'காலா' படத்துக்கு தடை கோரிய மனு: ரஜினிக்கு நோட்டீஸ்!

காலா படத் தயாரிப்புக்குத் தடை கோரிய வழக்கில் ரஜினிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
'காலா' படத்துக்கு தடை கோரிய மனு: ரஜினிக்கு நோட்டீஸ்!

காலா படத் தயாரிப்புக்குத் தடை கோரிய வழக்கில் ரஜினிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா' என்ற கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை நடிகர் தனுஷின் பட தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் தலைப்பு, கதையைப் பயன்படுத்த தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சென்னை காரம்பாக்கம் ஜி.எஸ்.ஆர்.வின் கிரியேஷன்ஸ் உரிமையாளர் கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னைப் பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ரஜினிகாந்த் நடிக்கும் காலா என்ற கரிகாலன் படத்தின் தலைப்பும், கதையின் மூலக்கருவும் என்னுடைய உருவாக்கம். நடிகர் தனுஷ், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் இந்தக் கதைக்கு மறுவடிவம் கொடுத்து படத்தை எடுத்து வருகின்றனர். எனவே, காலா படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்' என கோரியிருந்தார். 

வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா. இரஞ்சித் தாக்கல் செய்த மனுவில், ''காலா' படத்தின் கதையை யாரிடம் இருந்தும் திருடவில்லை. மனுதாரர், கரிகாலன் என்ற பெயரில், தனது கதையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார். ஒரு படத்தின் கதையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலோ அல்லது தமிழ்நாடு படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலோ பதிவு செய்திருந்தால், ஒரு ஆண்டுக்குள் அந்த தலைப்பில் படம் எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று, தலைப்பின் பதிவை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால், படத்தின் தலைப்பு தானாகவே காலாவதியாகி விடும். கரிகாலன் என்ற தலைப்பை மனுதாரர் கடந்த 1996-ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு பின்பு கரிகாலன் என்ற தலைப்பின் பதிவை மனுதாரர் புதுப்பிக்கவில்லை. எனவே, இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை. நடிகர் ரஜினிகாந்தை 1991-1992-ஆம் ஆண்டில் சந்தித்து கரிகாலன் படத்தின் கதையை தெரிவித்ததாக மனுதாரர் கூறி உள்ளார். நடிகர் ரஜினிகாந்தை ஏராளமானோர் சந்தித்து வருகின்றனர். அனைவரையும் ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் ஆகும். மேலும் அவர் மனுதாரரை பார்த்ததில்லை. பிரபலமான நடிகர்கள் நடிக்கும் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தால் பிரபலம் ஆகலாம் என்ற விளம்பர நோக்கத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் காப்புரிமைச் சட்டத்தின்கீழ் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இம்மனுவை உயர் நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனக் கோரினர். வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், 'இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார். 

இதையடுத்து 'காலா' படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராஜசேகரன். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா.இரஞ்சித், வொண்டர்பார் பட நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அதற்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com