ஆந்திராவில் திரையரங்குகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு! தமிழகத்தில் வழக்கம் போல இயங்கும்!

தமிழகம் போலில்லாமல் ஆந்திரா, தெலங்கானாவில் திரையரங்குகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன...
ஆந்திராவில் திரையரங்குகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு! தமிழகத்தில் வழக்கம் போல இயங்கும்!

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக வியாழக்கிழமை (மார்ச் 1) முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், குறிப்பிடும்படியான தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக தென்னிந்திய திரையுலகைச் சார்ந்த ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் ஒட்டு மொத்தமாக ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த முடிவுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என  முடிவெடுத்துள்ளது. திரையரங்குகள் வழக்கம் போல் இயங்கும் எனவும், புதுப் படங்களைத் தருபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து திரையிடப்படும். புதுப் படங்கள் கிடைக்காத பட்சத்தில் எங்களிடம் உரிமையில் இருக்கும் படங்களைத் திரையிடுவோம். இல்லையெனில் மாற்று மொழிப் படங்கள் மற்றும் பழைய படங்களைத் திரையிடுவோம் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு விநியோகஸ்தர்கள் சங்கமும் ஆதரவு அளித்துள்ளது.

தமிழ்நாட்டைப் போல ஆந்திரா, தெலங்கானாவிலும் வேலை நிறுத்தம் அமலில் உள்ளது. அங்கு தமிழகம் போலில்லாமல் திரையரங்குகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. நாளை முதல் ஆந்திரா, தெலங்கானாவில் திரையரங்குகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தணிக்கையான படங்கள் வெளியாக எவ்வித தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ள இரு மாநில திரையுலகமும் முடிவெடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com