ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல?

தமிழில் அறிமுகமாகும் எந்த புதுமுக நடிகையை வேண்டுமானாலும் ’நீங்கள் நடிக்க ஆசைப்படும் நடிகர் யார்? என்று கேட்டுப் பாருங்கள். ஒரு நொடி கூட யோசிக்காமல்,  ‘ஒரே ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க 
ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல?

தமிழில் நடிக்கத் தெரிந்த நடிகைகளை பட்டியலிட்டால் அதில் ஈஸ்வரி ராவுக்கு நிச்சயம் இடம் தரலாம். நடித்தது வெகு சில திரைப்படங்களே என்றாலும் தன் வரையில் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை திருப்திகரமாகச் செய்து முடிக்கக் கூடிய நடிகைகள் லிஸ்டில் இவருண்டு. தமிழில் நாளைய தீர்ப்பில் விஜயின் இரண்டாம் நாயகியாக அறிமுகமாகியிருந்தாலும் இவருக்கு ஓரளவுக்கு பெயர் ஈட்டித் தந்த திரைப்படமென்றால் அது பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ராமன் அப்துல்லா. ஈஸ்வரி ராவின் நடிப்புத் திறனை சற்றேனும் பயன்படுத்திய திரைப்படம் என்றால் அது இது ஒன்று மட்டுமே. அழகும், இளமையும், திறமையும் இருந்தும் ஏனோ 90 களின் இயக்குனர்கள் ஈஸ்வரியின் நடிப்பைச் சரியாகப் பொருட்படுத்தவே இல்லை. சிம்மராசி, குருபார்வை, அப்பு, குட்டி, தவசி, சரவணா என்று துண்டு, துக்கடா கேரக்டர்களிலேயே வந்து போனார். நடுவில் விரும்புகிறேன் என்றொரு திரைப்படத்தில் ஓரளவுக்கு நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள வேடமொன்றில் தோன்றி தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார். 90 களில் இவருடன் இணைந்து அறிமுகமானவர்களில் கீர்த்தனா, ஸ்வாதி, யுவராணி, மகேஸ்வரி எனப் பலருக்கும் கூட இவரைப் போலவே நடிப்புத் திறனை வெளிக்காட்டும் விதமான பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் இவர்கள் அனைவருமே அப்போது தான் தமிழ்நாட்டில் சன், ராஜ், விஜய், ஜெயா தொலைக்காட்சிகளின் லேசாகப் பரவத் தொடங்கி இருந்த மெகா சீரியல் கலாச்சாரத்தில் ஐக்கியமாகி விட்டார்கள். ஈஸ்வரி ராவ் ஏக்தா கபூரின் பாலஜி டெலிஃபிலிம்ஸ் வழங்கிய ‘கஸ்தூரி’ சீரியலில் பிரதான நடிகையாகப் பல ஆண்டுகள் நடித்தார். பிறகென்ன காரணத்தாலோ இவரை நீக்கி விட்டு வேறொரு நடிகை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து முடித்தார்.

அந்த ஈஸ்வரி ராவ் தான் இப்போது காலாவில் ரஜினியின் நாயகி.

தமிழில் அறிமுகமாகும் எந்த புதுமுக நடிகையை வேண்டுமானாலும் ’நீங்கள் நடிக்க ஆசைப்படும் நடிகர் யார்? என்று கேட்டுப் பாருங்கள். ஒரு நொடி கூட யோசிக்காமல்,  ‘ஒரே ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும்’ என்று சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஈஸ்வரி ராவுக்கும் நடிக்க வந்த புதிதில் அந்த ஆசை இருந்திருக்கலாம். அவரும் தனது ஆரம்ப காலப் பேட்டிகளில் அப்படிச் சொன்னாரோ என்னவோ? இன்று அந்தக் கனவு நனவாகியிருக்கிறது.

காலா டீஸரில் எல்லோரும் ரஜினியை மட்டுமே பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் இவரையும் பார்க்கலாம் என்று தான் தோன்றுகிறது. மெட்ராஸ் திரைப்படம் முதல் ரஞ்சித் தனது எல்லாப் படங்களிலும் 
சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் ஒரு ஸ்ட்ராங்கான பெண் கதாபாத்திரத்தை முன்வைப்பது அவரது படங்களுக்கான அழகியலைக் கூட்டக் கூடிய விதமாக இருப்பது ஆறுதலான விஷயம். அழகான கோடம்பாக்கம் டைப் காட்டன் புடவைகளை உடுத்திக் கொண்டு, கழுத்தில் முகப்பு வைத்த தாலிச்சங்கிலி மின்ன அசால்ட்டாகப் பேசிக் கொண்டு நம்மைக் கடக்கும் அந்தப்பெண் கதாபாத்திரங்கள் ஏதோ ஒருவிதத்தில் நாம் கண்டு ரசித்துக் கடந்த நிஜவாழ்வின் வாயாடிப் பெண்களோடு ஒத்துப் போகிறார்கள். அந்த வகையில் காலாவின் ஈஸ்வரி  ராவ் ஏமாற்றமாட்டார் என்று நம்பலாம். அவருக்கு போதுமான அளவில் தனது நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பின் அவர் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம். 

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நீ, நான் என நேற்றுப் பிறந்து இன்று அரிதாரம் பூசிக் கொள்ளும் இளம் நடிகைகளே போட்டி போட்டுக் கொண்டிருக்கையில்... நிஜத்தில் தாத்தாவாக ஆனபின்னும் படத்தில் நடுத்தர வயதுள்ளவராக நடிக்கும் ரஜினிக்கு வழக்கமாகச் சில பிரபல இயக்குனர்கள் முடிவு செய்வதைப் போல ராதிகா, அம்பிகா, ராதா, மீனா, ரோஜா, குஷ்பூ, என்று ஏற்கனவே லைம்லைட்டில் மின்னிக் கொண்டிருக்கும் பிரபல முன்னாள் கதாநாயகிகள் எவரையாவது ஜோடியாக்காமல் தமிழ் ரசிகர்கள் காணாமல் போய் விட்டார் எனக் கருதிய ஈஸ்வரி ராவைத் தேர்வு செய்தது பாராட்டுக்குரிய விஷயம்.

மெட்ராஸில் அம்மா கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வழங்கிய ரமா பிறகு என்ன ஆனாரெனத் தெரியவில்லை. இளம் இயக்குனர்கள் கவனிப்பார்களா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com