பத்மாவத் படத்துக்குத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்

இந்தக் கோரிக்கைகளை நிராகரித்து பத்மாவத் படத்துக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது...
பத்மாவத் படத்துக்குத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்

சர்ச்சைக்குரிய பத்மாவத் திரைப்படத்தை நாடு முழுவதும் வெளியிட அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில அரசுகள் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தன. ஆனால் இந்தக் கோரிக்கைகளை நிராகரித்து பத்மாவத் படத்துக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில அரசுகள் மனுக்கள் தாக்கல் செய்தன. அந்த மனுக்களில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை மாற்றியமைக்க வேண்டும், அந்த படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று இரு மாநிலங்களும் கோரிக்கை விடுத்தன.

இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட்டது. அப்போது பத்மாவத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி, இடைக்காலத் தடைகோரும் மனுக்களை உடனடியாக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார். எனினும், உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன.23) இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

முன்னதாக, பத்மாவத் திரைப்படம் தொடர்பாக தொடுக்கப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பத்மாவத் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், பத்மாவத் திரைப்படத்தை நாடு முழுவதும் வரும் 25ஆம் தேதி வெளியிடவும் அனுமதியளித்தது. பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிப்பது தொடர்பான உத்தரவுகளை எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று அனைத்து மாநிலங்களையும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், சர்ச்சையில் சிக்கிய பத்மாவத் படத்துக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. இதனால் நாளை மறுநாள் (ஜன. 25) எவ்விதச் சிக்கலுமின்றி பத்மாவத் படம் வெளியாகவுள்ளது.

பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோன், ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில், ராஜபுத்திர ராணி பத்மாவதிக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக குற்றம்சாட்டி, பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இந்தப் படத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பத்மாவதி என்ற பெயர், பத்மாவத் என்று மாற்றம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com