தமிழ்நாட்டில் விஜய், அஜித் படங்களை விடவும் குறைவாக வசூலித்த ‘காலா!

மெர்சல், கபாலி, விவேகம் படங்களை விடவும் தமிழ்நாட்டில் காலா படம் குறைவாகவே வசூலித்துள்ளது...
தமிழ்நாட்டில் விஜய், அஜித் படங்களை விடவும் குறைவாக வசூலித்த ‘காலா!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலிக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளியான காலா படம் சென்னையில் மட்டும் முதல் நாளன்று ரூ. 1.76 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வருடமாக இரு படங்கள் சென்னையில் முதல்நாளன்று அதிக வசூலை எட்டின. ஆகஸ்ட் 24 அன்று வெளியான அஜித் நடித்த விவேகம் படத்தின் முதல் நாள் சென்னை வசூல் - ரூ. 1.21 கோடி. பிறகு தீபாவளி சமயத்தில் வெளியான விஜய் நடித்த மெர்சல் படம் சென்னையில் முதல் நாளன்று ரூ. 1.52 கோடியை அள்ளியது. இந்நிலையில் தற்போது டிக்கெட் விலை அதிகமானதாலும் ரசிகர்களின் அதிக வரவேற்பினாலும் அவ்விரு படங்களின் வசூலைத் தாண்டியுள்ளது காலா படம். இந்தப் படம் முதல் நாளன்று சென்னையில் ரூ. 1.76 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாளன்று சென்னையில் ரூ. 1.12 கோடி வசூலித்தது.

காலாவுக்கு நிகராக சென்னையில் முதல் நாளன்று வேறு எந்தப் படமும் இந்த வசூலை எட்டியதில்லை. இந்தப் புள்ளிவிவரம் காலா படத்துக்கும் ரஜினி - பா.இரஞ்சித் ஆகிய இருவருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

எனினும், சென்னையில் சாதனை வசூலை அடைந்தாலும் தமிழ்நாடு அளவில் மெர்சல், விவேகம் படங்களை விடவும் குறைவான வசூலை அடைந்துள்ளது காலா படம். இது ரஜினி ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. நேற்றைய முதல் காட்சிக்குப் பிறகு ரசிகர்கள் தெரிவித்த சாதகமான விமரிசனங்களால் காலா படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்நாள் முடிவில் கிடைத்துள்ள வசூல் விவரங்கள் அதை  எதிரொலிக்கவில்லை.

தமிழகத்தில் 600 திரையரங்குகளில் வெளியான காலா படம், முதல் நாளன்று ரூ. 15 கோடி வசூலித்துள்ளது. 

ஆனால் கடந்த வருடம் வெளியான அஜித் நடித்த விவேகம் படம் முதல் நாளன்று ரூ. 16.20 கோடி வசூலித்தது. அதற்குப் பிறகு வெளிவந்த விஜய் நடித்த மெர்சல் படம் ரூ. 23 கோடி வசூலித்து புதிய சாதனையைப் படைத்தது. கபாலியின் முதல்நாள் தமிழ்நாட்டு வசூல் - ரூ. 21 கோடி. இதை விஜய் படம் தாண்டியதால், நேற்று காலா படம், மெர்சல் பட வசூலைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மெர்சல், கபாலி, விவேகம் ஆகிய படங்களை விடவும் தமிழ்நாட்டில் காலா படம் குறைவாகவே வசூலித்துள்ளது. மேலும், காலா படத்தின் முதல்நாள் தமிழ்நாட்டு வசூல் ரூ. 12 கோடி என்றும் சில தரப்பினரால் கூறப்படுகிறது. இத்தகவல்கள் திரைத்துறைச் செய்தியாளர்களால் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு: முதல்நாள் வசூல்

மெர்சல்: ரூ. 23 கோடி
கபாலி: ரூ. 21 கோடி
விவேகம்: ரூ. 16.20 கோடி
காலா:  ரூ. 15 கோடி 

எனினும் முதல்நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வத் தகவல்களை வுண்டர்பார் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com