காலா படத்திற்கு எதிராக புதிய நோட்டீஸ்: மீண்டும் சிக்கல்?

ரஜினிகாந்தின் 'காலா' படத்திற்கு எதிராக நீதிமன்றத்திலிருந்து புதிய  நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டிருப்பது,  மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
காலா படத்திற்கு எதிராக புதிய நோட்டீஸ்: மீண்டும் சிக்கல்?

புதுதில்லி: ரஜினிகாந்தின் 'காலா' படத்திற்கு எதிராக நீதிமன்றத்திலிருந்து புதிய  நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டிருப்பது,  மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காலா'. தமிழகத்தின் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு சென்று, அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவிப் பகுதியில் செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்தவர் திரவியம் நாடார். காலா திரைப்படம் அவரது வாழ்வினை அடிப்டையாகக் கொண்டதென்று கூறப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 'காலா' படத்திற்கு எதிராக, திரவியம் நாடார் குடும்பம் சார்பாக நீதிமன்றத்திலிருந்து புதிய  நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டிருப்பது, மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மும்பை கிழக்கு சியான் பகுதியில் வசிக்கும், மறைந்த திரவியம் நாடாரின் மகன் ஜவகர் நாடார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சார்பில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் சையத் எஜாஸ் அப்பாஸ் நக்வி என்பவர் மூலமாக, ரஜினிகாந்துக்கு குறிப்பிட்ட வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், ‘காலா’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரவியம் நாடாரின் நற்பெயருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இழுக்கு ஏற்படுத்துவது போல அமைந்துள்ளது என்றும், எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 36 மணி நேரத்துக்குள் இதுவரை ‘காலா’ படம் மற்றும் அதன் கதை குறித்து நீங்கள் பொதுவில் கூறி வந்த கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து என் கட்சிக்காரரின் குடும்பத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் என்றும், இல்லையேல் கிரிமினல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அத்துடன் இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற நோட்டீசின் பிரதி தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் மற்றும் தணிக்கை குழுவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

காலா திரைப்பட ரிலீசுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இதன் மூலம் எதுவும் புதிய சிக்கல் உருவாகுமா என்று தெரியவில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com