குடும்ப உறவுகளை உயிராய் நினைத்த நடிகை ஸ்ரீதேவி நடித்த முதல் படத்தின் பெயர் துணைவன், கடைசி படத்தின் பெயர் மாம்!

இந்திய சினிமாவின் தன்னிகரற்ற அடையாளமாகத் திகழ்ந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
குடும்ப உறவுகளை உயிராய் நினைத்த நடிகை ஸ்ரீதேவி நடித்த முதல் படத்தின் பெயர் துணைவன், கடைசி படத்தின் பெயர் மாம்!

இந்திய சினிமாவின் தன்னிகரற்ற அடையாளமாகத் திகழ்ந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஒரு நடிகையாக ஸ்ரீதேவி எட்டிய உயரங்களுக்குப் பின்னணியில் அவரது கடின உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தது வந்ததை அனைவரும் அறிவார்கள். அழகும் திறமையும் நடிப்பாற்றலும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பாலிவுட்டில் பெற்றுத் தந்தது.

நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக துணைவன் என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார் பேபி ஸ்ரீதேவி. 13 வயதில் அவர் நடித்த மூன்று முடிச்சு திரைப்படம் தான், அவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம். இயக்குநர் பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ ஸ்ரீதேவியை பெண் மையக் கதாபாத்திரமாக முதன் முதலில் நடிக்க வைத்தது.  கிராமத்து மயிலாக மாறி, புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பாலு மகேந்திராவின் இயக்கத்தில் 1983-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘மூன்றாம் பிறை’, அதன் ரீமேக் சத்மா ஆகியவை பல்வேறு சாதனைகள் படைத்து இந்தித் திரையுலகில் ஸ்ரீதேவிக்கு ஒரு தனியிடத்தைப் பெற்றுத் தந்தது. ஹிம்மத்தவாலா, ஜஸ்டிஸ் சௌத்ரி, கலாக்கார், சத்மா, இன்கிலாப், ஜாக் உட்டா இன்ஸான், நகினா, சுஹாகன், ஔலாத், மிஸ்டர் இந்தியா, சால்பாஸ், சாந்தினி, பன்ஜாரன் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தார் ஸ்ரீதேவி. 

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் அண்ணனுமான போனி கபூருடன் திருமணத்திற்கு பிறகு திரையுலகைவிட்டு சிறிது காலம் விலகி இருந்தார் ஸ்ரீதேவி, மீண்டும் 2002-ம் ஆண்டு சக்தி எனும் திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இரண்டாவது குழந்தைக்கு அவர் தாயானதால் அவரால் அப்படத்தில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இயக்குநர் பால்கியின் மனைவி கெளரி ஷிண்டே இயக்கிய இங்க்லீஷ் விங்லீஷ் அவருடைய ரீ ரீ எண்ட்ரியாக அமைந்து நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. ஆனந்த் ராய் இயக்கத்தில் நடிகை ஸ்ரீதேவியாகவே அவர் நடிக்கவிருந்த படம் ஜீரோ. ஆனால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் காலன் அவரது உயிரைப் பறித்துக் கொண்டான்.

கடந்த ஆண்டு 2017-ல் வெளியான 'மாம்' என்ற திரைப்படம் ஸ்ரீதேவி நடித்த கடைசிப் படம். துணைவனில் ஆரம்பித்து மாமில் நிறைவு பெற்ற ஸ்ரீதேவியின் திரைவாழ்க்கையில் தொய்விருந்ததில்லை. 2013-ம் ஆண்டு ஸ்ரீதேவிக்கு இந்திய அரசின் மிகப்பெரும் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

எதையும்விட தன் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்களுள் அவரின் முதல் மற்றும் கடைசிப் படங்களில் பெயர்கள் அவரது வாழ்க்கைப் பயணத்தின் இரண்டு மைல்கல்களாகவே நினைக்கத் தோன்றுகிறது. எல்லா பெண்களுக்கும் திருமணம் குழந்தைப் பேறு போன்றவை மிகவும் முக்கியம். நடிகையாக பிஸி வாழ்க்கை வாழ்ந்தும், புகழின் உச்சத்தில் மிளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களுக்கும் அதுவே கனவு. ஸ்ரீதேவி நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கடைசித் தருணங்களையும் ஒரு விழாவில் மகிழ்ச்சியாகக் கொண்டாடிவிட்டு, தனது கடைசி பயணத்தை சட்டென்று முடித்துக் கொண்டார். அவர் மறைந்துவிட்டாலும், அவர் வாழ்ந்த காலம் முழுவதும் சேர்த்து வைத்த புகழ் ஒருபோதும் மறைந்துவிடாது. இந்திய சினிமாவின் அடையாளம் ஸ்ரீதேவி என்பதை ஒருவராலும் மறுக்க முடியாது. நடிகை ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com