கடந்த ஒரு வருடத்தில் இளையராஜா: விருதுகளும் சர்ச்சைகளும்!

ஒருவருட காலக்கட்டத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு...
கடந்த ஒரு வருடத்தில் இளையராஜா: விருதுகளும் சர்ச்சைகளும்!

கடந்த வருட ஜூன் மாதம் முதல் இந்த வருடப் பிறந்தநாள் கொண்டாட்டம் வரை இந்த ஒருவருட காலக்கட்டத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு:

2017

ஜூன் 2: 74-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

இசையமைப்பாளர் இளையராஜா தனது பிறந்த நாளில் ரசிகர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.

தனது 74-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 2) சென்னை காமராஜர் அரங்கத்தில் ரசிகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் பங்கேற்ற அவர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். காமராஜர் அரங்கத்துக்கு வந்த நடிகர் கமல்ஹாசன், இளையராஜாவுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். 'காலா’ படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஜூன் 3: பூங்காற்று திரும்புகிறதா?

சிம்பு நடித்த அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் வைரமுத்து, இளையராஜா ஆகிய இருவருமே பணியாற்றியுள்ளார்கள், பல வருடங்களுக்குப் பிறகு.

இந்தப் படத்தில் ரோட்டுல வண்டி ஓடுது என்கிற பாடலை இளையராஜா பாடினார். அதேபோல படத்தின் அறிமுகப் பாடலை வைரமுத்து எழுதினார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பதால் இது சாத்தியமானது. யுவன் இசையமைப்பில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை போன்ற படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார் வைரமுத்து.

ஜூலை 2: இசை இயல்பாக வர வேண்டும்!

சென்னை தியாகராய நகர் கிருஷ்ண கான சபாவில் யக்ஞராமன் இசை, நாடக, நாட்டிய விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. "இஸ்ரோ' முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு "யக்ஞராமன் வாழும் சாதனையாளர்' விருதும், வளரும் இசைக்கலைஞர்கள் சந்தீப் நாராயணன், எஸ்.ஜே.அர்ஜூன் கணேஷ், கே. சத்யநாராயணன் ஆகியோரின் தனித்திறமையைப் பாராட்டி "யக்ஞராமன்' விருதும் வழங்கினார். தொழிலதிபர்நல்லி குப்புசாமி வரவேற்றார். ,கிருஷ்ண கான சபா பொதுச் செயலர் ஒய்.பிரபு நன்றி தெரிவித்தார்.

இதில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது : இசையைக் கற்றுக் கொடுப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கற்றுக்கொண்டு இசையமைப்பவர்களும் உள்ளனர். ஆனால், அனைத்துப் பாடல்களும் ரசிகர்களை சென்றடைவதில்லை. ரசிகர்களுக்காக பாடல்களை இசையமைக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கேற்ப அப்பாடல்கள் இருக்கவேண்டும். ரசிகர்களுக்காகவே பாடல்கள் பிறக்கின்றன.

அவ்வகையான பாடல்கள் நிச்சயம் ரசிகர்களைச் சென்றடைவதோடு இசையமைப்பவருக்கும் பெருமை சேர்க்கிறது. அதற்கேற்பதான் நானும் இசையமைத்துள்ளேன். இன்றளவும் நான் இசையைக் கற்றுக்கொண்டும், வாசித்தும் வருகிறேன். இசை இயல்பாக வர வேண்டும். இயல்பாக வரும்போது அது மீண்டும் இயல்பாக இறைவனைச் சென்றடையும்.

தியாகராஜ பாகவதர், பால முரளி கிருஷ்ணா, எனது குருவான டி.வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட இசை மேதைகள் அவ்வாறே இசையமைத்துள்ளனர். அது போன்று சினிமாவில் இசையமைக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் தெய்வீகம்தான் என்றார் அவர்.

ஜூலை 10: சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இளையராஜா

மாணவர்கள் அயராது உழைத்தால் விரும்பும் இடத்தைக் கண்டிப்பாகப் பெற முடியும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சாய்ராம் கல்விக்குழும நிறுவனர் லியோமுத்து நினைவேந்தல் விழா நடைபெற்றது. 40 மாணவர்களுக்கு எவ்விதக் கட்டணமும் பெறாமல் இலவச பொறியியல் படிப்பு வழங்கும் ஆணையை வழங்கி அவர் மேலும் பேசியது:

மாணவர்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் நிறைய சாதியுங்கள். சாதிக்க நினைப்பவர்கள் வெறும் கனவு கண்டு கொண்டு இருந்தால் மட்டும் போதாது. கனவு காண்பதை விட்டுவிட்டு நீங்கள் சாதிக்க விரும்பும் துறையில் முழு முயற்சியுடன் ஈடுபடுங்கள். அல்லும் பகலும் அயராது உழைத்தால் நீங்கள் விரும்பும் இடத்தைப் பெற முடியும் என்றார் அவர்.

பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, சாய்ராம் கல்விக்குழுமத் தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, முதன்மைச் செயல் அலுவலர் சாய் பிரகாஷ் லியோ முத்து, அறங்காவலர் ஷர்மிளா ராஜா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

செப்டம்பர் 9: ஸ்மூல் தளத்தில் இளையராஜா பாடல்களைப் பாடத் தடை!​

ஸ்மூல் என்ற செயலி உலகளவில் இசை ரசிகர்களிடையே புகழ்பெற்றது. பாடகர்கள் தங்கள் திறமையை உலகுக்கு வெளிப்படுத்த இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். கரோக்கி எனப்படும் தொழில்நுட்பத்தின்படி, பாடலின் பின்னணி இசை ஒலிக்க, நீங்கள் பாடல் வரிகளைக் கொண்டு பாடிப் பதிவு செய்யவேண்டும். இது ஸ்மூலில் சேகரிக்கப்படும். இதை ஃபேஸ்புக், ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளலாம். டூயட், இருவர் பாடும் பாடல்களில் நீங்கள் பாடிய பாடலில் இன்னொரு நபரும் பாட வாய்ப்புண்டு. இதில் சில பாடல்களை மட்டுமே இலவசமாகப் பயன்படுத்த முடியும். மற்ற பாடல்களுக்கு மாதத்துக்கு ரூ. 110 கட்டணமாக ஸ்மூலில் வசூலிக்கப்படுகிறது. 

இதுபோன்று கட்டணம் வசூலிப்பதுதான் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அனுமதியின்றி இளையராஜாவின் பாடல்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஸ்மூல் நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து இளையராஜாவின் பாடல்கள் ஸ்மூல் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் ஒரு பேட்டியில் கூறியதாவது: ஸ்மூல் நிறுவனம் வணிக ரீதியாக ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துகிறது. அனுமதி பெறாமல் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானதாகும். ஸ்மூல் செயலியைப் பயன்படுத்துவோரிடம் பணம் வசூலிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். 

ராஜாவின் பாடல்களை இலவசமாக வழங்க எந்தத் தடையும் இல்லை. பல இணையத்தளங்களில் ராஜாவின் பாடல்கள் மக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் ராஜாவின் பாடல்களை வைத்து பணம் சம்பாதிக்கும்போது அதற்கு முறைப்படி அனுமதி வாங்கவேண்டும். இது அனைவருக்குமான காப்புரிமை பிரச்னை. ஸ்மூலின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். அவர்களின் பதிலை வைத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

இளையராஜாவின் பாடல்கள் ஸ்மூல் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது இசை ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

கடந்த மார்ச் மாதம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமை பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். இந்நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார் எஸ்.பி.பி.

செப்டம்பர் 30: ஃபேஸ்புக் லைவில் ரசிகர்களுடன் உரையாடல்!

இசையமைப்பாளர் இளையராஜா, ஃபேஸ்புக் லைவ் வழியாக ரசிகர்களிடம் கலந்துரையாடினார். ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. 

தன் இசைக் குழுவினரோடு நவராத்திரி, ஆயுத பூஜை விழாக்களில் கலந்து கொண்ட இளையராஜா அப்போது பேசியதாவது:

உலகில் உள்ள எல்லா இசை ஆளுநர்களும் அப்பா, அம்மா வழியிலோ அல்லது குருவின் வழி நடத்தலிலோ வந்திருப்பார்கள்.  நான் அப்படி இல்லை. எந்தப் பயிற்சியும் பெற்றதில்லை. சாதாரண கிராமத்தில் இருந்து வந்தவன். நான் இசைக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன் என்று சொல்வதைவிட, இசை எனக்காக செய்ததைக் கணக்கிட முடியாது.

இசை எனக்காக நிறைய செய்தது என்று சொல்வதைவிட, இசை என்னையே உருவாக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. எனக்கு எவ்வளவு இசை தெரியும் என்பதை விட, இசைக்கு என்னைத் தெரிந்திருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியமாகப் பார்க்கிறேன்.

சிவபெருமானை நினைத்து மாணிக்கவாசகர் "நமச்சிவாய' என்ற மந்திரத்தை திருவாசகத்தில் கூறியிருக்கிறார். சிவபெருமான் கொடுத்துதானே இதை மாணிக்க வாசகர் சொல்லியிருக்கிறார். ஆகவே, மாணிக்கவாசகர் சொன்ன "நமச்சிவாய' மந்திரத்தை நாம் பாடினாலும் அது சிவபெருமான் சொல்லி பாடுவது என்ற எண்ணத்தில்தான் திருவாசகத்துக்கு இசை வடிவம் கொடுக்கும் மனநிலை வந்தது.  

நல்லதும் கெட்டதும் அனைத்தும் சேர்ந்தால்தான் வாழ்க்கை முழுமை பெரும். நல்லது மட்டுமே இருந்தால் அது முழுமை அடையாது.

கலையில் எந்த வடிவமாக இருந்தாலும் அதைச் செயல்படுத்திக் காட்டவேண்டும். ஆனால் நவீன இசையில் செயல்பாடு இல்லை. புரோகிராமிங் மட்டும் தான் உள்ளது. அதை இசை என யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். எனவே நவீன இசையை பிளாஸ்டிக் இசை எனக் கூறலாம். 

மற்ற மொழிப் படங்களுக்கு இசையமைக்கும்போது அந்த மொழியைச் சார்ந்த மண்ணின் கலாசாரத்தை அறிந்துகொள்வது முக்கியம். மொழியை அறிந்துகொள்வதை விட மக்களின் வழக்கங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

கமல், அருமையான நடிகர். நன்றாகவும் பாடுவார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருந்து என்ன கேட்டாலும் பதில் சொல்வார். நல்ல இசை ரசனை அவருக்கு உண்டு. அவர் என்னைத் தேர்வு செய்கிறார். அதனால் அவருடன் இணைந்து பல படங்கள் செய்கிறேன்.  

ஃபேஸ்புக் லைவில் எப்போது அடுத்ததாக வருவீர்கள் எனக் கேட்கிறார்கள். இது எப்படி உள்ளது என்றால் இசையை விட்டு எப்போது வெளியே வருவீர்கள் எனக் கேட்பதுபோல உள்ளது என்றார்.

2018

ஜனவரி 16: மாரி 2 படத்தில் இளையராஜா பாடிய பாடல்!

தனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் மாரி 2 படத்தில் இளையராஜா பாடியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் இளையராஜா ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

என்ன ஒரு தெய்வீக அனுபவம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் என்று தனுஷ் இதுகுறித்து ட்விட்டரில் எழுதியுள்ளார்.

ஜனவரி 20: திருமலையில் இளையராஜா

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க தமிழக வணிக வரித் துறை அமைச்சர் எம்.பி.சம்பத், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் திருமலைக்கு வந்தனர். அவர்கள் காலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தனர். தரிசனம் முடித்துத் திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதத்தை வழங்கினர். 

ஜனவரி 25: இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, (ஜன. 25) அன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இது, நாட்டிலேயே 2-ஆவது உயரிய விருதாகும். நிகழாண்டில் பத்ம விருதுகளுக்கு மொத்தம் 15,700-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதில் 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 73 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 26: இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

கவிஞர் வைரமுத்து, பத்ம விபூஷண் பெறவுள்ள இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் எழுதியுள்ளதாவது:

பத்ம விருதுகள்  பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்” 
- என்ற காதல் ஓவியம்  வரிகளால் வாழ்த்துகிறேன் என்று வைரமுத்து வாழ்த்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "பத்ம விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்துள்ளார். எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும், நாடும், தமிழகமும் பெருமை கொள்கிறது' என்று கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

பத்ம விபூஷண் விருது குறித்து இளையராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பத்ம விபூஷண் விருதுக்காக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறையில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு மூலம் அறிவித்தனர். இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று என்னிடம் கேட்டனர், அதற்கு நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிலளித்தேன். அப்போது நீங்கள் ஒப்புக் கொள்வதால் இந்த விருது பெருமை அடைகிறது என்று தெரிவித்தனர். 

இது தமிழுக்கும், தமிழ மக்களுக்கும் கிடைத்த கௌரவம். மேலும், தமிழ் மக்கள் மீதும், தமிழகம் மீதும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வைத்துள்ள மரியாதையை இது காட்டுகிறது என்றார்.

ஜனவரி 26: விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்துக்கு இளையராஜா - யுவன் - கார்த்திக் ராஜா இசை!

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட தருணத்தில் புதிய தகவல் ஒன்றை வழங்கினார் யுவன் சங்கர் ராஜா.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள மாமனிதன் படத்துக்கு இளையராஜாவும் அவருடைய இரு மகன்களும் இணைந்து இசையமைக்கவுள்ளார்கள். இதுகுறித்து யுவன் ட்வீட் செய்ததாவது: 

இந்த சந்தோஷமான தருணத்தில் வொய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக இச்செய்தியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். எங்களுடைய அடுத்தப் படத்தில் என் தந்தை இளையராஜா, கார்த்திக் ராஜா, நான் என மூவரும் முதல்முறையாக இணைந்து இசையமைக்கவுள்ளோம், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்காக என்று கூறினார்.

ஜனவரி 27: முதல்வர் வாழ்த்து!

இசை உலகின் தலை சிறந்த இசையமைப்பாளரான இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்ற அவருக்கு, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். 

பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:

இசை உலகின் உச்சம் தொட்ட சாதனையாளர் இளையராஜாவுக்கு, பத்மவிபூஷண் விருது வழங்கி கெளரவித்திருப்பது பெருமைக்குரியது. சமூக அமைப்பின் அடித்தட்டில், மிகவும் ஏழ்மைப்பட்ட இசைக் குடும்பத்தில் பிறந்த இளையராஜாவும், அவரது சகோதரர்களும் இசைப் பயணத்தில் சோர்வறியாது பயணித்து வருபவர்கள். அவரது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் கிராம இலக்கியத்தை ஒருங்கிணைத்து, மேடையேற்றி வெற்றி கண்டவர்; அரசியல் பரப்புரைக் களத்தில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றவர். அவரைத் தொடர்ந்து இளையராஜா இசை உலகில் எதிர்கொண்ட சவால்களைத் தாண்டி, திரையுலகில் முன்னேறி சாதனைகள் படைத்தவர். அவரது இசைப் பயணம் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளது என்று கூறினார்.

பிப்ரவரி 7: நன்றி தெரிவித்தார் ராஜா!

"பத்மவிபூஷண்' விருது அறிவிக்கப்பட்டதற்காக தனக்கு வாழ்த்துத் தெரிவித்தோருக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். ஆண்டவனின் அருளாலும், உங்களின் அன்பாலும் மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன். அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி என்று தமது அறிக்கையில் இளையராஜா தெரிவித்தார். 

பிப்ரவரி 9: பால்கி படத்துக்கு ராஜா இசையமைக்காதது ஏன்?

தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் உருவான 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் இதே தினத்தில் வெளியானது. அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர்.

இதுவரை பால்கி இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசையமைத்தவர், இளையராஜா. ஆனால் பேட்மேன் படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இதனால் இளையராஜா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்நிலையில் பேட்மேன் படத்துக்கு இளையராஜாவைத் தேர்வு செய்யாமல் அமித் திரிவேதியைத் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு இயக்குநர் பால்கி அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த கிராமிய இசை படத்துக்குத் தேவைப்பட்டது. வட இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இசையாக இருக்கவேண்டும் என விரும்பினோம். திரிவேதி அதற்குப் பொருத்தமாக இருந்தார். இளையராஜா சாரிடம் பணிபுரிவதைக் கொடுப்பினையாக எண்ணுகிறேன். எனது அடுத்தப் படத்தில் மீண்டும் இளையராஜாவுடன் இணைகிறேன் என்று கூறியுள்ளார்.

மார்ச் 20: இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

இசைஞானி இளையராஜாவுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 43 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டன. 

மார்ச் 25: இயேசு உயிர்த்தெழுதல் குறித்த இளையராஜா கருத்தால் சர்ச்சை!

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சமீபத்தில் வருகை தந்த இளையராஜா, அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது

உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார்கள் என்று சொல்வார்கள். அடிக்கடி ஆவணப் படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என்பது நிரூபணமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒருவருக்குத்தான். 16 வயதில் ரமண மகரிஷிக்கு மட்டும் தான் உயிர்த்தெழுதல் நடந்துள்ளது என்றார். இளையராஜாவின் இந்தப் பேச்சு சர்ச்சையை உருவாக்கியது.

இளையராஜாவின் இந்தப் பேச்சு கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தி கிறிஸ்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக சிறுபான்மை மக்கள் நலக் கட்சி அறிவித்தது. மேலும் தன் பேச்சுக்கு இளையராஜா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது. 

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜாவை வீட்டை முற்றுகையிட சிறுபான்மை மக்கள் நலக் கட்சியைச் சேர்ந்த 35 பேர் முயன்றார்கள். இதற்கு அனுமதியளிக்க மறுத்த காவல்துறை அவர்களைக் கைது செய்தது. அவர்களைத் திருமண மண்டபத்தில் தங்கவைத்து பிறகு விடுதலை செய்தார்கள். இதையடுத்து இளையராஜாவின் வீட்டுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

மார்ச் 28: இளையராஜா மீது கிறிஸ்தவர்கள் போலீஸில் புகார்

இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க திருச்சி  மாவட்டச் செயலாளர் தி. செல்வராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பது:

இசைஞானி இளையராஜா, கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை கொச்சைப் படுத்தும் வகையில், இயேசுகிறிஸ்து உயிர்ப்பித்தல் குறித்த தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் தவக்காலம் நடந்து வரும் நிலையில் இதுபோன்று கூறியிருப்பது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 5: ஸ்ரீரங்கம் கோயிலில் இளையராஜா வழிபாடு

ஸ்ரீரங்கம் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த அவரை கோயிலின் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் வரவேற்று நம்பெருமாள், தாயார், கருடாழ்வார், ராமானுஜர், சக்கரத்தாழ்வார் ஆகிய சன்னதிகளில் வழிபட அழைத்துச் சென்றார்.

அப்போது இளையராஜா கூறியதாவது: ராமானுஜர் குறித்து நான் தயாரித்த டாக்குமெண்டரி படம் நன்றாக அமைந்ததால் அவரைத் தரிசனம் செய்ய வந்தேன் என்றார்.

அப்போது சுந்தர் பட்டர் தேவாரம், திருவாசகத்தை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இசையமைத்து சிடி-யாக வெளியிட்டதுபோல வைணவர்கள் போற்றும் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தையும் எளிய தமிழில் இசையுடன் கூடிய சிடி-யாக வெளியிட கோரிக்கை வைத்தார். அதற்கு இளையராஜா விரைவில் இதுகுறித்து நாம் பேசி முடிவு செய்வோம் என்றார்.

மே 12: அனுமதியின்றி இளையராஜாவின் பாடல்கள், சி.டி.க்கள் வெளியீடு: தனியார் நிறுவனம் மீது காவல் ஆணையரிடம் புகார்

இளையராஜாவின் அனுமதியின்றி அவரது பாடல்கள் அடங்கிய சி.டி.க்களை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யாவிடம் வழக்குரைஞர் சிவசாமி என்கிற தமிழன் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:

எனது கட்சிக்காரர் இளையராஜா பிரபல இசையமைப்பாளராக உள்ளார். அவரது அனுமதியின்றி அவரது பாடல்களை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சி.டி.க்களாக வெளியிட்டு வருகிறது. அந்த நிறுவன உரிமையாளர் இமெயில் முகவரியில் அவரது பெயரையும் இணைத்துப் பயன்படுத்தி வருகின்றார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பொது இடங்களில் இளையராஜா எங்களது ஜாதியைச் சேர்ந்தவர் என்றும், குடும்ப நண்பர் என்றும் கூறிவருகிறார். எனது கட்சிக்காரர் இளையராஜா பிரபல இசையமைப்பாளராக உள்ளார். அவரது அனுமதியின்றி அவரது பாடல்களை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சி.டி.க்களாக வெளியிட்டு வருகிறது. அந்த நிறுவன உரிமையாளர் இமெயில் முகவரியில் அவரது பெயரையும் இணைத்துப் பயன்படுத்தி வருகின்றார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பொது இடங்களில் இளையராஜா எங்களது ஜாதியைச் சேர்ந்தவர் என்றும், குடும்ப நண்பர் என்றும் கூறிவருகிறார்.

மேலும், இளையராஜா பெயரைப் பயன்படுத்தி தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் வணிகர்களிடம் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார். ஆகவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மே 15: திருநள்ளாறு கோயிலில் இளையராஜா வழிபாடு 

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் நவகிரக தலங்களில் சனீஸ்வர பகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சன்னிதிகொண்டு அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வந்தார். அவர் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ பிரணாம்பிகை ஆகிய தெய்வங்களின் சன்னிதிகளில் வழிபாடு செய்தார்.

பின்னர், தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டார். சிறப்பு ஆராதனைக்குப் பின் அவருக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதங்கள் வழங்கினர். சனீஸ்வர பகவானை வழிபடுவதன் பயன்கள் குறித்தும், வழிபாடு முறைகள் குறித்தும், தற்போது கோயிலில் நடைபெற்றுவரும் பிரமோத்ஸவம் குறித்தும் சிவாச்சாரியார்கள் இளையராஜாவுக்கு விளக்கிக் கூறினர். சுமார் ஒரு மணி நேரம் கோயிலில் பல்வேறு சன்னிதிகளில் வழிபாடு செய்த அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மே 18: பங்காரு அடிகளாருடன் இளையராஜா சந்திப்பு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் பங்காரு அடிகளாரிடம் இசையமைப்பாளர் இளையராஜா ஆசி பெற்றார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு இளையராஜா வந்தார். அங்கு சித்தர்பீடத்தின் சார்பாக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். பின்னர் அருட்கூடத்தில் இருந்த பங்காரு அடிகளாருக்கு அவர் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார். சித்தர்பீடத்தின் அருட்பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டன.

ஜூன் 2: 75-வது பிறந்தநாள்

இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். சென்னை வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில் ரசிகர்கள் இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

*

2017-ல் இளையராஜா இசையமைத்த படங்கள்

1. முத்துராமலிங்கம்
2. எங்க அம்மா ராணி
3. ஒரு இயக்குநரின் காதல் டைரி
4. கிளிண்ட் (மலையாளம்)
5. காதலோ ராஜகுமாரி (தெலுங்கு)
6. களத்தூர் கிராமம்

2018-ல் இளையராஜா இசையமைத்த படங்கள் (மே மாதம் வரை)

1. நாச்சியார்
2. சிலநேரங்களில்
3. 18.05.2009

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com