பத்மாவதியில் நடித்தபின் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு ஏற்பட்ட பிரச்னை! 

தன்னை பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம் நடிகை தீபிகா படுகோன்.
பத்மாவதியில் நடித்தபின் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு ஏற்பட்ட பிரச்னை! 

சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் ராணி பத்மாவதியாகவும், ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும், ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ள வரலாற்று படமான பத்மாவதி பல சிக்கல்களில் சிக்கியது அனைவரும் அறிந்த செய்தி. தற்போது இப்படத்தின் பெயரை ‘பத்மாவத்’ என மாற்றி வைக்கும்படி கூறி, 26 இடங்களில் எடிட் செய்யுமாறு சென்சார் போர்டு படக்குழுவினரிடம் அறிவுறுத்தியுள்ளது.

'பத்மாவதி' திரைப்படத்தின் பெயரை 'பத்மாவத்' என மாற்றி வைக்கும்படி கூறியதுடன் 26 இடங்களில் எடிட் செய்யுமாறும் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (சிபிஎஃப்சி) பரிந்துரைத்துள்ளது. மேலும், அப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை திருத்தியமைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. அந்தத் திருத்தங்களை மேற்கொண்டால் அப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கவும் தணிக்கை வாரியம் முடிவு செய்துள்ளது.
 

ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட படம் 'பத்மாவதி'. ராணி பத்மாவதியின் அழகில் மயங்கிய தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி அவரை ஆட்கொள்ள முற்பட்டதாக அந்தப் படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அது உண்மையல்ல என்றும், வரலாற்றைத் தவறாகச் சித்திரித்து அந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி ராஜபுத்திர சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அந்தப் படத்தை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தடை விதித்தன.

மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழும் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால், திட்டமிட்டபடி, அந்தப் படத்தை டிசம்பர் 1-ம் தேதி வெளியிட முடியாது என படக் குழுவினர் அறிவித்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில், 'பத்மாவதி' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிப்பது தொடர்பான விவகாரம் சிபிஎஃப்சி வாரிய ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தணிக்கை வாரிய உறுப்பினர்களும், ஆய்வுக் குழுவினரும் கடந்த 28-ஆம் தேதி கலந்தாலோசித்தனர். இறுதியாக சில முடிவுகள் எட்டப்பட்டன. 

அது தொடர்பாக மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: 'பத்மாவதி' திரைப்படப் பாடல் காட்சிகள் சிலவற்றை மாற்றுமாறு படக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், படம் தொடங்கும்போது இடம்பெறும் 'பொறுப்புத் துறப்பு' வாசகத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திரைப்படத்தின் பெயரை 'பத்மாவத்' என மாற்றலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்களை மேற்கொண்டு படத்தை தணிக்கை வாரியம் முன்பு சமர்ப்பித்தால் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்வாதியாக நடித்த தீபிகா படுகோனுக்கும் பலவிதமான மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், இந்த சென்சார் பிரச்னையும் சேர்ந்து அவரை மனக் கஷ்டத்துக்கு உள்ளாக்கிவிட்டது. பத்மாவதி கதாபாத்திரத்தை ஆழமாக உள்வாங்கி, நடித்ததால் அக்கதாபாத்திரம் திரையில் இன்னும் உயிர் பெறவில்லை என தீபிகா படுகோன் வருத்தமடைந்தார். ஒரு திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவதால், அப்படம் வெளிவந்த பிறகுதான் அதிலிருந்து மனதளவில் விடுபட முடியும் என்பது நடிகர்கள் மட்டுமே உணரும் உண்மை. ஆனால் பத்மாவதி படத்தில் நடிக்கும் போது பத்மாவதியாகவே வாழ்ந்த தீபிகா படுகோன் அந்த மனநிலையிலிருந்து எளிதில் விடுபட முடியாத அளவுக்கு உளச் சிக்கலுக்கு உள்ளான காரணம் அப்படம் வெளிவருவதற்கு முன் அதன் மீதான கடுமையான விமரிசனமாகும். 

சில ஆண்டுகளுக்கு முன்னால் தீபிகா படுகோன் பைபோலார் டிஸ் ஆர்டர் உள்ளிட்ட கடுமையான மன அழுத்தப் பிரச்னையால் அவதியுற்றார். தொடர் சிகிச்சையாலும், மருத்துவரின் உதவியுடன்தான் அதன்  பாதிப்புக்களிலிருந்து விடுபட்டார். இது குறித்து தொலைகாட்சி நிகழ்ச்சியில் மனம் திறந்தும் பேசியுள்ளார். தற்போது இந்தப் பட விவகாரம் அழுத்தும் பிரச்னையாகி கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் தனக்கு மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்று  அது மீண்டும் வந்துவிடுமோ என்று பயந்துவிட்டார் தீபிகா படுகோன்.  

ஆனால் மன அழுத்தம் ஏற்பட்டால் அதைப் பற்றிச் சொல்ல வெட்கப்படவில்லை. எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் திரைத்துறைக்கு நடிக்க வந்த பத்து ஆண்டுகள் நிறைவாகவே உணர்கிறேன் என்றார் தீபிகா. இந்நிலையில் 'பத்மாவத்’ ரிலீஸ் ஆனால் போதும் என்ற மனநிலைக்கும் வந்துவிட்டார் தீபிகா படுகோன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com