பாகுபலியால் அதிகம் கல்லா கட்டுவது இவர்தானாம்! யார் அந்த இவர்?!

ஆனால், பாகுபலியால் இவர்களைத் தவிரவும் மிக அதிகமாக பிரபலமாகி, இந்தியா முழுவதுமே மிக விரும்பத்தக்க படைப்பாளியாக ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர் யாரென்றால்
பாகுபலியால் அதிகம் கல்லா கட்டுவது இவர்தானாம்! யார் அந்த இவர்?!

கடந்தாண்டு ஏப்ரலில் வெளியாகி உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பாகுபலி 2 தி கன்க்ளூசன். இது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த பாகுபலி 1 தி பிகினிங்கின் தொடர்ச்சி. இந்தப் படத்தின் வசூல் இந்திப்படங்களின் பாக் ஆஃபீஸ் வசூலையும் தாண்டி ஹிட் அடித்தது டோலிவுட் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல். இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 1800 கோடிகளைத் தாண்டியது வசூல் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. சரி படம் இத்தகைய பிரம்மாண்ட வெற்றி என்றால் அதன் இயக்குனரின் மவுசைப் பற்றிக் கேட்க வேண்டுமா? இன்று எஸ்.எஸ்.ராஜமெளலி மொத்த இந்தியாவில் திரைப்படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இணைந்து பணிபுரிய விரும்பும் டாப் 5 இயக்குனர்களில் ஒருவராகி விட்டார்.

ஏனென்றால் ராஜமெளலி இயக்கினால் நிச்சயம் படம் ஹிட். வசூலும் பக்கா... பல்க் வசூல் என்ற சிம்பிள் ஃபார்முலா தான். ஆனால் இதைப் பற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பதிலளித்த இயக்குனரோ, பாகுபலி வசூல் ரீதியாக பிரம்மாண்ட சக்ஸஸ் என்றாலும் படத்திற்கான பட்ஜெட், நடிகர்கள், நடிகைகள் சம்பளம், இயக்குனர், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான சம்பளம், அதற்கான புரமோஷன் செலவுகள், வினியோகஸ்தர்களுக்கான பங்கு சதவிகிதம் எனக் கணக்கிட்டால் அந்தப் படம் அதன் தயாரிப்பாளர்களுக்கும், அவர்களுடன் நட்புடன் இயங்கும் தனக்கும் மக்கள் நினைக்கும் அளவுக்கு புதையல் போன்ற வருமானத்தை எல்லாம் ஈட்டித் தரவில்லை. படம் எங்களை நஷ்டப்படுத்தவில்லை. என்பதோடு எங்களது பெர்ஃபெக்‌ஷனுக்காக நாங்கள் செலவிட்ட தொகையோடு ஒப்பிடுகையில் நாங்களொன்றும் படத்தின் வசூலை அள்ளி மூட்டை கட்டி வைக்கும் அளவுக்கு சம்பாதிக்கவில்லை என்றார்.

அவர் சொன்னது நிஜமாக இருக்கலாம். ஹாலிவுட் திரைப்படங்களோடு ஒப்பிடுகையில் அதே தரத்தை இந்தியத் தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியுடன் இங்கிருக்கும் வசதிகளைக் கொண்டு படத்தில் கொண்டு வருவது சவாலான விஷயம் தான். ஆகவே இவர் சொன்ன கணக்கு சரியாகவும் இருக்கலாம். அல்லது அவர் தன்னடக்கத்துடன் பதில் சொன்னதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதல்ல விஷயம்.

இத்திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த நடிகர், நடிகையரான... பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோரின் சம்பளங்கள் அத்திரைப்படத்துக்குப் பிறகு மிக உயர்ந்திருப்பது நிஜம். அவர்களுக்கான திரை வாய்ப்புகளும், பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்டோரின்  திரைப்படங்களுக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு வியாபார வாய்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன என அவர்களே தங்களது நேர்காணல்களில் மகிழ்வுடன் ஒப்புக் கொண்டுள்ளனர். பாகுபலியால் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பு இது. இவர்கள் எல்லோரும் லைம்லைட்டில் இருப்பவர்கள் என்பதால் அவர்கள் அடைந்த லாபம் நமக்கு கண்கூடாகத் தெரிகிறது.

ஆனால், பாகுபலியால் இவர்களைத் தவிரவும் மிக அதிகமாக பிரபலமாகி, இந்தியா முழுவதுமே மிக விரும்பத்தக்க படைப்பாளியாக ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர் யாரென்றால் பாகுபலியின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத். சாட்ஷாத் ராஜமெளலியின் தந்தை. பாகுபலிக்கு முன்பே பஜ்ரங்கி பாஹிஜான் மூலமாக அவருக்கான இந்தித் திரைப்பட வரவேற்பு நிகழ்ந்திருந்த போதும் பாகுபலியால் கிடைத்த புகழுக்கு ஈடில்லை அது.  ஏனென்றால் பஜ்ரங்கி பாஹிஜானுக்கு முன்பும் கூட சில இந்தித் திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக பங்களித்தவர் தான் விஜயேந்திர பிரசாத். ஆனால் பாகுபலிக்குப் பிறகு அவரது மவுசு கன்னா, பின்னாவென எகிறி விட்டதாகக் கூறப்படுகிறது. 

ஒரு கதாசிரியராக இன்று விஜயேந்திரப் பிரசாத், இன்று தனது ஒரு கதைக்கு வாங்கும் சம்பளம் கோடிக்கும் அதிகமென்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இவர் ஒரு கதைப்புதையலாம். எப்போது கேட்டாலும் சொல்வதற்குச் சுவாரஸ்யமாக பல கதைகளை ஸ்டாக் வைத்திருப்பவர் என்ற பெயருண்டு இவருக்கு. தற்போது பாகுபலி மூலமாகக் கிடைத்த புகழ் வெளிச்சத்தில் இவரிடமிருந்த பழைய கதைகளுக்கு கூட ஏக டிமாண்டாம். எல்லாக் கதைகளுக்கும் நல்ல விலை கிடைத்ததில் இப்போது பாகுபலியால் அதிகம் சம்பாதித்தவர் என்ற புகழ் இவருக்குத் தான் கிடைக்கக் கூடும் என்கிறார்கள். சரி தான் திறமை இருப்பவர்கள் ஜெயிப்பார்கள் என்பதற்கு வயதெல்லாம் ஒரு தடையே இல்லை என்பதை இவர் நிரூபித்திருக்கிறார்.

இவரைப் பற்றி இவரது மருமகளும், இயக்குனர் ராஜமெளலியின் மனைவியுமான ரமா கூறுவதைக் கேட்டால் இவரது வெற்றிக்கான ஃபார்முலா புரியும்...

‘எங்கள் வீட்டில், இன்றும் கூட அதிகாலையில் எழுந்து கொள்ளக்கூடிய முதல் ஆள் என் மாமனார் தான். அந்த நேரத்தில் எங்கள் வீட்டில் வேறு யாரும் விழித்திருக்க மாட்டார்கள். ஆனால் என் மாமனாருக்கு அப்போதும் கூட சொல்வதற்குக் கைவசம் கதைகள் நிறைய இருக்கும். அப்படியொரு அதிகாலை நேரத்தில் அவர் என்னிடம் சொல்லத் தொடங்கியது தான் பாகுபலி திரைப்படத்துக்கான விதை. முதலில் என்னிடம் அவர் சித்தரிக்கத் தொடங்கியது பாகுபலியின் ‘சிவகாமி’ கதாபாத்திரத்தைத் தான். நான் வியந்து போனேன், இத்தனை வலிமையோடு ஒரு பெண் கதாபாத்திரமா? என்று, தொடர்ந்து அவர் மற்றொரு நாள் கட்டப்பாவைப் பற்றிச் சொன்னார். இப்படி கதாபாத்திரங்களின் கூட்டணியில் உருவானது தான் பாகுபலி திரைக்கதை. ஒருவேளை அவர் சொல்லும் கதைகள் நன்றாக இல்லை, இன்னும் மெருகேற்ற வேண்டும் அல்லது வேறு மாதிரியான கதைகள் வேண்டும் என்று கேட்டாலும் அவர் சலித்துக் கொள்ளவோ அல்லது அதை ஈகோவாகவோ எடுத்துக் கொள்ள மாட்டார். மீண்டும் எங்களுக்கு சமாதானமாகும் படியாக சொல்வதற்கு அவரிடம் நிறைய ஐடியாக்களும், கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன. இத்தனை வயதிலும் அவரது சுறுசுறுப்பும், பிறரது கருத்துக்கு அவர் செவி சாய்க்கும் திறனும் தான் அவரது வெற்றிக்கான சூத்திரம் என்று நாங்கள் கருதுகிறோம். என்கிறார் ரமா.

சரி தான் இவர் சிறந்த கதாசிரியர் மட்டுமல்ல, மருமகள் மெச்சிய மாமனாரும் கூடத்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com