காதல் முக்கியம்தான், ஆனால் காமமும் தேவை என்கிறது இந்தப் படம்!

அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோஹர் ஆகிய நான்கு பிரபல பாலிவுட் இயக்குனர்கள்
காதல் முக்கியம்தான், ஆனால் காமமும் தேவை என்கிறது இந்தப் படம்!

அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோஹர் ஆகிய நான்கு பிரபல பாலிவுட் இயக்குனர்கள் ஒன்றிணைந்து இயக்கியிருக்கும் ஒரு படத்தை நெட்ப்ளிக்ஸில் அண்மையில் பார்த்தேன். இந்த நால்வர் அணி முன்னதாக இந்திய திரையுலகின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, 'பாம்பே டாக்கீஸ்’ எனும் படத்தில் இணைந்திருந்தார்கள். தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற தலைப்பில் மீண்டும் இணைந்துள்ளார்கள். ஒவ்வொரு கதையும் அரை மணி நேரம் என இரண்டு மணி நேரத்தில் நான்கு கதைகளை உருவாக்கியுள்ளனர்.

இந்தக் கதைகளில் ஆண் பெண் சார்ந்த உறவுச் சிக்கல்களை வித்யாசமான கோணத்தில் ஒவ்வொரு கதைகளிலும் காட்சிப்படுத்தியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக, அனுராக் காஷ்யப் மற்றும் திபாகர் பானர்ஜி இயக்கியிருக்கும் பகுதிகள் தற்காலத்தில் நாம் அன்றாடும் செய்திகளில் பார்க்கும், சமூகத்தில் இலைமறைவு காயாக நடக்கும் விஷயங்களின் பதிவாக உள்ளது. முதல் கதை நாயகியான ராதிகா ஆப்தே அக்கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். ஆங்கில பேராசிரியையான அவர் தன்னுடைய மாணவன் தேஜஸ் என்பவனுடன் பார்ட்டி முடிந்து வீடு திரும்புகிறாள்.

இருவரும் போதையில் தன்னிலை மறந்து, உறவு கொள்கின்றனர். ராதிகாவின் காதல் கணவர் வெளிநாட்டில் இருக்கவே, தனிமை வாழ்க்கையில் எவ்வித பிடிப்புமின்றி இருக்கும் அவளுக்கு தேஜஸுடனான அந்த உறவை தொடர விருப்பம் ஏற்படுகின்றது. தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் தேஜஸிடம் பகிர்ந்து கொள்ளும் ராதிகா, அவனும் அதே போல் உண்மையாக தன்னிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இந்நிலையில் நடாஷா என்ற சக மாணவியுடன் டேட்டிங் செய்கிறான் தேஜஸ். அந்த இளம் ஜோடியை பின் தொடர்ந்து சில தொல்லைகள் கொடுக்கும் அளவிற்கு ராதிகாவின் அத்துமீறல்கள் உள்ளது. தன்னுடைய மன அவஸ்தைகளை வீட்டில் தனியாக புலம்பித் தீர்த்துக் கொள்கிறாள். தேஜஸுடனான அந்த உறவு தற்காலிகமா அல்லது அதற்கு என்ன முடிவு என்பதை அனுராக் காஷ்யப் ஒற்றை வரி வசனத்தில் மிக அழகாக முடித்திருப்பார். 

இரண்டாவது கதை, ஜோயா அக்தர் இயக்கியது. ஒரே நாளில் நிகழக் கூடிய ஒரு சம்பவம். ஒரு அடுக்கு மாடி வீட்டின் பணிப்பெண், தனியாக வாழும் அவ்வீட்டு உரிமையாளரான இளைஞனுடன் மனைவி போலவே வாழ்கிறாள். பேச்சிலரான அவனுக்கு திருமணம் உறுதி செய்ய அவனது பெற்றோர் சொந்த ஊரிலிருந்து வருகின்றனர். அன்று மாலை இளைஞன் நேசிக்கும் பெண்ணும் அவனது குடும்பமும் இவர்கள் வீட்டுக்கு வருகின்றது. சுதா என்ற அந்தப் பணிப்பெண் அனைவருக்கும் தேநீர் தயாரித்துத் தருகிறாள். காதலியுடன் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு தேநீர் தர அந்த அறைக்குள் நுழைகிறாள் சுதா. பலவிதமான மனப்போராட்டங்கள் இருந்தும், முகத்தில் எதையும் வெளிக்காட்டாமல் தன் நிலை உணர்ந்து மெளனமாகவே அந்நொடிகளைக் கடந்து போகிறாள்.

இளைஞனின் தாயார் அவளிடம் அண்ணனுக்கு திருமணம் நிச்சயம் ஆகவிருக்கிறது, இனிப்பு எடுத்துக் கொள் என்று கூறுகிறாள். லிப்டுக்காக காத்திருக்கும் போது அடுத்த வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஒரு அழகான சுடிதாரைக் காட்டி, என் முதலாளி அம்மா தந்தாள் என்று இவளிடம் காண்பித்து, உன்னுடைய நாள் எப்படி போனது என்று கேட்க, சுதா இனிப்பை எடுத்து சாப்பிட்டபடி அந்த பெண்ணுக்கும் ஒரு இனிப்பைத் தருகிறாள். கசந்து போன அவள் மனத்துக்கு அத்தருணத்தில் அந்த இனிப்பு தான் ஒரே ஆறுதல். வர்க்க பேதத்தையும், சுதா போன்று அடித்தட்டு பெண்களின் திருமணமும், வாழ்க்கையும் கேள்விக்குறியாகவே இன்றளவும் தொடர்கிறது என்ற உண்மையை கோடிட்டு காட்டிச் செல்கிறது இத்திரைப்படம்.

போலவே, கரண் ஜோஹர் இயக்கியிருக்கும் பகுதியும் முக்கியமான ஒரு பிரச்னையை எடுத்துச் சொல்வதுதான். ஒரு இளம் மனைவி திருமணத்துக்குப் பிறகு கணவனிடத்தி எதிர்ப்பார்க்கும் விஷயங்கள் பல. அதில் முக்கியமானது தாம்பத்யம். மனைவியிடமிருந்து தனக்கு வேண்டியதை எல்லாம் கேட்காமலே பெறும் கணவன், குறைந்த பட்சம் அவளுக்கு அவனுடனான உறவு திருப்தியாக இருந்ததா என்று கூட கேட்பதில்லை. ஆண் மைய சமூகத்தில் பெண் என்பவள் வெறும் உடல், குழந்தைகள் பெற்றுத் தரும் இயந்திரம் என்றளவில் தான் இன்னும் இயக்குகிறது. ஆனால் மாற்றங்களின் தொகுப்பான நவீன யுகத்தில் பெண் தென் தேவை என்னவென்று தெரிந்து வைத்துள்ளாள். இந்தப் படத்தில் இளம் மனைவி கணவனிடம் கேட்க கூச்சப்பட்டு செய்யும் ஒரு செயலானது, அவளது திருமண வாழ்க்கையையே கேள்விக்குரியதாகிவிடுகிறது. காமம் என்பது எல்லா உயிருக்கும் ஏற்படும் இயற்கையான ஒரு விழைவு. இதில் ஆண் பெண் என பாகுபடுத்தி வைத்திருப்பது சமூக கட்டுப்பாடுகள். மனித வாழ்வின் ஆதாரமான இதில் ஆணின் விருப்பங்கள் மட்டுமே முக்கியம். பெண் சிரிக்கக் கூடாது, அப்படியே சிரித்தாலும், சத்தம் வெளியே வரக் கூடாது, தலையில் முக்காடு போட்டுத்தான் வெளியே வர வேண்டும், ஆண்களிடம் பேசக் கூடாது என இன்றளவும் பல கட்டுப்பாடுகள் படித்து முன்னேறிய குடும்பங்களிலும் தொடர்கிறது.

ஒரு பக்கம் அபாயகரமாக சீரழிந்து கொண்டிருக்கும் நிலை, இன்னொரு பக்கம் இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ள சிக்கல்கள் என இருவேறு பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளது இக்காலகட்டம். இதில் நடுநிலை என்பதை எல்லாம் காண முடிவதில்லை. இந்நிலையில் பெண்கள் எதை பின்பற்றுவது, எது சரி எது தவறு என்பதையெல்லாம் யோசிக்காமல் தங்கள் மனது சொல்வதை சரியென கொள்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையை, இன்பத்தை அவர்களே கட்டமைக்க விழைகிறார்கள்.

இத்தகைய பெண்களின் உதாரணங்களைத் தான் இந்த நான்கு கதைகளில் கூறியிருக்கிறார்கள். பேசா பொருளை பேசத் துணிந்தேன் எனும் வகையில் பொதுவெளியில் எளிதில் பேச முடியாத கதைகளை இந்த நான்கு இயக்குனர்களும் மிகச் சிறப்பாகவும், துணிச்சலாகவும் இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இத்தகைய திரைப்படங்கள் வரும் காலங்களில் திரைத்துறையில், நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்கும் வாய்ப்பினை அதிகப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com