'தல' போல வருமா? அட்டகாசம் ஆஸம் அஜித்தின் 47-வது பிறந்த நாள்!

கோலிவுட்டில் தல என்றால் அஜித் தான். இன்று அஜித் குமார் தனது 47-வது பிறந்த நாளை அதிக ஆர்ப்பாடங்கள் இன்றி கொண்டாடுகிறார்.
'தல' போல வருமா? அட்டகாசம் ஆஸம் அஜித்தின் 47-வது பிறந்த நாள்!

திரையில் ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு சரியான உதாரணம் அஜித். அந்தளவுக்கு ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் உள்ளவர் அவர். அதனால்தான் கோலிவுட்டில் தல என்றால் அஜித் என்கிறார்கள். இன்று அஜித் குமார் தனது 47-வது பிறந்த நாளை அதிக ஆர்ப்பாட்டங்கள் இன்றி தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார். இதற்கு மேலும் என்ன சாதிக்க முடியும் எனும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கும் அஜித்துக்கு, தென்னிந்திய திரையுலகில் தனியிடம் எப்போதும் உண்டு. தமிழர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் தல ரசிகர்கள் உள்ளனர் என்பது நிஜத்திலும் நிஜம்.

அஜித்தைப் பொருத்தவரையில், அவரது திரைப் பயணத்தில் ரிஸ்க் எடுக்க த் தயங்காதவர். எவ்வித கதாபாத்திரமும் தனக்கு சரியாக இருக்குமென நினைத்தால், ஏற்கத் துணிபவர். மேலும் மனத்தில் தோன்றியதை வெளிப்படையாகவும், நேரடியாகவும், துணிவாகப் பேசக் கூடியவர். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்பதுதான் அஜித்தின் வழக்கம். 

அவர் கதாபாத்திரங்கள் பல அழுத்தமான தடத்தைப் பதித்துள்ளன. வாலியில் இரட்டையராக நடித்ததும், வரலாறு படத்தில் டான்ஸராகவும், பவித்ராவில் கேன்சர் நோயாளியாகவும், மங்காத்தாவில் அதிரடி ஸ்டைலிஷ் வில்லனாகவும் நடித்து தன் கதாபாத்திரத்தை மெருகேற்றியிருப்பார்.

ஹைதராபாத்தில் பிறந்த அஜித்தின் அப்பா பாலக்காட்டு தமிழ் ஐயர், அம்மா கொல்கத்தாவைச் சேர்ந்த சிந்தி மொழிக்காரர். அமர்க்களம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஷாலினியை காதல் மணம் புரிந்தார் அஜித். இத்தம்பதிக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் விவேகம். ஹாலிவுட் படம் போன்ற வேகம் இத்திரைப்படத்தின் ஹைலைட். இந்தப் படத்துக்கு கலவையான விமரிசனம் கிடைத்தது. விவேகத்தைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமும் இயக்குநர் சிவாவின் கைவண்ணத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. விசுவாசம் என்ற அந்தப்  படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என அஜித்-சிவா கூட்டணி கோலிவுட்டில் அதகளம் புரிந்து வருகிறார்கள்.

படம் சூப்பர் ஹிட்டோ இல்லையோ ரசிகர்களைப் பொருத்தவரையில் அவர்களுக்கு அஜித் ட்ரேட் மார்க் ஸ்டைல் மற்றும் அஜித் ட்ரீட் கட்டாயம் உண்டு என்பது இப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பின் மூலம் தெரிந்து கொள்லலாம். விசுவாசம் இந்த ஆண்டு தீபாவளி அன்று ரிலீஸாகும் என்றனர் படக்குழுவினர். இந்நிலையில் அஜித்தின் பிறந்த நாளில் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

அஜித் குழந்தை நட்சத்திரமாகத் தான் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார் என்று பலருக்கு தெரியாது. கமல் ஹாசன், ஹ்ருத்திக் ரோஷன், அமீர் கான் போல, அஜித் குமாரும் குழந்தை நட்சத்திரமாகத் தான் திரைப்படங்களில் நடிக்க வந்தார். 1990-ம் ஆண்டு வெளியான 'என் வீடு என் கணவர்' எனும் திரைப்படத்தில் பதின் வயது அஜித்தை ஒரு பாடலில் காணலாம்.

1993-ம் ஆண்டு வெளியான அமராவதிதான் அஜித்தின் முதல் படம் என அனேகம் பேர் நினைக்கிறார்கள். ஆனால் அஜித் முதல் முதலில் நடித்தது பிரேம புஸ்தகம் எனும் தெலுங்குப் படத்தில்தான். அந்தப் படத்தின் இயக்குநர் கொல்லப்புடி சீனிவாசராவ் படப்பிடிப்பின் ஏழாவது தினமன்று விசாகப்பட்டினத்தில் ஷூட்டிங்கில் நடந்து கொண்டிருந்த போது, கடற்கரையில் நின்று கொண்டிருந்தார். ஒரு பெரிய அலை அவரை தாக்க, தவறி விழுந்து மரணமடைந்தார். நாற்பது தினங்களுக்குப் பிறகு பிரேம புஸ்தகம் என்ற அந்தப் படத்தை அவரின் அப்பாவும் இயக்குநருமான கொல்லப்புடி மாருதிராவ்தான் இயக்கி முடித்தார். தனது மகனுடைய நினைவாக ‘கொல்லப்புடி சீனிவாஸ் நினைவு விருது’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை ஒவ்வோரு ஆண்டும் வழங்கி வருகிறார் மாருதிராவ் என்பது கூடுதல் தகவல். அந்தப் படம் 1993-ம் ஆண்டுதான் வெளிவந்தது. அஜித் நடித்த ஒரே தெலுங்குப் படம் பிரேம புஸ்தகம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு டப்பிங்கில் குரல் கொடுத்தவர் விக்ரம். காரணம் அப்போது அஜித்துக்கு சரளமாக தமிழ் பேசத் தெரியாது. பாசமலர்கள் மற்றும் அமராவதி படங்களில் அஜித்தின் குரலாக ஒலித்தவர் சீயான் விக்ரம். அதன் பின் இருவரும் உல்லாசம் படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தனர்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான அசோகா திரைப்படத்தில் பாலிவுட் பாட்ஷாவான ஷாருக் கானுடன் நடித்தார் அஜித். அஜித் தென்னிந்திய பிரபல திரை நட்சத்திரம் என்றே தெரியாதாம் ஷாருக் கானுக்கு. அந்தளவுக்கு அடக்கமாகவும் தன் வேலையில் மட்டும் கவனமாகவும் இருந்து வந்துள்ளார் அஜித். அசோகாவில் அஜித் வில்லனாக நடித்திருப்பார். பின்னர் அஜித்தைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட ஷாருக், அஜித்தின் எளிமையை மனதாரப் புகழ்ந்து பேசினார்.

அஜித்தின் ஸ்பெஷாலிட்டி என்னவெனில் தன் சொந்த வாழ்க்கையிலும் சரி திரையுலக வாழ்க்கையிலும் சரி, உண்மையாக இருப்பவர். குடும்பத்தை பெரிதும் மதிப்பவர். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் மனைவி மட்டும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதையே பெரிதும் விரும்புவர். அஜித்தின் பிரியாணி அவரைப் போலவே புகழ் பெற்றது.

வீட்டில் ஓய்வாக இருக்கும் போது சமைப்பது, மனைவியுடன் சேர்ந்து டென்னிஸ் விளையாடுவது, குழந்தைகளின் பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற பொறுப்பான வேலைகளை செய்து குடும்பத்தினருடன் அந்யோன்யமாக இருப்பவர் அஜித். அவரது நீண்ட நாள் கனவான ஃபார்முலா 2 ரேஸில் பங்கேற்று தனது சொந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டவர். தனக்கான ப்ரைவஸியை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவர்.

நடிப்புக்காக வாழ்கிறேன், கலையை வளர்க்கவே என்னை அர்ப்பணிக்கிறேன் என்று போலியாக பெருமை பேசாமல், தன் போக்கில் நடித்து, அசலாக இருப்பதாலேயே அவர் இன்றும் என்றும் ரசிகர்களுக்கு 'தல'யாக விளங்குகிறார் என்றால் மிகையில்லை. #HBDThalaAjith என்று சமூக வலைதளங்களில் மாஸ் வைரலாகி வரும் அஜித் குமாருக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com