காவிரிக்காக நான் குரல் கொடுத்தாலும் என் படங்களை கர்நாடகாவில் தடுப்பதில்லை: விஷால் வியப்பு!

பெங்களூருக்குச் சென்று தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்குங்கள் என்று கூறியுள்ளேன்...
காவிரிக்காக நான் குரல் கொடுத்தாலும் என் படங்களை கர்நாடகாவில் தடுப்பதில்லை: விஷால் வியப்பு!

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'காலா' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜூன் 7-ம் தேதி திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 'காலா' திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிடவிட மாட்டோம் என்று கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் அறிவித்துள்ளனர். கன்னட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்ற கர்நாடகத் திரைப்பட வர்த்தகச் சபையும் கர்நாடகத்தில் "காலா' திரைப்படத்தை வெளியிட தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் நடிகருமான விஷால் கூறியதாவது:

காலா படப்பிரச்னையில் கர்நாடக முதல்வர் தலையிட்டு பிரச்னையைத் தீர்க்க முன்வரவேண்டும். ஏனெனில் காலா படத்துக்கு நேர்ந்துள்ள இப்பிரச்னை மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கும்.

சிறிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து ரஜினி சார் நடித்த காலா படத்தை வெளியிடக்கூடாது என்று கோரிக்கைகள் வைக்கின்றன. வருங்காலத்தில் மேலும் சில படங்களுக்கு இதுபோல செய்யமாட்டார்கள் என்பது
என்ன நிச்சயம்?  

என் மாநில நலனுக்காகப் பேசுவது என் உரிமை. ஆபத்தான கருத்தை ஒன்றும் ரஜினி சார் சொல்லிவிடவில்லை. இருந்தும் அவர் படத்தைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.

காவிரி பிரச்னை குறித்து நான் இன்னும் அதிகமாக குரல் கொடுத்துள்ளேன். பெங்களூருக்குச் சென்று தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்குங்கள் என்று கூறியுள்ளேன். தண்ணீர் கேட்பது சட்டப்படி என் உரிமையாகும். அதை மறுப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. 

நான் நடித்துள்ள இரும்புத்திரை படம் கர்நாடகாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காவிரி குறித்த என் நிலைப்பாட்டை உரக்கக் கூறிய பிறகும் அவர்கள் என் படத்தைத் தடுக்கவில்லை. அதிகக் கவனம் கிடைக்கப் பெரிய நடிகர்கள் நடித்துள்ள பெரிய படங்களைக் குறிவைக்கிறார்கள் என்று கூறியுள்ளார் விஷால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com