இயக்குநர் பாலாவின் 'நாச்சியார்' வெற்றிப் படமா தோல்விப் படமா? 

ஒரு சில படங்கள் தியேட்டரில் அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகின்றன. சில படங்கள் தியேட்டரை விட்டே ஓடி
இயக்குநர் பாலாவின் 'நாச்சியார்' வெற்றிப் படமா தோல்விப் படமா? 

ஒரு சில படங்கள் தியேட்டரில் அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகின்றன. சில படங்கள் தியேட்டரை விட்டே ஓடி,  அடுத்து வரும் படங்களுக்கு வழிவிட்டு சின்னத்திரைக்கு வந்துவிடுகின்றன. ஒரு படத்தின் வெற்றியை எப்படி நிர்ணயிப்பது? வசூல் சாதனையிலா அல்லது நல்ல கதை என்பதாலா என்பதற்கான பதிலை எளிதில் சொல்லிவிட முடியாது.

அண்மைவில் வெளிவந்துள்ள பாலாவின் படமான நாச்சியாருக்கு கலவையான விமரிசனங்கள் கிடைத்துவரும் நிலையில் அது வெற்றிப் படமா இல்லையா என்று விசாரித்ததில் பாலாவின் முந்தைய படமான தாரை தப்பட்டைப் போல இது படுதோல்வியடைந்த படம் இல்லை. ஆனால் வெற்றிப் படமும் இல்லை என்ற பதிலே கிடைத்தது. காரணம் இந்தப் படத்தை பத்திரிகை, மீடியா விஐபிக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் வசூல்ரீதியாக நாச்சியார் எதிர்ப்பார்த்த அளவு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடிக்கவில்லை.

நாச்சியாரின் கதையைப் பொருத்தவரையில், பாலாவின் முந்தைய படத்தின் இருண்மை விஷயங்களும், அதிகப்படியான வன்முறைக் காட்சிகளும் இல்லை. பாலா படங்கள் என்றால் அவை ரத்தத் தெறிப்புடன் மிகக் கொடூரமானதாக இருக்கும் என்பது பாலாவைத் தொடர்பவர்களுக்குத் தெரிந்த விஷயம். வாழ்க்கையிலேயே இத்தனை வன்முறை இருக்கிறது அது மிகை நாடும் கலையான திரைப்படங்களில் காட்சிப்படுத்துவதில் தவறில்லை என்ற கோட்பாட்டினை பின்பற்றிவரும் பாலா, நாச்சியாரை தனது இயல்புக்கு மாறாக சற்று மென்மையாக எடுத்திருக்கிறார். 

இயக்குநர் மணி ரத்னம் படங்கள் காதலை அழகியலுடன் காட்சிப்படுத்துவார், கெளதம் வாசுதேவ் படங்களில் காதலுடன் சேர்ந்து அதன் தோல்வியும், சில சமயம் வன்முறையும் மிகுந்திருக்கும், பாலாவின் படங்களில் வன்முறைக்கு இடையில் சிறியதாக காதல் பூத்திருக்கும். வாழ்க்கை இதைவிடக் குரூரமாக உள்ளது என்பதை தனது படைப்புக்களின் மூலம் ஆழமாகச் சொல்லி வருபவர் பாலா. மேற்சொன்னபடி ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு பாணி உண்டு. அதிலிருந்து அவர்கள் தடம் மாறிப் பயணம் செய்கையில் அவர்களின் ரசிகன் சற்று குழம்பிவிடுவதுண்டு.

பாலா படம் பார்க்க வந்தவனுக்கு கெளதம் மேனன் படம்  போன்ற ஒரு படமோ மணி ரத்னம் வகையறா படங்களோ பிடிப்பதில்லை. எதையோ எதிர்ப்பார்த்து வந்து ஏதோ கிடைத்துவிட்டது என்று அவன் நினைக்கக் கூடும். தன்னுடைய வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டு இயக்குநர்கள் படமே எடுக்கக் கூடாதா என்ன? நிச்சயம் அவர்களுக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறது. அது அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கலாம். மாறாக, படுதோல்வியும் அந்த மாற்றூ முயற்சியினால் அவர்கள்  அடையலாம். 

இக்கதையை பாலா அணுகியிருக்கும் விதத்தில் ஒருவித நிதானம் இருப்பதை படம் பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். அதனால் தான் என்னவோ, இக்கதையில் கதாபாத்திரங்களுக்கு நிகழும் சம்பவங்களை பார்வையாளர்களை எதுவும் செய்வதில்லை. எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதால் அக்கதாபாத்திரங்களுடன் ஒன்றிப் படம் பார்க்க முடியவில்லை.

படம் ஓடும் 100 நிமிடம் 46 நொடிகளும் தொய்வில்லாமல் திரைக்கதை அமைத்திருந்த விதமும் அருமை என்ற போதிலும், ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா ஆகியோரின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது என்றாலும், நாச்சியார் ஏனோ பெரும் அளவுக்கு சாதிக்கவில்லை. இந்தக் கதையை பாலா தன் வழக்கமான பாணியில் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ரசிகன் பாலா எடுக்காத நாச்சியாரை மனத்துக்குள் ஓட்டிப் பார்ப்பதால், அவனுடைய அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத இந்தப் படம் அந்த ரசிகனின் மனத்துக்கு நெருக்கமாகவில்லை.

நாச்சியார் படத்தின் கதை நன்றாக இருக்கிறது என்று பாராட்டப்பட்டு வந்தாலும் இது பாலா படம் போலவே இல்லை என்ற எதிர் விமரிசனங்களும் எழுந்துள்ளது. வணிகரீதியாக ஏன் திரையரங்குகளில் இப்படம் வசூலிக்கவில்லை என்று விசாரித்த போது, பாலா இந்தப் படத்துக்காக போதிய அளவு விளம்பரம் தரவில்லை என்கிறார்கள் கோலிவுட் தரப்பினர். இத்தனைக்கு இது அவரது சொந்தத் தயாரிப்பு. ஆனால் படத்தை குறிப்பிட்ட தொகைக்கு ஏற்கனவே விற்றுவிட்டதால் அவருக்கு இப்படத்தால் நஷ்டம் எதுவும் இல்லை.  

ஒரு படம் வெளிவந்தால் ரசிகர்களும் திரை ஆர்வலர்களும் விமரிசகர்களும் அப்படத்தை அக்குவேறாக ஆணி வேராக அலசி சலித்துப் போவார்கள். ஆனால் அப்படத்தின் இயக்குநர்கள் அதிலிருந்து விடுபட்டு அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். பாலாவின் அடுத்த படம் பாலா படமாக இருக்குமா என்பதுதான் ஒட்டுமொத்தமாக அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com