவும் ஒரு ஹோட்டல் வைத்துள்ளார். 

தமன்னா

தமிழ்ப் பட வாய்ப்புகளில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் இருந்த தமன்னா, ஒயிட் & கோல்ட் (White & Gold) எனும் நகைக்கடையை இணையத்தில் ஆரம்பித்தார். இதில் ஜுவல்லரி டிசைன் செய்வதும் அவரேதான். ஒரு பேட்டியில் அவர் கூறியது, 'நான் எதைச் செய்தாலும் இதயத்தில் இருந்து செய்வேன். அதுவே நம்மையும் நம்ம வேலையையும் அழகாக்கும். மனசு சந்தோஷமாக இருக்கும்போது செய்யும் வேலைகளில் அது பிரதிபலிக்கும். இந்த நகைக்கடை என் கனவு, எது செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என நினைப்பேன்’ என்று கூறி முடித்தார். அண்மையில் சில தமிழ் படங்களில் நடித்து மீண்டும் கவனம் பெற்றுள்ளார் தமன்னா.

தமன்னாவைப் போலவே காஜல் அகர்வால் ’மார்சலா ஜுவல்லரி’ என்ற நகைக்கடையை நடத்தி வருகிறார். தாப்ஸி, 'தி வெண்டிங் ஃபேக்டரி' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஸ்ருதிஹாசன் 'ISIDRO' என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறார். நடிகை ஸ்ரேயா அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com