ரூ. 300 கோடி வசூலித்து சல்மான் கான் படம் பெரிய சாதனை!

ஹிந்தித் திரையுலகில் சல்மான் கானுக்கு நிகரான வசூல் மன்னன் வேறு யாருமில்லை என்பது இந்தப் படம் மூலம் மீண்டும் நிரூபணம்...
ரூ. 300 கோடி வசூலித்து சல்மான் கான் படம் பெரிய சாதனை!

இதுவரை இந்தியாவில் ரூ. 300 கோடி வசூல் செய்த படங்கள்

பிகே (2014)
பஜ்ரங்கி பைஜான் (2015)
சுல்தான் (2016)
டங்கல் (2016)
டைகர் ஜிந்தா ஹை (2017)
பாகுபலி 2 (2017)

சல்மான் கான், கத்ரினா கயிஃப் நடிப்பில் அலி அப்பாஸ் ஜஃபர் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் - டைகர் ஜிந்தா ஹை (Tiger Zinda Hai). இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியது. இந்த இலக்கை எட்டிய சல்மான் கானின் 12-வது படம் இது. இந்தியாவில் எந்தவொரு நடிகரின் படங்களும் இத்தனைமுறை ரூ. 100 கோடி
வசூலைத் தொட்டதில்லை.

இதில் இரு சல்மானின் படங்கள் ரூ. 300 கோடியை  எட்டியுள்ளன. சுல்தான் ரூ. 300 கோடியும் பஜ்ரங்கி பைஜான் ரூ. 320 கோடியும் இந்தியாவில் வசூல் செய்துள்ளன. இந்நிலையில் தற்போது சல்மானின் மூன்றாவது ரூ. 300 கோடி படம் என்கிற பெருமையை எட்டியுள்ளது டைகர் ஜிந்தா ஹை. மேலும் சல்மான் கான் படங்களில் அதிகம் வசூல் செய்த படமாகவும் பெருமை பெற்றுள்ளது. 

ரூ. 150 கோடி செலவில் உருவான டைகர் ஜிந்தா ஹை படம், பஜ்ரங்கி பைஜான் வசூலான ரூ. 320 கோடியை இன்று தாண்டியுள்ளது.

டைகர் ஜிந்தா ஹை முதல் வாரம் ரூ. 206 கோடியும் 2-வது வாரம் ரூ. 86 கோடியும் 3-வது வாரம் ரூ. 27 கோடியும் வசூல் செய்துள்ள நிலையில் தற்போது மற்ற சல்மான் படங்களின் வசூலைத் தாண்டி சல்மான் கானைக் குஷிப்படுத்தியுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் எப்படியும் ரூ. 350 வசூலித்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலித்த  6 படங்களில் மூன்று சல்மான் கான் நடித்தவை. அமீர் கானின் இரு படங்கள் (பிகே, டங்கல்) ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளன. இந்தியாவில் எந்தவொரு ஷாருக் கான் படமும் ரூ. 300 கோடி வசூலித்ததில்லை என்பது ஆச்சர்யமான தகவல்.

இதுதவிர வெளிநாடுகளில் ரூ. 122 கோடி வசூலித்துள்ளது டைகர் ஜிந்தா ஹை. வெளிநாடுகளில் இதுவரை ரூ. 20 மில்லியன் டாலர் அதாவது ரூ. 122.12 கோடியை வசூலித்துள்ளது. ஹிந்தித் திரையுலகில் சல்மான் கானுக்கு நிகரான வசூல் மன்னன் வேறு யாருமில்லை என்பது இந்தப் படம் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

கடந்த வருடம் வெளியான பாகுபலி 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் பாகுபலி 2 தவிர வேறெந்த படமும் ரூ. 500 கோடி வசூலை எட்டியதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com