தேசிய விருது விழாவில் புதிய சர்ச்சை: 11 பேருக்கு மட்டும் விருது வழங்க குடியரசுத் தலைவர் முடிவெடுத்தது ஏன்?

குடியரசுத் தலைவர் 11 பேருக்கு மட்டும் விருது வழங்க முடிவெடுத்தது ஏன் என்கிற கேள்விக்கு...
தேசிய விருது விழாவில் புதிய சர்ச்சை: 11 பேருக்கு மட்டும் விருது வழங்க குடியரசுத் தலைவர் முடிவெடுத்தது ஏன்?

தேசியத் திரைப்பட விருது விழாவைப் புறக்கணிப்பதாக தமிழ் இயக்குநர் செழியன் உள்ளிட்ட 69 திரைக்கலைஞர்கள் அறிவித்துள்ளார்கள்.

65-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் தலைமையில் தேசிய திரைப்படக் குழுவைச் சேர்ந்த ஆராதனா பிரதான், உஷா கிரன் கான், அனந்த் விஜய் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, 2017-ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை வெளியிட்டனர். அதில் தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக அசாமி மொழியில் வெளியான 'வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' தேர்வானது. சிறந்த தமிழ் திரைப்படமாக 'டு லெட் ' தேர்வாகியுள்ளது. சிறந்த திரைப்பட பின்னணி இசை, பாடல் இசைமைப்புக்கான இரு விருதுகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பின்னணி பாடகருக்கான விருது க்கு கே.ஜே. ஜேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் தேர்வானார். இந்த முறை தமிழ்த் திரைப்படத் துறைக்கு நான்கு விருதுகள் மட்டுமே கிடைத்தன. 

இந்நிலையில் இன்று, தேசிய விருது பெற்ற கலைஞர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கவுள்ளார். ஆனால், குடியரசுத் தலைவர் 11 பேருக்கு மட்டுமே விருது வழங்குவார் என்றும் மீதமுள்ள விருதுகளை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்குவார் என்றும் திடீரென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேசிய விருதுகளை வென்ற கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 65 வருட மரபு மீறப்படுகிறது. தங்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்காவிட்டால் விருது வழங்கும் விழாவைப் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளார்கள். இது தொடர்பாக தமிழ் இயக்குநர் செழியன், பாகுபலி தயாரிப்பாளர் உள்ளிட்ட 69 திரைக்கலைஞர்களும் திரைப்பட விழாக்களின் இயக்குநரக அலுவலகத்துக்கும் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் 11 பேருக்கு மட்டும் விருது வழங்க முடிவெடுத்தது ஏன் என்கிற கேள்விக்கு குடியரசுத் தலைவரின் ஊடகச் செயலாளர் அசோக் மாலிக் ஒரு பேட்டியில் கூறியதாவது: கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியேற்ற நாள் முதல், குடியரசுத் தலைவர் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரத்துக்குக் குறைவாகவே நடைபெற்றுள்ளன. எல்லா விருது வழங்கும் நிகழ்விலும் அவர் முக்கிய விருதுகளை மட்டும் அளித்துவிட்டு விருது பெற்ற அனைவரிடமும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார். இந்த நடைமுறைதான் வழக்கத்தில் உள்ளது. இதுகுறித்து விழா அமைப்பாளர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிடும். சில விருது வழங்கும் விழாக்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விருது பெற்றிருப்பார்கள். அனைவருக்குமான விருதுகளைக் குடியரசுத் தலைவரே வழங்குவது சாத்தியமில்லை என்றார்.

ஆனால், கடந்த வருடம், இயக்குநர் கே.விஸ்வநாத் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து தேசிய விருதுகளையும் அவரே வழங்கினார். எனவே இந்தமுறையும் குடியரசுத் தலைவரே அனைவருக்கும் விருதுகளை வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com