ஸ்ரீ தேவி இன்றில்லை எனும் உலகு! கவிஞர் மனுஷ்ய புத்திரனின் அஞ்சலி கவிதை!

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு சக திரையுலக நடிக நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீ தேவி இன்றில்லை எனும் உலகு! கவிஞர் மனுஷ்ய புத்திரனின் அஞ்சலி கவிதை!

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு சக திரையுலக நடிக நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மரணச் செய்தியை ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்கள் முழுவதும் துயரத்துடன் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள். கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனது ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு இது.

'இந்த ஞாயிறு நடிகை ஸ்ரீ தேவியின் மரணச் செய்தியுடன் விடிந்திருக்கிறது. ஸ்ரீ தேவிக்கெல்லாம் முதுமையே வராது என்று நம்பியவன் நான்...சாவே வந்துவிட்டது. தலை பயங்கரமாக வலிக்கிறது’என்று பதிவிட்டுள்ளார். 

ஸ்ரீ தேவி இன்றில்லை எனும் உலகு!

ஸ்ரீதேவி இறந்துவிட்டாள் என்று
ஸ்ரீதேவியே இன்று அதிகாலை கனவில்
வந்து சொன்னபிறகு
திடுக்கிட்டு எழுந்துகொண்டேன்

ஜன்னலைத் திறந்து
ஆர்பரித்துக்கொண்டிருந்த கடலிடம்
உரத்துக் கூறினேன்
' ஸ்ரீ தேவி இறந்துவிட்டாளாம்'

எல்லோரும் இறப்பதுபோலவேதான்
ஸ்ரீ தேவியும் இறந்துபோயிருக்கிறாள்
பறவைகள் வீழ்வதுபோல
மான்கள் இறப்பதுபோல
நீங்களும் நானும்
இறப்பது போல

இறப்பதற்கு
ஸ்ரீதேவிகளுக்கெனெ
விசேஷமான வழிமுறைகள் இல்லையா? 
இது என்னை
மிகவும் ஏமாற்றமடையச் செய்கிறது

இந்த உலகின்
எல்லா வசீகரமான பெண்களும்
ஒரு சாயலில் ஸ்ரீ தேவியைபோலவே இருக்கிறார்கள்
இந்த உலகின் 
எல்லா வசீகரமான பெண்களின் சாயல்களும்
ஏதோ ஒரு தருணத்தில்
ஸ்ரீ தேவியிடம் இருந்தன

என் இளமைக்காலம் முழுக்க
அவள் கண்கள் செல்லும் திசையெல்லாம்
நானும் சென்றுகொண்டிருந்தேன்
ஒரு சிறுமியின் களங்கமற்ற கண்களால்
இந்த உலகின் துயரங்களையெல்லாம்
வென்றுவிடலாம் என்று 
அவ்வளவு முழுமையாக நம்பினேன்

ஒரு மருத்துவன்
ஸ்ரீ தேவியின் பதினாறு வயதிற்காக
அவளை ஏமாற்றும்போது
அவள் அருகிலேயே பதட்டத்துடன் 
நின்றுகொண்டிருந்தேன்

ஒரு தொடர் கொலைகாரன்
துணிக்கடையில் விற்பனைப்பெண்ணான
ஸ்ரீ தேவியிடம் தன் காதலைத் தெரிவித்தபோது
அவளை எச்சரிக்க முடியாமல்
பரிதவித்துபோனேன்

தன் காதலனுக்காக
மனமுருகி ஸ்ரீ தேவி பாடிக்கொண்டிருக்கையில்
அவள் காதலனுடன் நானும்
கொட்டும் மழையில் ஓடி வந்துகொண்டிருந்தேன்

நினைவுகள் அழிந்த சிறுபெண்ணாய்
ஸ்ரீ தேவி ரயில் தண்டவாளத்தில் காது வைத்து
ரயில் வரும் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருக்கையில்
அவள் நாயை கையில் பிடித்துக்கொண்டு
அருகிலேயே நின்றிருந்தேன்

ஸ்ரீ தேவி ஆங்கிலம் கற்றுக்கொண்ட
அதே ட்யூஷன் செண்டரில்
ஸ்ரீ தேவிக்காகவே நானும்
ஆங்கிலம் கற்றுக்கொள்ளப்போனேன்

ஸ்ரீ தேவியுடன் ஃப்ரேமில் வந்த நாயகர்கள்
வீடு திரும்பியதும்
அறையின் கதவுகளை சாத்திக்கொண்டு
தாழ்வு மனப்பான்மையில் மனம் உடைந்து அழுதார்கள்
ஸ்ரீ தேவி எவ்வளவோ பெருந்தன்மையுடன்
ஒவ்வொரு காட்சியிலும்
அவர்களை காதலித்தாள்
இந்த உலகின் எல்லாஸ்ரீதேவிகளும்
மங்கலான ஆண்களுக்கு ஒளியூட்டுவதுபோல
ஸ்ரீ தேவியும் ஒளியூட்டினாள்

ஸ்ரீ தேவிக்கு வசனம் எழுதியவர்கள்
அவள் குரலின் ரகசியங்களை
பாதுகாப்பதற்கு பரிதவித்தார்கள்

ஸ்ரீ தேவியின் நடனங்களுக்கு
பின்னணி இசை சேர்த்தவர்கள்
புதிய ராகங்கள் தானாக உருவாகிவருவதைக்கண்டு
திகைத்துபோனார்கள்

தான் நேசித்த பெண்களிடம்
ஸ்ரீ தேவியை தேடிய ஆண்கள்
பிறகு மனம் கசந்து குடிகாரர்களானார்கள்

தன்னை ஸ்ரீதேவியாக உணர்ந்த பெண்கள்
தன்னம்பிக்கையுடன்
ஆண்களின் அதிகார உலகை
கேலியுடன் எட்டி உதைத்தார்கள்

ஸ்ரீ தேவி ஒரு எரிநட்சத்திரமாக வீழ்கிறாள்
காண அவ்வளவு தனிமையாக இருக்கிறது

ஸ்ரீ தேவி ஒரு வாணவேடிக்கையாக அணைகிறாள்
அப்படி ஒரு இருள் வந்துவிட்டது

ஸ்ரீ தேவி ஒரு மலரைபோல உதிர்கிறாள்
நிலம் நீண்ட நேரத்திற்கு அதிர்கிறது

25.2.2018
காலை 7.40
மனுஷ்ய புத்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com