இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலை அள்ளிய பத்மாவத்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்தியாவில் ராஜஸ்தான், கோவா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியாகாத நிலையிலும் இந்த வசூல் சாதனை...
இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலை அள்ளிய பத்மாவத்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

50 நாள்கள் ஓடியது மட்டுமல்லாமல் ரூ. 300 கோடி வசூலையும் தொட்டுள்ளது பத்மாவத் படம். இதன்மூலம் ஹிந்திப் படங்களில் இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலித்த ஏழாவது படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

பாலிவுட் இயக்குர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில், பல்வேறு தடைகளைக் கடந்து, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இப்போராட்டங்களின் எதிரொலியாக, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் 'பத்மாவத்' படத்தை திரையிடமாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள்
சங்கம் அறிவித்தது.

எனினும் சர்ச்சைகளால் மிகுந்த கவனத்துக்கு ஆளான பத்மாவத் படம் மகத்தான வசூலைக் கண்டுள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், கோவா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியாகாத நிலையிலும் இந்த வசூல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான பத்மாவத், மூன்று மொழிகளிலும் சேர்த்து முதல் வாரத்தில் ரூ. 167 கோடியும் அடுத்த வாரத்தில் ரூ. 69 கோடியும் மூன்றாவது வாரத்தில் ரூ. 32 கோடியும் வசூலித்தது. கடைசியாக தனது 50-வது நாளுக்குப் பிறகு ரூ. 300 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.

பத்மாவத் இந்திய வசூல் - 300.26 கோடி

முதல் வாரம்: ரூ. 166.50 கோடி
2-வது வாரம்: ரூ. 69.50 கோடி
3-வது வாரம்: ரூ. 31.75 கோடி
4-வது வாரம்: ரூ. 14.17 கோடி
5-வது வாரம்: ரூ. 7.54 கோடி
6-வது வாரம்: ரூ. 6.98 கோடி
7-வது வாரம்: ரூ. 3.82 கோடி

இந்தியாவில் ரூ. 300 கோடி வசூல் கண்ட படங்கள்

பிகே (2014)
பஜ்ரங்கி பைஜான் (2015)
சுல்தான் (2016)
டங்கல் (2016)
டைகர் ஜிந்தாஹை (2017)
பாகுபலி 2 (2017)
பத்மாவத் (2018)

இந்தியாவில் ரூ. 500 கோடி வசூல் கண்ட ஒரே படம் - பாகுபலி 2-வின் ஹிந்திப் பதிப்பு. அதன் வசூல் இன்னும் முறியடிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com