கர்நாடகாவில் வெளியானது காலா: டிக்கெட் விற்பனை தொடக்கம்!

படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளதால் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட முயற்சிகள்...
கர்நாடகாவில் வெளியானது காலா: டிக்கெட் விற்பனை தொடக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. 

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  காலா' திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கன்னட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கர்நாடக திரைப்பட வர்த்தகசபை, கர்நாடகத்தில் காலா' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், காலா' படத்தை கர்நாடகத்தில் திரையிட கன்னட மக்கள் விரும்பவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ், மகள் ஐஸ்வர்யா, பட தயாரிப்பு நிறுவனமான வன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், காலா' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் காலா' படத்தை திரையிடும் உரிமை பெற்ற சி' நிறுவனத்தின் அலுவலகத்தை பிரவீண் ஷெட்டி தலைமையிலான கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பினர் சூறையாடினர். பெங்களூரு காந்திநகரில் உள்ள திரைப்பட விநியோகிப்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர், அலுவலகத்துக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த காலா' படத்தின் சுவரொட்டிகளை கிழித்தெறிந்தனர். மேலும், காலா படத்தை திரையிட்டால், கடும் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக கன்னட அமைப்பினர் மிரட்டினர்.

பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார், சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 120 திரைகளில் காலா' படத்தை திரையிட விநியோகிப்பாளர் திட்டமிட்டிருந்தார். ஆனால் படம் வெளியானால் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் இன்று கர்நாடகாவில் காலா படம் வெளியாகவில்லை. பெல்லாரியிலுள்ள ராதிகா திரையரங்கில் மட்டும் இன்று காலை காலா வெளியானது.

காலா படம் பார்க்க பெங்களூரில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் படம் வெளியாகாததால் சோகமானார்கள். காலா படம் கர்நாடகாவில் வெளியாகாததால் ரஜினி ரசிகர்கள் பலரும் ஓசூருக்குப் படையெடுத்துள்ளார்கள்.

எனினும் படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளதால் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெங்களூர் - மல்லேஸ்வர் பகுதியிலுள்ள மந்த்ரி மால் வளாகத்தில் காலா படம் வெளியாகியுள்ளது. போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினரை அப்புறப்படுத்தியபிறகு காலா திரையிடப்பட்டது. இன்று அந்த வளாகத்தில் உள்ள திரையரங்குகளில் 8 காட்சிகளுக்கு காலா திரையிடப்படவுள்ளது. இதேபோல பெங்களூரில் உள்ள ஒவ்வொரு மல்டிபிளெக்ஸிலும் தீவிர காவல்துறைப் பாதுகாப்புடன் காலா படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com