பத்மாவத் படத்தை வெளியிடத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேச ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது...
பத்மாவத் படத்தை வெளியிடத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேச ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. 

'பத்மாவத்' திரைப்படத்துக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து அப்படத்தின் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட படம் 'பத்மாவதி'. ராணி பத்மாவதியின் அழகில் மயங்கிய தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி அவரை ஆட்கொள்ள முற்பட்டதாக அந்தப் படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அது உண்மைல்ல என்றும், வரலாற்றைத் தவறாகச் சித்திரித்து அந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி ராஜபுத்திர சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால், திட்டமிட்டபடி அந்தப் படம் வெளியாகவில்லை. இந்தச் சூழ்நிலையில், அந்தத் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிப்பது தொடர்பான விவகாரம் சிபிஎஃப்சி வாரிய ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அண்மையில் அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தணிக்கை வாரிய உறுப்பினர்களும், ஆய்வுக் குழுவினரும் கலந்தாலோசித்தனர். இறுதியாக திரைப்படத்தின் பெயரை 'பத்மாவத்' என மாற்ற வேண்டும் என்றும், சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியது. அதனை ஏற்று படத்தின் பெயரை 'பத்மாவத்' என படக் குழுவினர் மாற்றினர். அதன் பின்னர், அப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனிடையே, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமசாலப் பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், ஹரியாணா உள்ளிட்ட மாநில அரசுகள் அந்தப் படத்துக்குத் தடை விதித்தன. இந்நிலையில், அதை எதிர்த்து படக் குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். 

அதுதொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்த பிறகும், வேண்டுமென்ற சில மாநில அரசுகள் படத்துக்குத் தடை விதித்துள்ளதாகவும், அவற்றை நீக்க உத்தரவிடுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதனைப் பரிசீலித்த நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்கள். 

இந்நிலையில் இன்று இதுகுறித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேச ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. இனி, பிற மாநிலங்களும் பத்மாவத் படத்துக்குத் தடை விதிக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், பத்மாவத் படம் வெளியாகும்போது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com