மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவராது என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது...
மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவராது என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கியூப், யு.எஃப்.ஓ. ஆகிய நிறுவனங்கள் தமிழகத் திரையரங்குகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களைத் திரையிட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வெவ்வேறு விதங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு படத்தை திரையிட்டு அதை திரையரங்கிலிருந்து எடுக்கும் வரைக்கும் அதிக நாட்களுக்கு ரூ.34,000 கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வாரத்துக்குத் திரையிட ரூ.12,000 செலுத்த வேண்டும்.

இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். அதே சமயத்தில், பிற நிறுவனங்கள் குறுகிய காலத்துக்குத் திரையிட ரூ.4,000 , நீண்ட காலத்துக்கு ரூ.12,000 கட்டணமாகப் பெறத் தயாராக உள்ளன. ஆனால், கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள் அதிக தொகையைக் கேட்கின்றன.

இந்நிலையில், திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை அதிகமாகப் பெற்று வருவதைக் கண்டித்தும் சிறியமுதலீட்டுப் படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்குத் தீர்வு காணும் விதமாகவும் வேலை நிறுத்தத்தைத் தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

திரையரங்குகளில் டிஜிட்டல் முறை ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 1-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீட்டை நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதனால், புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

மிக அதிகப்படியான கட்டணத்தைக் குறைக்க வேண்டி பலமுறை நேரிலும் கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும் கொஞ்சமும் செவி சாய்க்காத, கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக தென்னிந்தியத் திரையுலகினைச் சார்ந்த ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக மார்ச் 1 முதல் எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.

வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படத்தினையும் வெளியிடுவதில்லை என்று ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பாக நமது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com