கார்த்திக் நரேன் மற்றும் அனைவருக்கும்...: மன்னிப்பும் விளக்கமும் அளித்துள்ள இயக்குநர் கெளதம் மேனன்!

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்துடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. கதையைக் கேட்டு...
கார்த்திக் நரேன் மற்றும் அனைவருக்கும்...: மன்னிப்பும் விளக்கமும் அளித்துள்ள இயக்குநர் கெளதம் மேனன்!

துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படம் - நரகாசுரன். அரவிந்த சாமி, இந்திரஜித், சுந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - யோகன். கெளதம் மேனன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.

2-வது படம் இன்னும் வெளிவராத நிலையில் 3-வது படத்துக்குத் தயாராகிவிட்டார் கார்த்திக் நரேன். அப்படத்துக்கு நாடக மேடை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுவரை ஒருவரையொருவர் புகழ்ந்த வந்த கெளதம் மேனனும் கார்த்திக் நரேனும் திடீரென சமூகவலைத்தளத்தில் ஒருவரையொருவர் தாக்கிப் பதிவுகளை எழுதினார்கள். இவ்விருவரிடையே ஏற்பட்டுள்ள விரிசல் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கெளதம் மேனன் சாருடன் இணைந்து நரகாசுரன் படத்தை இயக்க முன்வந்தபோது பலரும் என் முடிவை மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் கெளதம் மேனன் சார் மீது எனக்கு மதிப்பும்
மரியாதையும் இருந்தது. எனவே படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நரகாசுரன் படத்துடன் கெளதம் மேனனின் ஒன்றாக எண்டர்டயிண்மெண்ட் நிறுவனம் இணைந்திருப்பதாக ஆவணங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், அப்படத்துக்காக அவர் எதுவும் முதலீடு செய்யவில்லை. என் படத்துக்காகக் கடன் வாங்கி அதை துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்காகச் செலவழித்தார். என் படத்துக்காக ஒன்றாக நிறுவனம் எதுவும் செலவளிக்கவில்லை. இதனால் துருவங்கள் பதினாறு படத்தில் சம்பாதித்த அனைத்து பணத்தையும் நரகாசுரன் படத்துக்காகச் செலவழிக்க வேண்டியிருந்தது. நரகாசுரன் படத்தை நானும் பத்ரி கஸ்தூரியும் தயாரித்தாலும் கெளதம் மேனனுக்குக் கடன் வழங்கிய ஃபைனான்சியர்கள் எங்கள் படத்தைக் குறி வைத்துள்ளார்கள். இதுகுறித்து கெளதம் மேனன் சாரிடம் கேட்டபோது அவர் எங்கள் தொலைப்பேசி அழைப்பை ஏற்கவில்லை. எங்களுக்குப் பதில் அளிக்கவேண்டும் என்றும் அவர் எண்ணவில்லை. பூனைக்கு யாராவது மணியடிக்கவேண்டும் என்பதற்காக அதுபோல ட்வீட் செய்தேன். இந்தப் படத்துக்காக என்னுடைய பணத்தைச் செலவு செய்ததால் அடுத்தப் படத்தை ஆரம்பிக்க முடியாமல் உள்ளேன் என்று கெளதம் மேனனுக்கு எதிராகப் பேட்டியளித்தார் கார்த்திக் நரேன். கெளதம் மேனனும் பதிலுக்கு ட்விட்டர் மூலமாக மறைமுகமாக விமரிசித்தார் கெளதம் மேனன்.

இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார். ட்விட்டரில் அவர் அளித்துள்ள விளக்கம்:

இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர என்னிடமிருந்து விளக்கம்.

கார்த்திக் மற்றும் அனைவருக்கும்...

கார்த்திக் நரேனின் ட்வீட் என்னை வேதனைக்குள்ளாக்கியது. அதுகுறித்து ஊடகங்களிலிருந்து தொடந்து அழைப்பு வந்ததால் அதனால் வேதனையடைந்தேன். அதனால்தான் என் பதிலை ட்விட்டரில் தெரிவித்தேன். அதை நான் செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். அதற்காக கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

நரகாசுரன் படப்பணிகளில் கார்த்திக்குக்கு எல்லாவிதமான சுதந்தரங்களும் அளிக்கப்பட்டன. அதிகச் சம்பளத்துக்கு அவர் கேட்ட நடிகர்களை அழைத்து வந்தோம். மசிடோனியா சென்று படத்தின் பின்னணி இசை வேலைகள் நடந்தன. என் மூலமாக வந்த மூதலீட்டாளர்களின் வழியாகப் படத்துக்கு நிறைய செலவு செய்துள்ளோம். இதன் வியாபாரத்தைக் கொண்டு இதைவிடவும் 7 மடங்குப் பெரிய படமான துருவ நட்சத்திரம் படத்துக்குச் செலவு செய்திட முடியாது. அப்படத்தை வேறொருவர் தயாரிக்கிறார். நரகாசுரன் படத்தின் லாபத்தில் 50 சதவிகிதத்தை நான் கேட்கவில்லை. இந்தப் படத்தில் எனக்குப் பங்கு இல்லை என எனக்குத் தெரியும். நான் படத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கார்த்திக் நினைத்தால் சந்தோஷமாக அதைச் செய்வேன். ஏனெனில் அப்போது படத்தின் மீதான பொறுப்பு என்னிடம் இருக்காது. 

கார்த்திக்கின் பதற்றத்தையும் புலம்பலையும் புரிந்துகொள்கிறேன். பொறாமை பிடித்த மனிதர்களின் தவறான தகவல்களாலும் திரையுலககின் வணிகம் எப்படி இயங்குகிறது என்பது குறித்து அவருக்குத் தெரியாததாலும் உண்டானவை அந்த உணர்வுகள். படத்தின் வெளியீட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பரணில் வைப்பதற்காகப் படம் தயாரிக்கவில்லை. துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களுக்குப் பயணம் உண்டு. நடிகர்களின் கால்ஷீட் எப்போது கிடைக்கிறதோ அப்போதுதான் படப்பிடிப்பு நடத்துகிறோம்.  

துருவநட்சத்திரம் படத்துக்கு 70 நாள்களும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு 45 நாள்களும் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இரண்டிலும் பெரிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த வருடம் விரைவில் வெளியாகும். இரண்டு படங்களையும் வேறு நபர்கள் தயாரிக்கிறார்கள். இரண்டிலும் எவ்விதப் பிரச்னையும் இல்லை. 

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்துடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. கதையைக் கேட்டு அதை எஸ்கேப் ஆர்டிஸ் மதனுக்கு அனுப்பி வைத்தேன். நான் அப்படத்தின் தயாரிப்பாளர் அல்லர். பங்குதாரரும் அல்லர். படத்திலும் அதன் போஸ்டரிலும் என்னுடைய பெயர் இருக்கவேண்டும் என்று மதன் விரும்பினார். ஆனால் அதனுடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் இனி இல்லை. அதை நான் ஆரம்பித்துவைத்தேன். அவ்வளவுதான். அதற்காக போஸ்டரிலும் என் பெயர் இடம்பெறவேண்டியதில்லை. செல்வராகவன் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. அருமையாக உள்ள இந்தப் படமும் விரைவில் வெளியாகும். 

சமீபகாலமாக எந்தப் படமும் காணாத சிக்கல்களை ஒன்றும் நரகாசுரன் காணவில்லை. எல்லாத் தயாரிப்பாளர்களும் இதை எதிர்கொண்டுள்ளார்கள். ஒரு படக்குழு நன்றாக வேலை செய்கிறபோது அதைக் கீழே பிடித்து இழுக்க யாரோ ஒருவர் முயற்சி செய்வார். அதுதான் இது. படத்தின் வேலைகளை முடிப்பதற்கும் பட வெளியீட்டுக்கும் நாங்கள் திட்டங்கள் வைத்துள்ளோம். அடுத்தச் சில நாள்களில் எல்லாப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும். கார்த்திக் தன்னுடைய அடுத்தப் படத்தை ஆரம்பிப்பதற்கு நாங்கள் எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அவருக்கு எல்லாச் சுதந்தரமும் உண்டு. அவரும் அடுத்தப் பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். நரகாசுரன் படத்தைச் சரியான சமயத்தில் வெளியிடவேண்டும் என்று விரும்புகிறோம். முழுச் சம்பளத்தையும் அளிக்காததால் டப்பிங் பேச மறுத்த அரவிந்த் சாமி, அதற்கான தேவையைப் பூர்த்தி செய்தபிறகு விரைவில் அதன் பணிகளை முடிப்பார்.

எனக்கும் கார்த்திக்குக்கும் இடையிலான இந்தக் கருத்துவேறுபாடுகள் களையப்பட்டு விட்டன. படம் விரைவில் வெளிவருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com