கெளதம் மேனன் - கார்த்திக் நரேன் இடையே விரிசல்: காரணம் என்ன?

இன்னொரு இளம் இயக்குநருக்கு இதுபோன்று செய்துவிடாதீர்கள். வேதனையைத் தருகிறது என்று ட்வீட் செய்து பரபரப்பை உண்டு செய்தார்...
கெளதம் மேனன் - கார்த்திக் நரேன் இடையே விரிசல்: காரணம் என்ன?

துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படம் - நரகாசுரன். அரவிந்த சாமி, இந்திரஜித், சுந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - யோகன். கெளதம் மேனன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.

2-வது படம் இன்னும் வெளிவராத நிலையில் 3-வது படத்துக்குத் தயாராகிவிட்டார் கார்த்திக் நரேன். அப்படத்துக்கு நாடக மேடை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுவரை ஒருவரையொருவர் புகழ்ந்த வந்த கெளதம் மேனனும் கார்த்திக் நரேனும் திடீரென சமூகவலைத்தளத்தில் ஒருவரையொருவர் தாக்கிப் பதிவுகளை எழுதியுள்ளார்கள். இவ்விருவரிடையே ஏற்பட்டுள்ள விரிசல் கோலிவிட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் ஆரம்பித்து வைத்தவர் கார்த்திக் நரேன். அவர் ட்விட்டரில் கூறியதாவது: ஒருவர் மீது நீங்கள் வைக்கும் தவறான நம்பிக்கை உங்களை அழிக்கவும் செய்யும். அந்த நம்பிக்கை மாறாக ஒருவர் நடந்துகொள்வதற்கு முன்பு யோசித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் செய்யாத தவறுக்காக உங்களுடைய கனவுகள் சின்னாபின்னமாக்கப்படுவதைக் காண நேரிடும் என்று எழுதி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்

டியர் சிஎஸ்கே காணொளியைப் பாராட்டும் ட்வீட்டில் கார்த்திக் நரேனை மறைமுகமாக விமரிசித்தார் கெளதம் மேனன். அவர் ட்வீட்டில் கூறியதாவது: இளம் இயக்குநர்கள் சிலர், தங்களுடைய கனவுகள் சின்னாபின்னமாக்கப்படுவதை வெளிப்படுத்துகிறார்கள். இங்கே ஓர் இளமையான அணி - பெண்கள், கிரிக்கெட், சிஎஸ்கே குறித்த அற்புதமான குறும்படத்தை எடுத்துள்ளார்கள். அருமையான படைப்பு என்று பாராட்டியுள்ளார். 

கடந்த ட்வீட்டில் கெளதம் மேனனின் பெயரைக் குறிப்பிடாமல் ட்வீட் செய்த கார்த்திக் நரேன், இந்தமுறை கெளதம் மேனனின் ட்வீட்டுக்கு நேரடியாகவே பதிலளித்தார். பலருடைய எதிர்ப்புகளைத் தாண்டி உங்கள் மீது நம்பிக்கை வைத்து இணைந்து படத்தை இயக்கினேன். கடைசியில் எங்களைக் குப்பையாக மதித்து, சொந்தமாக முதலீடு செய்து படத்தைத் தயாரிக்கும்படி செய்தீர்கள். பிரச்னையிலிருந்து ஓடி ஒளியாமல் புலம்பியபடி எதிர்கொள்வது மேலானது. இன்னொரு இளம் இயக்குநருக்கு இதுபோன்று செய்துவிடாதீர்கள். வேதனையைத் தருகிறது என்று ட்வீட் செய்து பரபரப்பை உண்டு செய்தார். 

இதன்பிறகு இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எதனால் இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டது என்று கார்த்திக் நரேன் கூறியதாவது: 

கெளதம் மேனன் சாருடன் இணைந்து நரகாசுரன் படத்தை இயக்க முன்வந்தபோது பலரும் என் முடிவை மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் கெளதம் மேனன் சார் மீது எனக்கு மதிப்பும்
மரியாதையும் இருந்தது. எனவே படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நரகாசுரன் படத்துடன் கெளதம் மேனனின் ஒன்றாக எண்டர்டயிண்மெண்ட் நிறுவனம் இணைந்திருப்பதாக ஆவணங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், அப்படத்துக்காக அவர் எதுவும் முதலீடு செய்யவில்லை. என் படத்துக்காகக் கடன் வாங்கி அதை துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்காகச் செலவழித்தார்.

என் படத்துக்காக ஒன்றாக நிறுவனம் எதுவும் செலவளிக்கவில்லை. இதனால் துருவங்கள் பதினாறு படத்தில் சம்பாதித்த அனைத்து பணத்தையும் நரகாசுரன் படத்துக்காகச் செலவழிக்கவேண்டியிருந்தது. நரகாசுரன் படத்தை நானும் பத்ரி கஸ்தூரியும் தயாரித்தாலும் கெளதம் மேனனுக்குக் கடன் வழங்கிய ஃபைனான்சியர்கள் எங்கள் படத்தைக் குறி வைத்துள்ளார்கள். இதுகுறித்து கெளதம் மேனன் சாரிடம் கேட்டபோது அவர் எங்கள் தொலைப்பேசி அழைப்பை ஏற்கவில்லை. எங்களுக்குப் பதில் அளிக்கவேண்டும் என்றும் அவர் எண்ணவில்லை. பூனைக்கு யாராவது மணியடிக்கவேண்டும் என்பதற்காக அதுபோல ட்வீட் செய்தேன். இந்தப் படத்துக்காக என்னுடைய பணத்தைச் செலவு செய்ததால் அடுத்தப் படத்தை ஆரம்பிக்க முடியாமல் உள்ளேன் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com