வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள நடிகர்கள்

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன...
வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள நடிகர்கள்

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு ஒதுக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு (நீட்) மையங்களை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதியாக தெரிவித்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'நீட் தேர்வு நடைபெற குறைந்த கால அவகாசமே உள்ளதால், தேர்வு மையங்களை திடீரென மாற்ற முடியாது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், நிகழாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையங்களை திடீரென மாற்றினால் மாணவர்கள் குழப்பமடைவர். எனவே, தேர்வு மையங்களை மாற்றத் தேவையில்லை. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே சமயம், தமிழக மாணவர்கள் அடுத்த ஆண்டில் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவ நடிகர்கள் பிரசனா, அருள்நிதி ஆகியோர் முன்வந்துள்ளார்கள். 

நடிகர் அருள்நிதி ட்விட்டரில் கூறியதாவது: நானும் அக்ஸஸ் ஃபிலிமும் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதவுள்ள 20 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கத் தயார். தொடர்புக்கு - 9841777077 என்று கூறியுள்ளார்.

நடிகர் பிரச்சன்னா ட்விட்டரில் கூறியதாவது: நீட் தேர்வு எழுதவுள்ள 2 ஏழை மாணவர்களுக்கு அல்லது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பயணச் செலவுகளை நான் அளிக்கவுள்ளேன். இதுகுறித்த தகவல்களை எனக்கு அனுப்புங்கள். நான் பயணத்துக்கான டிக்கெட்டைப் பதிவு செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்ததாவது: நீட் பாலக்காடு , எர்ணாகுளம் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்கள் ஹால் டிக்கெட், பயணவிபரம் வாட்ஸப்-பில் அனுப்பவும் . தொடர்புக்கு - கஸ்தூரி, ஜெய் 9789895953.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com