உலக சினிமா விருதுகளை அள்ளிக் குவித்த தென் கொரிய இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

உலக சினிமா ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கும் செய்திதான். காரணம் அவர்கள் பெரிதும் கொண்டாடும் இயக்குநரான கிம் கி டுக்
உலக சினிமா விருதுகளை அள்ளிக் குவித்த தென் கொரிய இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

உலக சினிமா ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கும் செய்திதான். காரணம் அவர்கள் பெரிதும் கொண்டாடும் இயக்குநரான கிம் கி டுக் மீது அவர் படமொன்றில் நடித்த (பெயரை வெளிப்படுத்த விரும்பாத) ஒரு நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார். இச்செய்தி தென் கொரிய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

புலனாய்வுச் செய்திகளை வழங்கும் பிடி நோட்பேட் (PD Notepad) என்ற தொலைக்காட்சித் தொடர் பெண்களுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு வருபவோரை வெளிச்சம் காட்டி வருகிறது. செய்வாய்கிழமை (6.3.2018) அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் கிம் கி டுக் மற்றும் கொரிய கதாநாயகன் ஜோ ஜெ ஹ்யூன் ஆகியோர் மீது நடிகை ஒருவர் தன்னை பலமுறை கற்பழித்ததாக புகார் அளித்துள்ளார்.

2013-ம் ஆண்டு கிம் கி டுக் படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது, அந்த நடிகையை பலமுறை வற்புறுத்தி வன்கலவியில் ஈடுபட்டார் கிம் கி டுக். படப்பிடிப்புக்காக கிராமப் புறத்தில் தங்கியிருந்த அச்சமயத்தில் நடிகையின் உதவிக்கு யாரும் வரவில்லை. தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஹோட்டல் அறைக்கு கிம் கி டுக், நடிகர் ஜோ மற்றும் ஜோவின் மேலாளர் ஆகிய மூவரும் அடிக்கடி வருகை தந்து தன்னை வற்புறுத்தி பலாத்காரம் செய்தார்கள் என்று அந்த நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜோவின் மீது அண்மையில் மற்றொரு நடிகை பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்த, தன் தவறுக்கு ஜோ ஜெ ஹ்யூன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது பிப்ரவரி மாதம் கொரிய ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகியது. இந்நிலையில் மீண்டும் அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு எனும் போது அவர் இதுகுறித்து எதுவும் கூறாத நிலையில் உள்ளார். 

கிம் கி டுக்கின் மீது இந்த நடிகையைத் தவிர வேறு சில நடிகைகளும் புகார் அளித்துள்ளனர். கிம் கி டுக்கின் படத்தில் நடிக்க ஒப்பந்தமான அந்த நடிகையை சந்திக்க இரவில் போனாராம் கிம். ஹோட்டலில் தங்கியிருந்த அந்த நடிகை தப்பித்தால் போதும் என்று கழிவறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டு அதன் பின் கிம் அங்கிருந்து வெளியேறியவுடன் தான் தப்பித்தாராம். அதன்பின் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போலவே வேறு சில நடிகைகளும் தன்னிடம் கிம் தொலைபேசியில் பாலியல் நோக்கத்துடன் வசைமொழிகளில் கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் என்றும் கூறினார்கள். கிம் கி டுக் பிரபல இயக்குநராக இருப்பதால் அவரை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டது, மனத்துக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருந்தோம் என்று அந்த நடிகைகள் இச்சம்பவங்களைக் குறிப்பிடும்போது வேதனையுடன் குறிப்பிட்டார்கள்.

தங்களுடைய கீழ்த்தரமான செயல்களால் நடிக்க வந்த பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் இயக்குநர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக்கையும் இதே போன்ற ஒரு செயலைச் செய்துள்ளார் என அவர் அறிமுகப்படுத்திய நடிகையான டிப்பி ஹீட்ரென் (Tippi Hedren) ஹிட்ச்காக் இறந்து பல ஆண்டுகள் கழித்து, ஹிட்ச்காக் தன்னை பலவந்தப்படுத்திய சம்பவத்தை ஒரு பேட்டியில் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தினார். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எல்லா திரையுலகிலும் நடிகைகளை கவர்ச்சிக்காகவும் தங்களுடைய இச்சைகளை தணித்துக் கொள்ளவும் பயன்படுத்தி வரும் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

நடிகைகள் முன்பு போல் தங்களுக்கு நடந்த கொடுமைகளை எதிர்த்து எதுவும் சொல்லாதவர்களாக இருப்பதில்லை. #Metoo என்ற ஆஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் இணையும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது அவர்களை சிறுமைப்படுத்திய இயக்குநர்களுக்கு சிறிதளவு பயத்தையாவது ஏற்படுத்திவருவது உண்மைதான். உலகின் முன் இவர்கள் தலைகுனிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் கிம் கி டுக் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் கூறியது, ‘என்னுடைய சுய விருப்பங்கங்களை சினிமா மூலம் நான் நிறைவேற்றிக் கொள்வதில்லை. அதிகபட்சமாக ஒரு நடிகையை அத்துமீறி நான் தொட்டிருப்பேன் என்றால் அது ஒரு முத்தத்துடன் முடிந்துவிடும். அதற்கு மேல் ஒரு பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் யாரையும் தொந்திரவு படுத்தமாட்டேன். எனக்குத் தேவைபடும் சமயங்களில் பரஸ்பர ஒப்புதலுடன் தான் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளேன். திருமணமானவன் என்ற முறையில் அதை இப்போது அவமானமாகக் கருதுகிறேன்’. என்று கூறியுள்ளார்.

மனிதன் எப்போதுமே தனது சக மனிதனிடம் நூறு சதவீத நேர்மையையும், நெறித்தவறாமையையும் எதிர்பார்க்கிறான். ஆனால், நம்மில் ஒருவர்கூட முழுமையான நேர்மையாளர்கள் கிடையாது. சந்தர்ப்பமும், நாம் வாழும் சூழ்நிலையுமே நமக்கான நெறியை வகுக்கின்றது. "We all go a little mad sometimes". என்று ஹிட்ச்காக்கின் சைக்கோ எனும் படத்தில் நடித்த அந்தோணி பெர்கின்ஸ் கூறியிருக்கிறார். இயக்குநர்கள் தமது படைப்புக்கள் மூலம் வெளிப்படுத்தும் விஷயங்களுக்கு எதிரான செயல்பாடுகளை கொண்டிருக்கும் போது அவர்களது படைப்பின் மீதும் அவர்களின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com