ரூ. 2 கோடியில் உருவானது அருவி படம். ஆனால்...: வேதனையை வெளிப்படுத்திய தயாரிப்பாளர்!

எங்களுடைய ரூ. 1.50 கோடியை யாரோ சாப்பிட்டுவிட்டார்கள். அதைச் சேமித்திருந்தால் நாங்கள் இன்னொரு படம் எடுத்திருப்போம்...
ரூ. 2 கோடியில் உருவானது அருவி படம். ஆனால்...: வேதனையை வெளிப்படுத்திய தயாரிப்பாளர்!

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், மார்ச் 1 ஆம் தேதி முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.

கியூப், யு.எஃப்.ஓ. ஆகிய நிறுவனங்கள் தமிழகத் திரையரங்குகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களைத் திரையிட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வெவ்வேறு விதங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள் அதிகமாகப் பெற்று வருவதைக் கண்டித்தும் சிறிய முதலீட்டுப் படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்குத் தீர்வு காணும் விதமாகவும் வேலை நிறுத்தத்தைத் தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு. 'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற படம் - 'அருவி'.

இந்நிலையில், டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் கூறியதாவது:

ரூ. 2 கோடியில் தயாரிக்கப்பட்ட அருவி படத்தின் விபிஎஃப்-க்காக (VPF, Visual Projection Fee) நாங்கள் ரூ. 50 லட்சம் தந்தோம். அதற்கு ரூ. 15 லட்சம் மட்டும்தான் வாங்கியிருக்க வேண்டும். 2017-ல் 4 படங்களின் விபிஎஃப்-க்காக ரூ. 2.20 கோடி கட்டியதில் எங்களுடைய ரூ. 1.50 கோடியை யாரோ சாப்பிட்டுவிட்டார்கள். அதைச் சேமித்திருந்தால் நாங்கள் இன்னொரு படம் எடுத்திருப்போம்.

தயாரிப்பாளர்கள்/விநியோகஸ்தர்கள் விபிஎஃப்-க்காக பணம் கட்டியதற்குக் காரணம் - சில காலங்களுக்குப் பிறகு புரொஜக்டர்கள் திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டுவிடும் என்பதால்தான். ஆனால் அது எங்களுக்குச் சொந்தம் என்று கூறுகிறார்கள். முதல் நபரின் உபகரணங்களுக்காக மூன்றாவது நபர் எப்படி பணம் கட்டமுடியும்? கடைசியில் இரண்டாம் நபர் அந்த உபகரணம் தன்னுடையதுதான் என்று எப்படிக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com