பிரபல இந்தி நடிகர் சல்மான் கானை கொல்ல சதி! என்ன காரணம்?

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
பிரபல இந்தி நடிகர் சல்மான் கானை கொல்ல சதி! என்ன காரணம்?

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சல்மான் கான் இரண்டு நாட்களில் ஜாமீனில் வெளிவந்தார். 

அதைத் தொடர்ந்து வெளிநாடு செல்ல அனுமதி கோரி நடிகர் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. 

சல்மான்கான் மான் வேட்டையாடியது குறித்து பிஷ்னாய் எனும் இன மக்கள் புகார் அளித்திருந்தனர். அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நடிகர் சல்மான்கான் தங்களுக்கு விரோதி என தொடர்ந்து கூறி வந்தனர். அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாய் கடந்த ஜனவரி மாதம் சல்மான் கானை நிச்சயம் கொல்வோம் என்று பகிரங்கமாகக் கூறி பொதுவெளியில் மிரட்டல் விடுத்திருந்தார்.

லாரன்ஸ் பிஷ்னாய்
லாரன்ஸ் பிஷ்னாய்

இந்நிலையில் சல்மான் கானை கொல்ல சதி நடந்த பரபரப்பான தகவல் மும்பை பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. சல்மான்கானை கொல்ல திட்டமிட்டதாக சம்பத் நெஹ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். ஹரியானா சிறப்பு படை போலீஸார் சம்பத் நெஹ்ராவை கைது செய்தனர். லாரன்ஸ் பிஷ்னாயிடம் தான் சம்பத் நெஹ்ரா பணி புரிந்து வந்தான் என்பது கண்டறியப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் திறமை பெற்ற சம்பத் நெஹ்ராவை தனது திட்டத்துக்குப் பயன்படுத்த லாரன்ஸ் பிஷ்னாய் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ஹரியானா மாநில அரசியல் தலைவர் ஒருவரை கொல்ல முயன்றதாகவும், தொழில் அதிபர் ஒருவரைக் கடத்தி கோடிக்கணக்கில் பணம் பறித்ததாகவும் லாரன்ஸ் பிஷ்னாயின் அடியாட்கள் மீது பல வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 6-ம் தேதி சம்பத் நெஹ்ராவை ஐதராபாத்தில் ஹரியானா சிறப்பு போலீஸ் கைது செய்தது. பிடிபட்ட சம்பத் நெஹ்ரா நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

சம்பத் நெஹ்ரா ஹரியானா சிறப்பு படை போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்தது: ‘கடந்த ஜனவரி மாதம் சல்மான் கான் வீட்டை அவரது ரசிகர் என்று பொய் சொல்லி நோட்டம் பார்த்து விட்டு வந்தேன். சல்மானைக் கொல்லும் திட்டத்தை முடித்து விட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிடவும் முடிவு செய்து இருந்தேன். அன்றே அந்தக் கொலையை நிகழ்த்தியிருப்பேன், ஆனால் தப்பிக்க அங்கே சரியான வழி இல்லாததால் எனது திட்டம்  நிறைவேறவில்லை’ என்று கூறினான்.

அண்மையில் சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், அனில் கபூர், பாபி தியோல் போன்றோர் நடிப்பில் ரெமோ டிசெளசா இயக்கத்தில் ரேஸ் 3 படத்தின் டிரெய்லர் வெளியானது. சல்மான் கான் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சல்மான்கானை கொல்ல திட்டமிடப்பட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com