நடிகர் திலீப் ‘அம்மா’ சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்குப் பிரபல நடிகைகள் கடும் எதிர்ப்பு!

மலையாளத் திரைப்பட நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு...
நடிகர் திலீப் ‘அம்மா’ சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்குப் பிரபல நடிகைகள் கடும் எதிர்ப்பு!

மலையாளத் திரைப்பட நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல கதாநாயகி ஒருவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காரில் கடத்திச் செல்லப்பட்டு, ஒரு கும்பலால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கேரள போலீஸார் விசாரணை நடத்தி, பல்சர் சுனி என்பவர் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நடிகர் திலீப்பை கேரள போலீஸார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி கைது செய்தனர். எனினும், 85 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, ஜாமீனில் நடிகர் திலீப் வெளியே வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற ‘அம்மா’ பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். காவல்துறையால் கைதானபோது ‘அம்மா’ அமைப்பு திலீப்பை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியது.

கடந்த 15 ஆண்டுகளாக ‘அம்மா’ அமைப்பின் தலைவராக இன்னொசென்ட் பொறுப்பு வகித்தார். வயது காரணமாக அப்பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து ‘அம்மா’ அமைப்பின் தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இதற்குப் பிறகு திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

இந்த நடவடிக்கைக்கு திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதையடுத்து நடிகர் சங்கத்தின் முடிவை எதிர்த்து ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் மற்றும் பிரச்னையில் தொடர்புடைய நடிகை ஆகிய நால்வரும் அம்மா சங்கத்திலிருந்து விலகியுள்ளார்கள். 

என் சக நடிகைக்கு எதிராக மனித நேயமற்ற முடிவை அம்மா அமைப்பு எடுத்துள்ளது. எனவே நான் விலகுகிறேன் என்று ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com