40 படங்கள் ரிலீஸாக வழியில்லாமல் தவிப்பு: என்ன நடக்கிறது தமிழ்த் திரையுலகில்?

நேற்று தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. மார்ச் 1 முதல் இந்த நிலைமைதான் நீடிக்கிறது. ஆனால்...
40 படங்கள் ரிலீஸாக வழியில்லாமல் தவிப்பு: என்ன நடக்கிறது தமிழ்த் திரையுலகில்?

டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராகவும், உள்ளாட்சி கேளிக்கை வரிக்கு எதிராகவும், தமிழ்த் திரையுலகம் நடத்திவரும் போராட்டத்தால், தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் திரையரங்குகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

டிஜிட்டல் ஒளிபரப்பு, உள்ளாட்சி சேவை வரி விதிப்புக்கு எதிராக, தமிழ்த் திரை உலகினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, தமிழக அரசு மற்றும் திரைத் துறைனர் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இறுதிமுடிவு எட்டப்படவில்லை. இருப்பினும் தமிழ் திரை அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி வந்தன. ஆனால். தமிழக அரசின் சார்பில், பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுக்கப்படாததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், குறிப்பிடும்படியாக,
தமிழ்திரைப்படங்கள் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழக அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரியை எதிர்த்து, தமிழ் திரையரங்க உரிமையாளர் சங்கம் வெள்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தது. அதன்படி , தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் திரையரங்குகள் மூடப்பட்டன. ஆனால், சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஏற்கெனவே அறிவித்தப்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் திரையரங்குகள் இயங்கின.

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக, கடந்த 1 -ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடக் கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்தின்படி, கடந்த மார்ச் 1 -ஆம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் மார்ச் 16 -ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 'பெப்சி' அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்துள்ளது. மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். இதனால் தமிழ்த்திரையுலகில் இருமுனைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுக்க உள்ள 950 திரையரங்குகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. எனினும் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள 146 திரையரங்குகளில் படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகின்றன. அதேபோல தமிழ்நாட்டில் திரைப்படப் படப்பிடிப்புகளும் எதுவும் தற்போது நடைபெறவில்லை. தமிழகத்துக்கு வெளியே மார்ச் 23 வரை படப்பிடிப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

திரையரங்கங்களுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீத கேளிக்கை வரியை குறைக்க வேண்டும். ஏசி திரையரங்கத்துக்கு பராமரிப்பு கட்டணமாக ரூ.5-ம், ஏ.சி. இல்லாத திரையரங்கிற்கு ரூ.3-ம் உயர்த்திக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக தினமும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. மார்ச் 1 முதல் இந்த நிலைமைதான் நீடிக்கிறது. ஆனால் நேற்று கிரிங்கோ என்கிற ஆங்கிலப் படமும் ரெயிட் என்கிற ஹிந்திப் படமும் கிர்ராக் பார்ட்டி என்கிற தெலுங்குப் படமும் பூமரம், இரா என இரு மலையாளப் படங்களும் சென்னையில் வெளியாகியுள்ளன. கலகலப்பு 2 மற்றும் நாச்சியார் என சமீபத்தில் வெளியான இரு தமிழ்ப் படங்கள் மட்டுமே அதிகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. 

இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 40 படங்கள் தணிக்கையாகி வெளிவரத் தயாராக உள்ளன. இதுதவிர 25 படங்கள் இந்த மாத இறுதிக்குள் தணிக்கைச் சான்றிதழைப் பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வேலைநிறுத்தம் இந்த மாத இறுதிவரை நீடித்தால் 65 புதிய படங்கள் வெளிவர வழியில்லாமல் போகும். அதன் தயாரிப்பாளர்களுக்கும் பலத்த நஷ்டம் ஏற்படும்.

இதனால் இந்த வேலைநிறுத்தத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அடுத்த வாரம் இதற்குத் தீர்வு காணாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என பலரும் அஞ்சுகிறார்கள். இதனால் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது தமிழ்த் திரையுலகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com