தமிழில் பேச விரும்பும் தெலுங்கு ஹீரோ!

வடக்கத்திய நடிகைகளைப் போல அர்த்தம் புரியாமல் தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பேசி தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதைக் காட்டிலும் இது எத்தனையோ மடங்கு உத்தமமான காரியம் தான்.
தமிழில் பேச விரும்பும் தெலுங்கு ஹீரோ!

அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவிற்கு அந்தப் படம் இந்தியா மட்டுமல்லாது இந்தியா தாண்டியும் பரவலான நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழில் அர்ஜூன் ரெட்டி ரீமேக் ஆகவிருப்பதாகத் தகவல். அதில் சீயான் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரிஜினல் அர்ஜூன் ரெட்டிக்கு துருவ் நிகர் செய்வாரா? எனப் படம் வெளிவந்தால் தெரியும். இதற்கிடையில் அர்ஜூன் ரெட்டியால் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் விஜய் தேவரகொண்டாவுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன என்பது உபரித் தகவல். இவர் நாயகனாக நடித்தது இதுவரை இரண்டே இரண்டு திரைப்படங்கள் மட்டுமே! இரண்டுமே வெற்றிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்குத் திரைப்படங்களின் வழக்கமான ஃபார்மேட்டை உடைக்கும் விதத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எனவும் மீடியாக்களிடம் பாராட்டுப் பெற்றவை. 

அவற்றின் நாயகனான விஜய் தேவரகொண்டா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிப் படமாக வெளிவரவிருக்கும் புதிய அரசியல் த்ரில்லர் திரைப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அத்திரைப்படத்திற்கான லாஞ்சிங் நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் திருநெல்வேலித் தமிழ், கோவைத்தமிழ், மதுரைத் தமிழ், சென்னைத் தமிழ் எனப் பல்வேறு தமிழ்கள் இருப்பது போல ஆந்திராவிலும் தெலுங்கான தெலுங்கு, ராயலசீமா தெலுங்கு, விஜயவாடா தெலுங்கு எனப் பலவிதமான தெலுங்கு உண்டு. அதில் விஜய் தேவரகொண்டா பேசி நடிப்பது தெலுங்கானா தெலுங்கு என்கிறார்கள் அக்கட பூமியில். தற்போது தமிழிலும் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தனது அடுத்த படத்திற்கான தமிழ் டப்பிங்கை தானே பேசி நடிக்க விரும்புகிறாராம் விஜய். இதற்காகப் பிரத்யேகமாக தமிழ் ஆசிரியர் வைத்து தமிழ் கற்றுக் கொண்டு பரீட்சை எல்லாம் எழுதி பாஸ் ஆகப் போகிறாராம். அதன் பின் தனது தமிழ்ப் படத்திற்கான டப்பிங்கை தானே பேசுவார் என்கிறார்கள். பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான். வடக்கத்திய நடிகைகளைப் போல அர்த்தம் புரியாமல் தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பேசி தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதைக் காட்டிலும் இது எத்தனையோ மடங்கு உத்தமமான காரியம் தான். அதையும் ஒரு பிஸியான தெலுங்கு நடிகர் செய்தால் அச்செயல் பிற நடிகர், நடிகைகளுக்கு முன்னுதாரணமாகவும் ஆகக்கூடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com