விவசாயிகளும்-தயாரிப்பாளர்களும் ஒன்றுதான், வேலைநிறுத்தம் தொடரும்: விஷால் அறிவிப்பு

டிஜிட்டல் கட்டணம் தொடங்கி திரையரங்குகளில் வசூலிக்கப்படும் வாகன நிறுத்தக் கட்டணம் வரை அனைத்திலும் மாற்றம் வரும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என விஷால் தெரிவித்தார்.
விவசாயிகளும்-தயாரிப்பாளர்களும் ஒன்றுதான், வேலைநிறுத்தம் தொடரும்: விஷால் அறிவிப்பு

டிஜிட்டல் கட்டணம் தொடங்கி திரையரங்குகளில் வசூலிக்கப்படும் வாகன நிறுத்தக் கட்டணம் வரை அனைத்திலும் மாற்றம் வரும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை, வடபழனியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியதாவது:

தயாரிப்பாளர்களும், விவசாயிகளும் ஒன்றுதான். இன்று அனைத்து தயாரிப்பாளர்களும் கஷ்டத்தில் உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த வாரம் புதன்கிழமை அனுமதி கிடைத்தவுடன் பேரணியாகச் சென்று மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இப்பிரச்னையை தமிழக அரசு தீர்த்து வைக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது. மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பது எளிதாக இருக்க வேண்டும். பல கோடி ரூபாய்களில் எடுக்கப்படும் படங்களுக்கு எந்த விதத்திலும் லாபம் என்பது இல்லை.

டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக நடந்து வரும் வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமா உலகம் முடங்கியுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தைக் குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவி சாய்க்காத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்கள் ஒட்டு மொத்தமாக ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனையை முழுவதும் கணிணி மயமாக்க வேண்டும். வாகன நிறுத்தக் கட்டணத்தையும் குறைக்க வேண்டும். இப்படி அனைத்து விஷயங்களிலும் மாற்றம் வரும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com