'பேட்மேன் சேலன்ஞ்ச்' எடுக்க நீங்கள் தயாரா? நிஜ பேட்மேன் முருகானந்தம் விடுத்த சவால் என்ன?

சானிடரி நாப்கின்கள் குறித்து சமூகத்தில் இன்னும் பலருக்கு ஆசூசை உணர்வு உள்ளது
'பேட்மேன் சேலன்ஞ்ச்' எடுக்க நீங்கள் தயாரா? நிஜ பேட்மேன் முருகானந்தம் விடுத்த சவால் என்ன?

கூகிளில் முருகானந்தம் என்று தேடினால் நாப்கின் என்ற அடைமொழியுடன் அவரைப் பற்றிய தகவல்கள் ஆயிரமாயிரமாகக் கிடைக்கும். நாப்கின் என்ற அடைமொழி அந்தளவுக்கு அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றது. பால்கி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பேட்மேன் (Pad Man) பிப்ரவரி 9-ம் தேதி திரையில் வெளிவர உள்ளது. பேட்மேன் திரைப்படம், டுவிங்கிள் கண்ணா எழுதிய 'த லெஜன்ட் ஆஃப் லட்சுமி பிரசாத்' என்ற புத்தகத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். இது அருணாச்சல முருகானந்தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம்.

அவரது சொந்த ஊரான பாப்பநாயக்கன்புதூரைத் தாண்டி, கோவை, தமிழ்நாடு, இந்தியா, ஏன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தெரிந்த ஒரு பெயர் முருகானந்தம்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க்கு, சுகாதார முறையில் பயன்படுத்தக் கூடிய சானிட்டரி நாப்கின்களை மிகக் குறைந்த விலைக்குத் தரமாக தயாரித்து மிகக் குறைந்த லாபத்துக்கு விற்பனை செய்கிறார். காரணம் ஏழை எளிய பெண்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் இதன் விலை இருப்பது அவசியம் என்ற சமூக நோக்கில் செயல்படுபவர் முருகானந்தம். தன் மனைவி சாந்தாவின் பிரச்னையை அறிந்து அதற்குத் தீர்வாகவே இந்தத் தொழிலை தொடங்கினார் முருகானந்தம்.

சதா சர்வ காலமும் தன்னுடைய பரிசோதனையில் மூழ்கி இருந்ததாலும், தோல்விகளே தொடர்ந்த நிலையிலும் மனம் சோராமல் தான் எடுத்த முயற்சியில் சற்றும் மனம் தளராது தொடர்ந்து புதிய சோதனைகளை செய்தார் முருகானந்தம். கோவைக்கு இடம்பெயர்ந்து கையில் இருந்த கடைசி பணத்தையும் வைத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் முருகானந்தம் தயாரித்த இயந்திரம் தான் அவரின் வெற்றிக்கு முதல் படி. குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் இயந்திரம் அது. அவர் கண்டுபிடித்த சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் ஆந்திரா, பீகார், உத்தர பிரதேசம், என இந்தியாவின் பல பகுதிகளிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று இந்திய தொழில் வல்லுநர்கள் பலரின் கவனத்தையும் தன் விடா முயற்சியால் திரும்பிப் பார்க்க செய்த தமிழர் இவர்.

ஒரு நாப்கினின் விலையை ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு விற்பதற்கு ஒரு மனம் வேண்டும். அதனால் தான் சமூக அக்கறையுடன் இயங்கும் தொழில்முனைவோராக இவர் கவனம் பெறுகிறார். தொழிலில் முன்னேறிய பலருக்கு சமூக நோக்கம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் முருகானந்தத்தின் இந்த உலகம் முழுக்க மகளிர் அமைப்புகள் மற்றும் பள்ளிகளுக்கு தமது இயந்திரங்களை வழங்கி உற்பத்தி முறைகளையும் கற்றுத்த தந்துள்ளார். இவரது முயற்சியால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் உற்பத்தியாகும் நாப்கின்களை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக முருகானந்தத்தை டைம் பத்திரிக்கை தேர்வு செய்து உலகிற்கு அடையாளப்படுத்தியது. அதன் பின்னரே 2016-ம் ஆண்டு முருகானந்தத்தின் சாதனையைப் பாராட்டிய மத்திய அரசு அவருக்கு 'பத்மஸ்ரீ' விருதளித்து கெளரவித்தது.

பல்வேறு சமூக நல அமைப்புகளின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்று வருகிறார். அதிலும் முக்கியமாக ஏழை எளிய பெண்களின் வாழ்த்துகள் அவரை என்றென்றும் தொடரும்.

இந்நிலையில் இந்த சானிடரி நாப்கின்கள் குறித்து சமூகத்தில் இன்னும் பலருக்கு ஆசூசை உணர்வு உள்ளது. மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் இந்த நாப்கின்களை அவர்கள் கடைகளுக்குச் சென்று வாங்குவதும், வெளிப்படையாக கையில் எடுத்துச் செல்வது அறுவறுத்தக்க செயலாகப் பார்க்கப்படுகிறது. ஒரு கருப்பு நிற ப்ளாஸ்டிக் கவரில் கடைக்காரர் ரகஸியமாக இதனைத் தருவதும், ஏதோ கடத்தல் பொருள் போல அதனை வாங்குவோரும் கைப்பையில் ஒளித்து வீட்டுக்கு எடுத்துச் செல்வதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. 

இத்தகைய தயக்கத்தை உடைப்பதற்கு நாப்கின்களை விளம்பரப்படுத்தி சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாப்கினை கையில் வைத்தபடி புகைப்படம் எடுத்துப் பகிர முடியுமா? என பாலிவுட் நடிகர்களுக்கு முருகானந்தம் சவால் விடுத்தார்.

'பேட்மேன் சேலன்ஞ்ச்' என்ற பெயரில் முருகானந்தம் வெளியிட்ட இந்தச் சவாலை பாலிவுட்டின் பிரபல இந்தி நடிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

அமீர்கான், அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர், ட்விங்கிள் கண்ணா உள்ளிட்டோர் சானிடரி நாப்கினை கையில் வைத்தபடி போஸ் கொடுக்கும் படங்களை தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அவர்களும் இதே சவாலை கேள்வியாக்கி டிவிட்டரில் பகிர, தீபிகா படுகோன், அனில் கபூர், ராஜ் குமார் ராவ் என இந்தச் சங்கிலி தொடர்ந்து பலரும் சானிடரி நேப்கினுடன் படமெடுத்து ட்விட்டரிலும் தங்களுடைய வலைத்தளங்களில் பகிரத் தொடங்கயுள்ளனர். முருகானந்தத்தின் இந்த 'பேட்மேன் சேலன்ஞ்ச்' இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com