பத்மாவத் படத்துக்காக தனது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்த அக்‌ஷய் குமார்!

சொந்த நலனைச் சற்றுத் தள்ளிவைத்து அடுத்தவருக்கு உதவ நினைத்ததால் அவருக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்துவருகிறது...
பத்மாவத் படத்துக்காக தனது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்த அக்‌ஷய் குமார்!

பாலிவுட் திரையுலகம் நடிகர் அக்‌ஷய் குமாரைப் புகழ்ந்துகொண்டிருக்கிறது. 

ஒரே காரணம்தான். சொந்த நலனைச் சற்றுத் தள்ளிவைத்து அடுத்தவருக்கு உதவ நினைத்ததால் அவருக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்துவருகிறது.

ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட படம் 'பத்மாவதி'. பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். ராணி பத்மாவதியின் அழகில் மயங்கிய தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி அவரை ஆட்கொள்ள முற்பட்டதாக அந்தப் படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அது உண்மைல்ல என்றும், வரலாற்றைத் தவறாகச் சித்திரித்து அந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி ராஜபுத்திர சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால், திட்டமிட்டபடி அந்தப் படம் வெளியாகவில்லை.

இந்தச் சூழ்நிலையில், அந்தத் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிப்பது தொடர்பான விவகாரம் சிபிஎஃப்சி வாரிய ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அண்மையில் அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தணிக்கை வாரிய உறுப்பினர்களும், ஆய்வுக் குழுவினரும் கலந்தாலோசித்தனர். இறுதியாக திரைப்படத்தின் பெயரை 'பத்மாவத்' என மாற்ற வேண்டும் என்றும், சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியது. அதனை ஏற்று படத்தின் பெயரை 'பத்மாவத்' என படக் குழுவினர் மாற்றினர். அதன் பின்னர், அப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனிடையே, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமசாலப் பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், ஹரியாணா உள்ளிட்ட மாநில அரசுகள் அந்தப் படத்துக்குத் தடை விதித்தன. இந்நிலையில், அதை எதிர்த்து படக் குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். அதுதொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்த பிறகும், வேண்டுமென்ற சில மாநில அரசுகள் படத்துக்குத் தடை விதித்துள்ளதாகவும், அவற்றை நீக்க உத்தரவிடுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. 'பத்மாவத்' திரைப்படத்துக்கு பல்வேறு மாநிலங்கள் விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி வரும் 25-ஆம் தேதியன்று அப்படம் நாடு முழுவதும் வெளியாகிறது.

பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படத்தில் அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம்; இசை - அமித் திரிவேதி. தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர்.

சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் பத்மாவத் படமும் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் பேட்மேன் படமும் ஒரே சமயத்தில் வெளியாக இருந்தது. அடுத்தடுத்த நாள்களில் இரு படங்களும் வெளியாவதால் நிச்சயம் ஏதோவொரு படத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்று எண்ணிய நிலையில் சஞ்சய் லீலா பன்சாலிக்காகத் தன்னுடைய பேட்மேன் படத்தை பிப்ரவரி 9 அன்று தள்ளிவைத்துள்ளார் அக்‌ஷய் குமார்.

இதுகுறித்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கூறியதாவது: இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளிவருவதால் அக்‌ஷய் குமாரிடம் வேண்டுகோள் வைத்தோம். உங்கள் படத்தைத் தள்ளி வெளியிடமுடியுமா என்று கோரிக்கை வைத்தோம். அக்‌ஷய் குமார் மிகப்பெரிய நடிகர். இரு படங்களும் ஒரே தேதியில் வெளியானால் எங்களுக்குப் பிரச்னைகள் வரும். நாங்கள் பட்ட அவஸ்தைகளை அவர் அறிந்துள்ளார். எனவே எங்கள் கோரிக்கைக்குப் பதில் அளிக்க அவருக்கு இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை. நீங்கள் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன் என்றார். அவர் எங்களுக்குச் செய்ததற்காக வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமாரின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com