சர்ச்சைகளுக்கு மத்தியில் வழங்கப்பட்ட தேசிய விருதுகள்!

விழாவின் கடைசியில் முக்கிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்...
சர்ச்சைகளுக்கு மத்தியில் வழங்கப்பட்ட தேசிய விருதுகள்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் தேசிய திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

65-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் தலைமையில் தேசிய திரைப்படக் குழுவைச் சேர்ந்த ஆராதனா பிரதான், உஷா கிரன் கான், அனந்த் விஜய் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, 2017-ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை வெளியிட்டனர். அதில் தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக அசாமி மொழியில் வெளியான 'வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' தேர்வானது. சிறந்த தமிழ் திரைப்படமாக 'டு லெட் ' தேர்வாகியுள்ளது. சிறந்த திரைப்பட பின்னணி இசை, பாடல் இசைமைப்புக்கான இரு விருதுகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பின்னணி பாடகருக்கான விருது க்கு கே.ஜே. ஜேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் தேர்வானார். இந்த முறை தமிழ்த் திரைப்படத் துறைக்கு நான்கு விருதுகள் மட்டுமே கிடைத்தன. 

இந்நிலையில் இன்று, தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் 11 பேருக்கு மட்டுமே விருது வழங்குவார் என்றும் மீதமுள்ள விருதுகளை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்குவார் என்கிற முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குத் தேசிய விருதுகளை வென்ற கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 65 வருட மரபு மீறப்படுகிறது. தங்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்காவிட்டால் விருது வழங்கும் விழாவைப் புறக்கணிப்போம் என்று பலர் அறிவித்தார்கள். இது தொடர்பாக தமிழ் இயக்குநர் செழியன் உள்ளிட்ட 69 திரைக்கலைஞர்களும் திரைப்பட விழாக்களின் இயக்குநரக அலுவலகத்துக்கும் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.

கடந்த வருடம், இயக்குநர் கே.விஸ்வநாத் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து தேசிய விருதுகளையும் அவரே வழங்கினார். எனவே இந்தமுறையும் குடியரசுத் தலைவரே அனைவருக்கும் விருதுகளை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் அரசின் முடிவை எதிர்த்து பல கலைஞர்கள் விருது வழங்கும் விழாவைப் புறக்கணித்தார்கள். இதனால் விழாவைப் புறக்கணித்த கலைஞர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. எனினும் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றார்கள்.

விழா ஆரம்பமானவுடன் அமைச்சர்கள் ஸ்மிருதி இரானியும் ராஜ்யவர்தன் ரத்தோரும் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள். விழா ஆரம்பமான ஒரு மணி நேரம் கழித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்தார். விழாவின் கடைசியில் முக்கிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதை வினோத் கண்ணாவின் மகனான அக்‌ஷய் கண்ணா, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com